தக்காளி பயிரில் புது முறை சாகுபடி

பூ, இலைகள் உதிர்ந்த பிறகும், தக்காளிச்செடிகளுக்கு உயிர் கொடுத்து, விளைச்சலை பெருக்கி விவசாயிகள் சாதித்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழையால், விவசாய நிலங்கள் குளிர்ந்துள்ளன. பாசனக்கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகளுக்கு திருப்தியை கொடுத்துள்ளன.நிலத்தடி நீரால் தென்னைகளின் வளர்ச்சியும், காய்ப்பிடிப்பு திறனும் கூடியுள்ளன.ஆனாலும், தக்காளி, மிளகாய், கத்திரி உள்ளிட்ட செடிகள் மழை நீர் தேங்குவதால் அழுகி, இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதைத்தவிர்க்க, பெரும்பாலான விளைநிலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி, பயிர் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ஆனாலும், சமீப நாட்களில் பெய்த, ஓயாத மழையால், தக்காளிச்செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்ததோடு, செடிகளுக்கிடையே மழைநீர் தேங்கி செடிகள் கறுத்து, ஏறக்குறைய அழிந்து விட்டன.

முன்னேற்பாடாக, வடிகால் வசதி கொண்ட நிலங்களில், நடவு செய்திருந்த தக்காளிச் செடிகளில் பூ, பிஞ்சுகள் உதிர்ந்த நிலையிலும், செடிகள் மட்டும் உயிரோடு அழுகாமல் இருக்கின்றன. கவலைப்படாத முற்போக்கு விவசாயிகள் பலர், முறையாக செடிகளுக்கு ஊட்டம் மிக்க மருந்துகளை தெளித்து, மீண்டும் துளிர்விட செய்துள்ளனர்.

இதுகுறித்து, சிங்கராம்பாளையத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில், தக்காளி நடவு செய்துள்ள விவசாயி அப்பு கூறுகையில், ”வடிகால் வசதி இருந்ததால் செடிகள் அழுகவில்லை. ஆனாலும், பூ, பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. மழைக்கு முன்பே தக்காளி அறுவடை துவங்கி விட்டதால், ஏறக்குறைய பெரும் இழப்பில் இருந்து தப்பி விட்டேன். நல்ல விலை இருந்தபோதே முதலீட்டுடன் லாபமும் கிடைத்து விட்டது. தற்போது இச்செடிகள் மீண்டும் தழைக்கும் வகையில் விலை உயர்ந்த மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இச்செடிகள் மீண்டும் பூ பூத்து, அறுவடையை கொடுக்கும். வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து இல்லாது இருந்தாலோ, குறைவாக வந்தாலோ நல்ல விலை கிடைக்கும், இதேபோல இன்னொரு முறையும் சாகுபடி காணலாம்.ஏக்கருக்கு எல்லா செலவும் போக, 2 – 5 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்,’ என, தக்காளி சாகுபடியாளர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *