பசுந்தீவன பயிர்களின் வகைகளும் வளர்ப்பு முறைகளும்

கால்நடைகளுக்குத் தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனங்களை அளிப்பதால், பால் உற்பத்தியை மென்மேலும் பெருக்கலாம். தவிடு, பிண்ணாக்கு போன்றவற்றினை விட, பசுந்தீவனத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. மேலும், தீவனப் பயிர்களை அளிப்பதால், சுவாசம், கருவுறுதல், கன்று ஈனுதல் போன்றவற்றுக்கு பசுந்தீவனங்கள் உதவுகின்றன.


இதுகுறித்து நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியை ப.சவிதா, முதன்மையர் நெ.உ.கோபால் ஆகியோர் தெரிவித்தது:

பசுந்தீவனப் பயிர் வகைகளில் கோ.எப்.எஸ். 29 என்னும் தீவனச் சோளம், ஆப்பிரிக்க நெட்டை வகையைச் சார்ந்த மக்காச் சோளம், புல் வகைகளில் கம்பு நேப்பியர் புல், கினியா புல், கொழுக்கட்டைப் புல் போன்றவை அடங்கும். தீவனப் பயிறு வகைகளில் வேலி மசால், குதிரை மசால், தட்டைப்பயிறு போன்றவை உள்ளன.

தீவனச் சோளம்:

கோ.எப்.எஸ். 29 என்ற தீவனச்சோளமானது கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை உற்பத்தி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் போதும். பாருக்கு பார் ஓர் அடி இடைவெளி இருக்க வேண்டும். தீவனச் சோளமானது சாதாரண சோளத்தினைப் போன்றே காணப்படும். இதனை 60 முதல் 70 நாட்களில் அறுவடை செய்யலாம். ஓராண்டில் குறைந்தது 6 முதல் 7 முறை அறுவடை செய்து, 68 டன் வரை பசுந் தீவனத்தைப் பெறலாம்.

இதில் சாதாரண சோளத்தினைப் போலவே கசக்கும் தன்மை கொண்ட வேதிப் பொருளான ஹைட்ரஜன் சயனைடு உள்ளதால், இது கால்நடைகளுக்கு கேடு விளைவிக்கும். எனவே, பூத்த பிறகு இவ் வேதிப் பொருட்கள் குறைவதால், அப்போதுதான் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

தீவன மக்காச் சோளம்:

சாதாரண மக்காச் சோளத்தினைப் போலவே தீவன மக்காச் சோளமும் இறவையில் பயிரிடப்படுகிறது. இதற்கு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் தேவை. பயிருக்குப் பயிர் இடைவெளியானது 30-க்கு 15 செ.மீ. இருக்க வேண்டும்.

இதன் கதிர்கள் பால் கட்டும் தருணத்தில் அதிக அளவு ஊட்டச்சத்து கொண்டதாகக் காணப்படும். இத்தகைய தருணத்தில் அறுவடைசெய்து பதப்படுத்தி பாதுகாக்க வேண்டும். இதன் விளைச்சலானது, 20 டன் வரை ஓராண்டில் கிடைக்கும். தீவன மக்காச் சோளத்துடன் ஊடுபயிராக தீவனத் தட்டைப் பயிரினை 3:1 என்ற விகிதத்தில் பயிரிடுவதால், புரதத்தினையும் தீவனத்தில் பெறலாம்.

கம்பு நேப்பியர் புல்:

கம்பு நேப்பியர் புல்லானது கம்பினையும், நேப்பியர் புல்லினையும் கலப்பினம் செய்து பெறப்பட்டது. இதன் இயல்பானது கம்பினைப் போல் பூக்கும் தன்மையும், நேப்பியர் புல்லினைப் போன்று தோற்றமும் கொண்டது. இதன் நடவுக்கு ஏக்கருக்கு குறைந்தது 14,000 கரணைகள் தேவை. 60 செ.மீ இடைவெளியில் பார்களினை அமைத்து 75-80 நாட்களில் முதல் அறுவடையும், 45 நாட்களில் அடுத்த அறுவடையும் மேற்கொள்ளலாம். மறுதாம்பு போன்று வளரும் தன்மையைக் கொண்டதால், பலமுறை ஆண்டில் அறுவடை செய்யலாம். 110-130 டன் வரை பசுந்தீவனப் பயிராகக் கிடைக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், சுண்ணாம்புச் சத்தும் உள்ளது.

கினியா புல்:

கால்நடைகள் நன்கு உண்ணும் புல் ஆகும். ஏக்கருக்கு 16,000 வேர்கரணைகள் அல்லது ஒரு கிலோ விதைகள் தேவை. பயிருக்கு பயிர் 50-க்கு 50 செ.மீ இடைவெளிவிட்டு இதனை நட வேண்டும். 80 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். ஓராண்டில் குறிப்பாக 7 அறுவடை மூலம் 110-120 டன் பசுந்தீவனத்தைப் பெறலாம்.

கொழுக்கட்டைப் புல்:

கொழுக்கட்டைப் புல்லானது ஏக்கருக்கு 16,000 வேர்கரணைகள் அல்லது 2.5 முதல் 3.5 கிலோ விதைகள் வரை தேவை. இதன் முதல் அறுவடையானது 80 நாட்களிலும், ஆண்டு முழுவதும் 4 முதல் 6 முறை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 16 டன் அளவு தீவனம் கிடைக்கும். மேலும், இந்தப் புல்லினை கால்நடைகளை நேரடியாக மேய விடலாம்.

புதிதாக அறுவடை செய்த விதைகளில் விதை உறக்கம் காணப்படும். இதனைக் குறைக்க ஒரு சதவீதம் பொட்டாசியம் நைட்ரேட் விதைப்பதற்கு முன் ஊறவைத்து விதை உறக்கத்தினை நீக்கலாம்.

வேலி மசால்:

பழங்காலத்தில் வேலிகளில் அமைந்திருந்ததால், இத் தாவரமானது வேலி மசால் என அழைக்கப்பட்டது. வேலி மசால் ஓர் ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவையானது.

60 செ.மீ இடைவெளியில் பார்களை அமைக்க வேன்டும். முதல் அறுவடையானது 3 மாதத்திலும், அடுத்தடுத்து 45 நாட்கள் இடைவெளியிலும் அறுவடை செய்யலாம். விதை நன்கு முளைப்பதற்கு கொதிக்கவைத்து நன்றாக ஆறிய நீரில் 3 முதல் 4 நிமிடங்கள் ஊற வைத்து விதைக்க வேண்டும்.

தீவன தட்டைப்பயிறு:

இது சாதாரண தட்டைப்பயிறு போலவே ஜூன்-ஜூலை மாதங்களில் விதைக்கலாம். ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் தேவை. செடிக்குச் செடி இடைவெளியானது 30-க்கு 15 செ.மீ இருக்க வேண்டும். தீவனத் தட்டைப் பயிரானது 50 நாட்களில் 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக, பசுந்தீவனமானது 1 லிட்டர் பால் உற்பத்திக்கு 3 கிலோ பசுந்தீவனம் வழங்கவேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பசுந்தீவன பயிர்களின் வகைகளும் வளர்ப்பு முறைகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *