தர்ப்பூசணி சாகுபடி

விவசாயிகள் தர்ப்பூசணி பயிரிட்டு, நவீன தொழில்நுட்ப முறைகள், பயிர் பாதுகாப்பு யுக்திகளைப் பின்பற்றினால், 4 மாதங்களில் அதிக விளைச்சலை பெற்று லாபம் சம்பாதிக்கலாம் என தோட்டக்கலைத் துறையில் துணை இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ச.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 • தர்ப்பூசணியை நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும், நிலப்போர்வை அமைப்புடன் நுண்நீர் பாசன சாகுபடி முறையிலும் பயிரிடலாம்.
 • இந்த தர்ப்பூசணி பயிரால் விவசாயிகள் அதிக வருவாய் பெற வாய்ப்பு உள்ளது.
 • தர்ப்பூசணியில் சுகர் பேபி, சுகந்தி, விசால், கிரண், சிம்ரன், அபூர்வா, மிதுலா, ரியா, சிந்தூரி போன்ற வீரிய ரகங்களும், 295 ஜஸ்பாக்ஸ் ரகங்கள், பெரியகுளம்1 போன்றவை வர்த்தக ரீதியாக தமிழகத்தில் பயிரிட ஏற்றவை.
 • ஏக்கருக்கு 1.5 கிலோ விதை போதுமானது.
 • தர்ப்பூசணியை அதிக அளவில் தாக்கும் வாடல் நோய், வேர் அழுகல் நோய், திடீர் அழுகல் நோய், சாம்பல் வகை நோய்கள் போன்றவற்றை முற்றிலும் வராமல் தடுக்க விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி உயிரி பஞ்சாணக் கொல்லியை கலந்து 24 மணி நேரம் கழித்து 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் என்னும் உயிரி பேக்ட்டிரியக் கொல்லியுடன் 400 கிராம் அசோஸ்பைரில்லத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, நிழலில் உலரவைத்து 2.5 மீட்டர் இடைவெளியில் எடுக்கப்பட்ட வாய்க்கால்களில் 0.9 மீட்டர் இடைவெளியில் ஒரு குழிக்கு 2 விதைகள் வீதம் விதைக்க வேண்டும்.
 • குழித்தட்டு நாற்றங்காலில் தயாரித்த 12 நாள்களான நாற்றுகளையும் இதே இடைவெளியில் நடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.
 • அடியுரமாக ஏக்கருக்கு 8 டன் தொழுஉரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 22.5 கிலோ மணிச்சத்து, 22.5 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
 • 30 நாள் கழித்து மேலுரமாக 22.5 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
 • ரசாயன உரங்களை இடுவதற்கு 15 நாள்களுக்கு முன் ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ், 1 கிலோ டிரைக்கோ டெர்மாவிரிடி, 1 கிலோ பேசில்லஸ் சப்ட்லிஸ், 4 கிலோ அசோஸ்பைரில்லம், 4 கிலோ பாஸ்போபேக்ட்ரியா, சாம்பல் சத்தை கிரகிக்கும் பொட்டாஷ் மொபைலைசிங் பேக்ட்ரியா 4 கிலோ போன்ற இயற்கை நுண்ணுயிர் உயிரி மற்றும் நுண்ணுயிர் உரங்களை 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 100 கிலோ நன்கு மக்கிய தொழுஉரத்துடன் கலந்து கடைசி உழவில் இடவேண்டும்.
 • இதனால் தர்ப்பூசணியை தாக்கும் முக்கிய நோய்காரணிகளை முன்கூட்டியே அழித்துவிட முடியும்.
 • தர்ப்பூசணியை நவீன முறையில் சாகுபடி செய்தால் 3 மடங்கு விளைச்சலை பெறலாம்.
 • 1.2 மீட்டர் அகலம், 30 செ.மீட்டர் உயரம், 45 செ.மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்ட பார்களின் நடுவில், 60 செ.மீ மற்றும் 50 செ.மீ. இடைவெளியை கொண்ட சொட்டுவான் அமைப்பை உடைய சொட்டு நீர்ப்பாசன கிளைக் குழாய்களை பரப்பி, முதலில் 8 முதல் 12 மணி நேரம் அதை இயக்கி, பார்களை முழுமையாக நனைக்கவேண்டும்.
 • அதன் பின்னர் குழித்தட்டு நாற்றங்காலில் தயாரிக்கப்பட்ட 12 நாள் வயதான நாற்றுகளை 60 செ.மீ இடைவெளியில் சொட்டு நீர் குழாய்களின் இருமருங்கிலும் நட வேண்டும்.
 • நவீன தொழில்நுட்பம், பயிர் பாதுகாப்பு போன்றவற்றின் மூலம் ஒரு ஏக்கரில் சராசரியாக 30 டன் முதல் 40 டன் விளைச்சலை 100 முதல் 120 நாளில் பெற முடியும் என்கிறார் ராதாகிருஷ்ணன்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *