ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய தென்னை ரகங்கள்

“ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வறட்சியை தாக்குப்பிடித்து, நோய் எதிர்ப்பு சக்தியுடன் அதிக மகசூல் கொடுக்கும் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என, ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜமாணிக்கம் கூறினார்.

தமிழகத்தில் 3.81 லட்சம் ஹெக்டரில் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. தென்னையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும்.

தென்னையில் கோகோ, வாழை போன்றவை ஊடுபயிர் சாகுபடி செய்தால் கூடுதல் வருவாயும், தென்னைக்கு கூடுதல் உரச்சத்து கிடைக்கும்.

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட ஆழியாறு நகர் தென்னை ரகம் -1 விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் இயல்புகள்:

 • இந்த ரகம் நான்கு ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்துவிடுகிறது.
 • ஏழாவது ஆண்டில் இருந்து நிலைத்த காய்ப்பு கிடைக்கிறது.
 • ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 125 முதல் 225 தேங்காய் காய்க்கிறது.
 • எண்ணைய் சத்து 66 சதவீதம் உள்ளது.
 • வறட்சியை தாக்குப்பிடித்து, நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ளது.
 • இந்த ரகம் ஆழியாறில் 15 ஆயிரம் கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
 • விவசாயிகளுக்கு மானிய விலையில் ஒரு கன்று 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆழியாறு நகர் தென்னை-2 ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இயல்புகள்:

 • வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் பண்புள்ளது.
 • வாரத்திற்கு ஒரு நாள் தண்ணீர் கொடுத்தால் போதும்.
 • வறட்சியை தாங்கி வளரும் ரகத்தில், இந்த ரகம் அதிக மகசூல் கொடுக்கும்.
 • ஆண்டுக்கு சராசரியாக 100 காய் மகசூல் கிடைக்கும்.
 • எண்ணெய் சத்து 66.7 சதவீதம் உள்ளது.
 • ஐந்து ஆண்டுகளில் காய்ப்பு வந்து விடுகிறது. எட்டாவது ஆண்டில் இருந்து நிலைத்த காய்ப்பு கிடைக்கும்.

மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையம் கொச்சி- சீனா ரக தென்னையை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ரக உற்பத்தியில் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் முக்கிய பங்கு வகித்தது. அந்த ரகத்திற்கான உயிரியல் வங்கி ஆழியாறில் உள்ளது.அதிக மட்டை பெருக்கத்துடன் தொழிற்சாலைகளுக்கு ஏற்ற ரகமாகும்.

 • தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. கருந்தலைப்புழு தாக்கியதும் தென்னை மரத்திலுள்ள பச்சை ஓலைகளை இரையாக எடுத்துக்கொள்ளகிறது. இதனால் ஒளிச்சேர்க்கை தடைபட்டு காய்க்கும் திறனை இழந்து, மரம் மடிந்து விடும்.
 • இதை கட்டுப்படுத்த நன்மை தரும் ஒட்டுண்ணி பூச்சி வகையை வேளாண் பல்கலை வெளியிட்டுள்ளது.
 • அதேபோன்று கருந்தலைப்புழுக்களை இரையாக விழுங்கும் குழவி வகை வெளியிடப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இவைகள் விற்கப்படுகிறது.

இவ்வாறு, தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேசினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *