துவரை சாகுபடியில் கரூர் விவசாயி சாதனை

துவரையில் அதிக மகசூல் எடுத்த, கரூர் மாவட்ட விவசாயிக்கு, மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றின் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர், பாசன வசதி பெறுகிறது. பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, கோரை போன்றவை அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில், ஒரு பகுதி பாசன வசதி பெற்றாலும், அரவக்குறிச்சி, வெள்ளியணை, க.பரமத்தி, உப்பிடமங்கலம் உள்ளிட்ட பகுதிகள் மானாவாரி நிலங்களாக உள்ளன. பருவமழை காலங்களில், இப்பகுதியில் சோளம், கம்பு, துவரை, நிலக்கடலை போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த, 2010ம் ஆண்டில் இருந்து, 2013ம் ஆண்டு வரை, பருவமழை பொய்த்ததால், மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி நடைபெறவில்லை. கடந்தாண்டு துவக்கம் மற்றும் இறுதியில், பருவமழை ஓரளவு பெய்ததால், சோளம், துவரை, கம்பு, நிலக்கடலை போன்றவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

மத்திய அரசு சார்பில், இந்தியா முழுவதும் மாவட்டங்களில், சிறந்த பயிர் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளை தேர்வு செய்து, மத்திய அரசின், “கிரிஸ் கார்மன் விருது’ வழகப்படுகிறது.

கடந்த, 2013-14ம் ஆண்டில் பஞ்சாப், ஒடிஸா, மேகாலயா, சதீஷ்கர், மத்திய பிரதேசம், அசாம், தமிழகம், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில், அரிசி, கோதுமை, துவரை, உளுந்து உள்ளிட்ட பயிர்களில் சிறந்த மகசூல் எடுத்த, 18 விவசாயிகளை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில், காரீப் பருவத்தில் மாவட்ட அளவில், ஒரு ஹெக்டரில், 1,372 கிலோ துவரை மகசூல், தான்தோணி வட்டாரத்தில், 1,560 கிலோ துவரை மகசூல் கிடைக்கும். விவசாயி வீரமரெட்டியார், ஒரு ஹெக்டரில், 2,240 கிலோ மகசூல் எடுத்ததற்காக, மத்திய அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், விவசாயி வீரரெட்டியாருக்கு, பிரதமர் மோடி விருது வழங்கினார்.
விருது பெற்றது குறித்து விவசாயி வீரமரெட்டியார் கூறியதாவது:
கடந்த ஆண்டில் என் நிலத்தில் துவரை சாகுபடி செய்தேன். 120 நாள் முதல், 148 நாளில் துவரை அறுவடைக்கு வந்து விடும். ஒரு ஏக்கருக்கு, இரண்டு மூட்டை உரம் மற்றும் தொழுஉரம் போன்றவை தெளித்தேன். பருவமழை கைகொடுத்ததால், துவரை மகசூல் நன்றாக இருந்தது. வேளாண்மை துறையினர் துவரை மகசூல் குறித்து ஆய்வு செய்தனர். இதில், ஒரு ஹெக்டரில், 2,240 கிலோ மகசூல் எடுத்தது தெரிய வந்ததால், மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்தனர். அதை தொடர்ந்து, ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில், எனக்கு விருது வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “துவரை சாகுபடியில் கரூர் விவசாயி சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *