துவரை பயிரில் அதிக லாபம் பெறுவது எப்படி

துவரை பயிரிடுவதில், நடவு முறையை பின்பற்றினால் விளைச்சல் அதிகரித்து கூடுதல் லாபம் பெறலாம் என, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 8,000 எக்டேர் பரப்பளவுக்கு மேல் பயறு வகைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.இதில், துவரைப் பயிர் மட்டும் ஆண்டுக்கு 1,814 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. துவரை பெரும்பாலும் ஊடு பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.

விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நேரடி விதைப்பாக சால்களில் விவசாயிகள் விதைக்கின்றனர்.ஆனால், துவரையை நாற்று விட்டு நடவு செய்தால் அதிக விளைச்சல் பெறலாம் என, வேளாண் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.திருவள்ளூர் அடுத்த திருவூர் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் தேவநாதன் மற்றும் உதவிப் பேராசிரியர் குமரபெருமாள் ஆகியோர் இதுகுறித்து கூறியதாவது:

 • துவரை நடவு முறை சாகுபடிக்கு ஏக்கருக்கு ஒரு கிலோ பயன்படுத்தப்படுகிறது.
 • ஒரு கிலோ விதையை கால்சியம் குளோரைடு (லிட்டருக்கு 20 கிராம்) கரைசலில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்பு, ஏழு மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.
 • பின்னர், தேவையான உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சாணத்துடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
 • மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்பி விதைக்க பயன்படுத்த வேண்டும்.
 • பைகளில் தண்ணீர் சேராமல் தவிர்க்க வேண்டும்.
 • நேர்த்தி செய்த விதையை பைக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும்.
 • நாற்று நடுவதற்கு 15 நாட்கள் முன்பு குழிகளை மண், எரு கொண்டு நிரப்பி, குழிக்கு 1 செடி வீதம் நடவு செய்ய வேண்டும்.
 • தனிப்பயிர் சாகுபடிக்கு 15 சதுர செ.மீ., அளவுள்ள குழிகளை ஐந்துக்கு மூன்றடி இடைவெளியிலும், ஊடு பயிருக்கு ஆறுக்கு மூன்றடி இடைவெளியிலும் குழி எடுக்கலாம்.
 • உரம், பூச்சி மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை நடவடிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
 • மேலும், பூ உதிராமல் தடுக்க பூக்கும் பருவத்தில், வளர்ச்சி ஊக்கிகளை செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.
 • நடவு செய்த 20 முதல் 30 நாட்கள் கழித்து 5 முதல் 6 செ.மீ., அளவுக்கு நுனிக்குருத்தை கிள்ளி விடுவதால் பக்கக் கிளைகள் அதிகரிக்கும்.
 • இதன் மூலம் துவரை விளைச்சல் அதிகரிக்கும்.

இவ்வாறு வேளாண் நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *