குறைந்தளவு நீரிலும், குறுகிய காலத்திலும் வளரக்கூடிய ‘ஹைட்ரோபோனிக்’ எனும் முளைப்பாரி தீவனத்தை பயிரிட்டு கால்நடை விவசாயிகள் தீவன தட்டுப்பாடு பிரச்னையை எதிர்கொண்டு சமாளிக்கலாம்’ என, கால்நடை பராமரிப்புத் துறை ‘டிப்ஸ்’ வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பருவ மழைகள் பொய்த்துவிட்டதால் நெற்பயிர்கள் கருகிய சோகத்தில் விவசாயிகள் மூழ்கியுள்ளதுடன், கால்நடைகளின் முக்கிய தீவனமான மக்காச்சோளம், சோளத்தட்டு உள்ளிட்ட பயிர்களின் விளைச்சலும் குறைந்துள்ளது.
கோவையில் கள்ளப்பாளையம், அன்னுார், சத்தி, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம், சோளத்தட்டு ஆகியன அதிகளவில் பயிரிடப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதேபோல், பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் இருந்து புண்ணாக்கு உள்ளிட்ட கலப்பு தீவனங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது இவற்றின் விளைச்சல் குறைந்துள்ளதால் புண்ணாக்கு உள்ளிட்ட கலப்பு தீவனங்களின் விலையும் அதிகரித்துள்ளது. வறட்சி, தீவன விலை உயர்வு போன்ற காரணங்களால், விவசாயிகள் மாடுகளை சந்தைகளில் விற்பதும் அதிகரித்து வருகிறது.எனவே, தீவன தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வுகாணும் விதமாக, குறுகிய காலத்தில் வளரக்கூடிய, ‘ஹைட்ரோபோனிக்’ எனும் முளைப்பாரி தீவனத்தை பயிரிட்டு, கால்நடைகளை பராமரிக்கலாம் என, கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தியின் மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன் கூறியதாவது:
- ‘ஹைட்ரோபோனிக்’ எனும் முளைப்பாரி தீவனப்பயிர்களை மண் இல்லாமல் எட்டு நாளில் வளர்த்து கால்நடைகளுக்கு உணவாக தரலாம்.
- கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றின் விதைகளை, 12 மணி நேரம் தண்ணீரில் ஊரவைத்த பின்னர், நான்கு மணி நேரம் உலரவிட வேண்டும்.
- இவற்றை ஓர் ஈரமான சாக்கில் போட்டுவைத்தால் முளைப்பு வந்துவிடும்.
- தொடர்ந்து, டிரேக்களில் அந்த முளைப்புகளை வைத்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது தண்ணீர் விட்டால் போதும். எட்டாவது நாளில் ஒரு அடி வரை வளர்ந்துவிடும்.
- அவற்றை அப்படியே கால்நடைகளுக்கு தீவனமாக தரலாம். ஒரு கிலோ விதையில், 8 கிலோ தீவனம் பெறலாம்.
- இதற்கு தண்ணீர் அதிகம் செலவாகாது. இதில் புரதச் சத்து அதிகம் உள்ளதால், பாலில் ஒரு சதவீதம் கொழுப்பு சத்து அதிகரிக்கும். விவசாயிகள் வறட்சி காலம் மட்டுமின்றி எந்த சமயத்திலும் இம்முறையை கையாலலாம்.இவ்வாறு, ராமச்சந்திரன் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்