தக்காளியில் இடைத்தரகர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி

ஒவ்வொரு ஆண்டும்  தக்காளி விவசாயிகள் விலை வீழ்ச்சி காரணமாக தக்காளியை ரோடில் கொட்டி போராட்டம் செய்வதை படித்து உள்ளோம். அரசாங்கத்தையும் மற்றவர்களையும் நம்பாமல், உடுமலை விவசாயிகள் தம கையே தமக்கு உதவி என்று இடை தரகர் அக்கிரமத்திற்கு முற்று புள்ளி வைக்க முனைந்து உள்ளனர்.. இதை பற்றிய செய்தி தினமலரில்

 

தக்காளிக்கு செயற்கை விலை வீழ்ச்சி ஏற்படுத்தும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, விலை பட்டியல் வெளியிடுதல் மற்றும் நேரடி ஏல மையம் துவக்க, உடுமலை விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் ஒவ்வொரு சீசனிலும், 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி பயிரிடப்படுகிறது. உற்பத்தியாகும் தக்காளியை, கமிஷன் மண்டி மற்றும் வியாபாரிகளுக்கு நேரடியாக, விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.பொள்ளாச்சி, திருப்பூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், தக்காளிக்கு கிடைக்கும் விலையை விட, உடுமலையில் பல மடங்கு விலை குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இதற்கு, இடைத்தரகர்களின் ஆதிக்கமே காரணம் என, விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

செயற்கையான விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். “விவசாயிகள், வேளாண் விற்பனை வாரியம், வேளாண் பல்கலை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தி, தக்காளியை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என, வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில், உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செயற்கை விலை வீழ்ச்சியை தடுக்க, விவசாயிகளே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். முதல்கட்டமாக, சந்தை நிலவரங்களை பிற பகுதிகளில் பெற்று, உடுமலை தினசரி சந்தை மற்றும் முக்கிய தனியார் கொள்முதல் மையங்கள் முன், தகவல் பலகை வைத்து, விலையை எழுதி வைக்க முடிவெடுத்துள்ளனர்.இதனால், அனைத்து விவசாயிகளும் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வதுடன், இடைத்தரகர்கள் விலையை குறைப்பது தவிர்க்கப்படும். மேலும், தக்காளி அதிகம் விளையும் பகுதிகளில் உழவர் மன்றங்கள் அமைப்பது; உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தக்காளி கொள்முதல் மையம் துவக்கி விற்பனை செய்வது என, விவசாயிகள் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறுகையில், “தக்காளி விற்பனையில், நிலவும் குளறுபடியை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுதொடர்பாக, கிராமம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம். அரசின் கவனத்துக்கும் மனு அனுப்பியுள்ளோம்,’ என்றனர்.இத்திட்டங்கள் குறித்து, உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்திலும், வருவாய்த்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *