தக்காளி சாகுபடி

மண் மற்றும் தட்பவெப்பநிலை : தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால்  வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் கார தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

விதைக்கும் காலம் : ஜீன் ஜீலை, நவம்பர் டிசம்பர், பிப்ரவரி மார்ச்.
நடும் பருவம் : அக்டோபர் நவம்பர், பிப்ரவரி மார்ச், மே ஜீன்.

விதையும் விதைப்பும்

விதை அளவு : எக்டருக்கு 350-400 கிராம் விதைகள்.

இரகங்கள் : கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன், அர்கா விசால், அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி மற்றும் அர்கா அஹ்தி.

விதை நேர்த்தி : ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 1 மீட்டர் அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 .மீ வரிசை இடைவெளியில் விதைக்கவேண்டும். பிறகு மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். பின்பு பார்கள் அனைத்து 25 நாள் வயதுடைய நாற்றுக்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் நடவேண்டும். நடுவதற்குமுன் இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிர்லா தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

இடைவெளி

கோ 1, பையூர் 60×45 செ.மீ
கோ 2, பிகேஎம் 1 60×60 செ.மீ
கோ 3 48×35 செ.மீ
பூசாரூபி 80×75செ.மீ

நீர் நிர்வாகம்

நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன்பிறகு மண்ணின் ஈரத்தன்மையைப்  பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரமான எக்டருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 50 கிலோ இடவேண்டும். நட்ட 30ம் நாள் தழை்சசத்து 75 கிலோ இட்டு மண் அணைக்கவேண்டும். நாற்று நட்ட 15ம் நாள் ட்ரைகோன்டால் 1 பிபிஎம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும். இவ்வாறு தெளிப்பதினால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.

பயிர் இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)
தழை மணி சாம்பல் 10:26:26 யூரியா
தக்காளி அடியுரம் 75 100 50 193 121 313
313 நட்ட 30ம் நாள் 75 0 0 0 163 0

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

ஒரு லிட்டர் புளுகுளோரலின் மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாகக் கலந்து நாற்று நடுவதற்கு முன்னர் நிலத்தில் தெளித்து நீாப் பாய்ச்சி பின்னர் நாற்றுக்களை நடவேண்டும். நாற்று நட்ட 30ம் நாள் ஒரு கைக்கிளை எடுக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

காய்ப்புழு மற்றும் புரொடீனியாப் புழுவைக் கட்டுப்படுத்த

  1. இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும்.
  2. தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்கவேண்டும், வளர்ந்த புழுக்களையும் அழிக்கவேண்டும்.
  3. ஒரு எக்டருக்கு எண்டோசல்பான் 35 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பரில் நனையும் தூள் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
  4. ட்ரைகோகிம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 50,000 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் பொருளாதாரச் சேதநிலை அறிந்துவிடவேண்டும்.
  5. காய்ப்புழுவிற்கு என்.பி.வி வைரஸ் கலவை தெளிக்கவேண்டும்.
  6. புரொடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

வேர் முடிச்சு நூற்புழு : கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இடவேண்டும்.

நோய்கள்

நாற்று அழுகல் : விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்பு விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் ஒரு கிலோ விதைக்கு அல்லது கேப்டான் 2 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். நாற்றாங்காலில் நீர் தேங்கக்கூடாது. காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து மருந்தை பாத்திகளில் ஊற்றவேண்டும்.

இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்: இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. வெய்யில் காலங்களில்  மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

இலைப்பேன்கள் : இது தக்காளியில் புள்ளி வாடல் நோயினைப் பரப்பும் காரணியாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 7 கிலோ ப்யூரடான் குறுணையை இடவேண்டும்.

அறுவடை

மகசூல் : 135 நாட்களில் ஒரு எக்டருக்கு 35 டன் பழங்கள்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “தக்காளி சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *