துவரையில் சாகுபடி டிப்ஸ்

துவரையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க நவீன சாகுபடித் தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு முறையை விவசாயிகள் பின்பற்றலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடையில் நிலத்தை 2 முதல் 3 முறை ஆழ உழவு செய்வதன் மூலம் துவரை சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல் குறைவதுடன், களைக் கட்டுப்பாடும் ஏதுவாகிறது.

ஆழமாக உழவு செய்வதால் பெய்யக்கூடிய மழை நீர் நிலத்திலிருந்து வழிந்தோடி வளமான மண் அடித்து செல்லப்படுவதைத் தடுத்து, நிலத்திலேயே உள்நோக்கி ஊடுருவி மண்ணில் தழை, மணி, சாம்பல் சத்து, அங்ககப் பொருள்கள் அதிகரித்து நில வளம் மேம்படுகிறது.

துவரையில் நாற்று நடவு முறைக்கு உயர் விளைச்சல் அளிக்கக் கூடிய நீண்டகால மலட்டுத் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறனுள்ள ரகத்தை தேர்வு செய்து ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு கிலோ விதை போதுமானது.

முதலில் 2 சத கால்சியம் குளோரைடு கரைசலில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து 7 மணி நேரம் விதைகளை நிழலில் உலர்த்தி, ஒரு கிலோ விதைக்கு 50 கிராம் ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.

துவரை நடவிற்கு பயன்படுத்தப்படும் பாலித்தீன் பைகளில் நன்கு மக்கியத் தொழு எரு, மண், மணல் மூன்றையும் சரிசமமாக கலந்து பையின் மேல்புறம் தண்ணீர் நிற்க இடம் இருக்குமளவுக்கு சிறிது இடம் போக நிரப்ப வேண்டும்.

பைகளின் அடியில் தண்ணீர் தேங்காமல் இருக்க 3 முதல் 4 ஓட்டைகளை இட்டு ஒரு அங்குலம் ஆழத்தில் இரு விதைகளை இட வேண்டும்.

விதைப்பு செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை சூரிய ஒளி உள்ள இடத்தில் வைத்து நீர்தெளித்து 30 முதல் 40 நாள்கள் பராமரித்து பின்பு வயலில் நடவு செய்யலாம்.

நன்கு உழவு செய்யப்பட்ட நிலத்தில் நடவிற்கு ஒரு வாரம் முன்னதாக 6 அங்குலம் ஆழத்தில் பயிர் நடவு செய்ய குழிகள் தோண்டி, அவற்றில் தொழு எரு, துத்தநாக சல்பேட், மண் ஆகியவற்றை நிரப்பி களிமண் பாங்கான இடத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் நடவு செய்வதன் மூலம் ஏக்கருக்கு 2,500க்கும் அதிகமான நாற்றுகளை நடவு செய்யலாம்.

ஒரு குழிக்கு பாலித்தீன் பையில் உள்ள 2 நாற்றுகளை நடவு செய்து, பின் நன்றாக வளர்ந்துள்ள ஒரு செடியை விட்டு மற்றொரு செடியைக் களைத்து விடலாம். நடவின் போதும், நடவு செய்த பிறகும் நன்றாக நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

துவரையில் ஊடுபயிராக உளுந்து, பச்சை பயறு, சோயா மொச்சை ஆகிய பயிர்களை விதைப்பு செய்த பிறகு 5 அல்லது 6 அடிக்கு ஒரு உழவு சால் ஏற்படுத்தி துவரை நடவு செய்தால் ஊடுபயிரின் மூலம் உபரி வருவாய் பெறலாம்.

துவரை நாற்று நடவுத் தொழில்நுட்பத்தின் பயனாகப் பயிர்களுக்கு சரியான அளவு இடைவெளி, போதிய அளவு நீர்ப் பாசனம் அளிப்பதால் நிலம், காற்று, ஈரப்பதம், பயிர்ச் சத்துக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் பயிருக்கு கிடைப்பதால் பயிர் மகசூல் அதிகரிக்கிறது.

பக்கவாட்டு கிளைகள் அதிகளவில் உருவாவதன் மூலம் அதிகக் காய்கள் உற்பத்தியாகி மகசூல் அதிகரிக்கிறது.

இத்தகைய நன்மைகள் தரும் துவரை நாற்று நடவு முறையைப் பின்பற்றி விவசாயிகள் அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *