ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி!

தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணில் கார அமில தன்மை 6.0 – 7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி., வரை இருப்பது வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச் ஆகிய மாதங்கள் விதைக்கும் காலம். எக்டேருக்கு 350 முதல் 400 கிராம் விதைகள் தேவை.

tomato

விதை நேர்த்தி: ஒரு எக்டேருக்கு தேவையான விதைகளை 40 கிராம் ‘அசோஸ்பைரில்லம்’ கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதை ஒரு மீட்டர் அகலம் உள்ள மேட்டுப்பாத்திகளில் 10 செ.மீ., வரிசை இடைவெளியில் விதைக்க வேண்டும். பின் மணல் கொண்டு மூடி விட வேண்டும்.

நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பின் பார்கள் அமைத்து 25 நாள் வயதுள்ள நாற்றுக்களை பார்களின் ஒரு பக்கத்தில் நட வேண்டும். நடுவதற்கு முன் இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

தக்காளி ரகங்கள்: கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பி.கே.எம். 1, பூசாரூபி, பையூர் 1, சி.ஓ.எல்.சி.ஆர்.எச். 3, அர்கா அப்ஜித், அர்கா அஹா, அர்கா அனான்யா ஆகிய ரகங்கள் உள்ளன. இவற்றை விதையின் ரகங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்: நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

ஊட்டச்சத்து மேலாண்மை: அடியுரமாக எக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 50 கிலோ இட வேண்டும். நட்ட 30ம் நாள் தழைச்சத்து 75 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும். நாற்று நட்ட 15ம் நாள் மற்றும் பூக்கும் தருணத்தில் ‘டிரைகோன்டால்’ 1 பி.பி.எம். என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனால் மகசூல் அதிகரிக்கும்.

பயிர் பாதுகாப்பு: காய்ப்புழு, புரோடீனியா புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி எக்டேருக்கு 12 எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். தாக்கப்பட்ட பழங்களில், வளர்ந்த புழுக்களை அழிக்க வேண்டும். ‘டிரைகோகிரம்மா’ என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டேருக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் பொருளாதார சேதநிலை அறிந்து விட வேண்டும்.
காய்ப்புழுவிற்கு என்.பி.வி. வைரஸ் கலவை தெளிக்க வேண்டும். புரோடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.
‘கார்போபியூரான்’ குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இட வேண்டும். ஒரு லிட்டர் புளுகுளோரலின் மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாக கலந்து நாற்று நடுவதற்கு முன் நிலத்தில் தெளித்து நீர்ப்பாய்ச்சி பின் நாற்றுக்களை நட வேண்டம்.
நாற்று நட்ட 30ம் நாள் ஒரு கைக்கிளை எடுக்க வேண்டும். விதை, நிலம் தயாரித்தல், நீர் நிர்வாகம், ஊட்டச்சத்து, களை கட்டுப்பாடு, பயிர் பாதுகாப்பு, நோய் தடுப்பு முறைகளை பின்பற்றினால் 135 நாட்களில் ஒரு எக்டேருக்கு 35 டன் பழங்கள் கிடைப்பது உறுதி.
– பூபதி, துணை இயக்குனர்,
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மதுரை,
தொடர்புக்கு : 04522532351

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி!

  1. mrs. priyanka hari krishnan says:

    ayya vanakkam engal ooru tiruvallur mavattam sunnambukulam ,
    engal suttru vattarathil mannu parisodanai mayyam engu ulladu?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *