சந்தையில் ஈடாக தக்காளி விலை உயர்ந்திருக்கும் நிலையில், தக்காளி பயிரில் நூற்புழுத் தாக்குதல், விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. தக்காளிப் பயிரில் நூற்புழு மேலாண்மை குறித்து, கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கரி கிராமத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சுந்தராஜ் தெரிவித்தது:
தக்காளிப் பயிரானது தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளிப் பயிரைப் பொருத்தவரையில், நடவு முதல் அறுவடை வரையிலான பல்வேறு நிலைகள் உள்ளன. பல்வேறு காரணிகளால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வந்தாலும், வேர் முடிச்சு நூற்புழுவினால் 30 சதவீத மகசூல் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
நூற்புழுத் தாக்குதல் அறிகுறிகள்:
- நூற்புழுத் தாக்குதலுக்கு உள்ளான செடிகள் வளர்ச்சியின்றிக் காணப்படும். இலைகள் பச்சையம் இழந்து, பழுப்பு நிறமாகக் காணப்படும்.
- இலையின் நுனி வெள்ளை நிறத்துடன் கீழ்நோக்கி இருக்கும்.
- பாதிக்கப்பட்ட செடியின் வேர்கள் முடிச்சு முடிச்சாகவும், தடிமனாகவும் காணப்படும்.
- இதனால், மண்ணிலிருந்து நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, நாளடைவில் மகசூல் குறைந்து, காய்ந்துவிடும்.
மேலாண்மை:
- விளைநிலத்தை கோடை உழவு செய்ய வேண்டும். தக்காளி, கத்திரி, வெண்டை போன்ற பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், பயறு வகைப் பயிர்களை பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.
- சுந்தாள் பயிர்களைச் சாகுபடி செய்து,மடக்கி, உழவு செய்ய வேண்டும்.
- பயிர் நடவுக்கு முன்பாக வேப்பம் பிண்ணாக்கை கடைசி உழவில் ஓர் ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் இட வேண்டும்.
- நூற்புழுக்களை அழிக்கக் கூடிய பயிர்களான செண்டுமல்லி, கடுகு போன்ற பயிர்களை 1-க்கு 16 என்ற அளவில் பயிரிட வேண்டும்.
- ஒரு ஹெக்டேருக்கு சூடோமேனாஸ் புளோரசன்ஸ் (2 கிலோ) மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி (2 கிலோ) மற்றும் பேசிலோமைசிஸ் (2 கிலோ) என்ற உயிரினக் கலவையினை 50 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்து இரண்டு நாள்கள் நிழலில் வைத்து,காலை, மாலை நேரங்களில் நீர்தெளித்து பின்னர் வயலில் இட்டு கட்டுப்படுத்தலாம். போக்கிகோமியா கிளாமரஸ்போரா என்ற உயிரின பூஞ்சானத்தை ஏக்கருக்கு 2 கிலோ பயன்படுத்தலாம்.
மேற்கண்ட முறைகளைக் கடைப்பிடித்து நூற்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தி அதிக மகசூலைப் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரியை அடுத்துள்ள எலுமிச்சங்கிரி கிராமத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தை நேரிலோ அல்லது 04343296039 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.krishnagirikvk.org என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்