துவரை சாகுபடியில் ஏக்கருக்கு 800 கிலோ எடுக்க ஆலோசனை

சிவகங்கை மாவட்டத்தில்,துவரை சாகுபடி செய்து, ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் எடுக்கலாம்,” என, விவசாயத்துறை இணை இயக்குனர் செல்லத்துரை கூறினார். அவர் கூறியதாவது:

  • மாவட்டத்தில்,பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில்,துவரை சாகுபடியில் விதைகளை நேரடியாக நிலத்தில் விதைப்பதை விட நாற்றுகளாக வளர்த்து நடவு செய்யும் புதிய தொழில் நுட்பம் செயல்படுத்தபடுகிறது.
  • எக்டேருக்கு ரூ.7,500 மானியம் வீதம் 270 எக்டேரில்,துவரை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிக நாட்கள் வயதுடைய உயர் விளைச்சல் தரும் மலட்டு தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தியுடைய கோ-7, எல்.ஆர்.ஜி.,41, ரகங்களை சாகுபடி செய்யவேண்டும்.
  • ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதும். பாலிதீன் பைகளில் தொழுஉரம் மணல் கலந்த கலவையை நிரப்பி,பூஞ்சாண மருந்து மற்றும் ரைசோபியம் விதை நேர்த்தி செய்த விதைகளை பாலிதீன் பைகளில் ஒரு பைக்கு 2 விதை வீதம் விதைக்க வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 2,500 பைகள் தேவைப்படும்.விதைத்த 25 – 30 நாட்களுக்கு பூவாளியால் நீர் பாய்ச்சி நாற்றுகளை வளர்க்க வேண்டும். நடவு வயலினை நன்கு உழவு செய்து மண் மாதிரி ஆய்வின்படி, அடியுரம், நுண்ணூட்ட உரங்கள் இட்டு,6 அடி இடைவெளியில் ஆழச்சால் எடுக்க வேண்டும். ஆழச்சால் வரிசையில் 2 அடி இடைவெளியில் பாலிதீன் பை நாற்றினை,அரை அடி குழி எடுத்து நடவு செய்து, 15 – 20 நாட்களில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். நல்ல வாளிப்பான ஒரு நாற்றினை மட்டும் வைத்துவிட்டு, 2வது நாற்றினை அகற்றி விடவேண்டும்.
  • நடவு செய்த 20 -30 நாளில் நுனிக்குருத்தினை கிள்ளி விடுவதன் மூலமாக பக்க கிளைகள் அதிகமாக தோன்றி பூங்கொத்து அதிகமாகும்.
  • பூ பூக்கும் நேரம் 2 சத டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும்.
  • பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • விவசாயத்துறை மூலம், துவரை நடவிற்கு சொட்டு நீரில் பாசனம் மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • துவரை பூக்கும் பருவத்தில் காய்புழுவினை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும்.
  • நடவு முறையில் துவரை சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம்.
  • தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி, துவரை நடவு செய்ய, அந்தந்த விவசாய உதவி இயக்குனர்களை அணுகலாம்,என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *