சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கிடங்கில் சேரும் குப்பையின் அளவை குறைக்கவும், மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இளநீர் கழிவுகளில் இருந்து, நார் தயாரிக்கும் திட்டத்தை, மாநகராட்சி துவங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சியில், தினமும், 5,400 டன் குப்பை சேகரிக்கப்பட்டது. ‘பிளாஸ்டிக்’ பொருட்கள் தடைக்கு பின், 5,100 டன் என, குறைந்துள்ளது.
பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் கிடங்கில் கொட்டும் குப்பையை, படிப்படியாக குறைக்க, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.மக்கும் குப்பையில் இருந்து உரம் மற்றும் எரிவாயு தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை துகளாக்கி, சாலை போட பயன்படுத்தப்படுகிறது. பூங்காவிலும், மரக்கழிவில் இருந்து, உரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
தற்போது, கோடைக் காலத்தில், அதிகளவு இளநீர் விற்பனை சூடுபிடித்து உள்ளதால், அதனால், கழிவுகளும் அதிகரித்து உள்ளன. சென்னையில் தினமும், டன் கணக்கில், இளநீர் கழிவுகள், குப்பை தொட்டியில் கொட்டப்படுகின்றன. வீசி எறியும், இளநீர் மட்டையில் தேங்கும் நீரில் இருந்து, கொசு உற்பத்தி, சுகாதார சீர்கேடு உருவாகுகிறது. இதனால், இளநீர் கழிவுகளை, மறு சுழற்சி செய்யும் திட்டத்தை, மாநகராட்சி துவங்கி உள்ளது. இளநீர் கழிவுகளை தனியாக சேகரித்து, இயந்திரத்தில் அரைத்து நார் தயாரிப்படுகிறது.
முதற்கட்டமாக, அடையாறு மண்டலம், 173வது வார்டு, எம்.ஆர்.சி., நகரில், 3 லட்சம் ரூபாய் செலவில், இளநீர் கழிவில் இருந்து நார் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் ‘ராம்கி’ நிறுவனம் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. தற்போது, அடையாறு மண்டலத்தில் உள்ள, 13 வார்டுகளில் இருந்து, மினி லாரி மூலம், இளநீர் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இரண்டு வாரத்தில், 200 கிலோ நார் தயாரிக்கப்பட்டு உள்ளது. படிப்படியாக, இதர மண்டலத்திலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிடங்கில் குப்பை சேர்வதை குறைக்க, இளநீர் கழிவில் இருந்து நார் தயாரிக்கப்படுகிறது. மின்சாரம் மற்றும் ஊழியர்கள் ஊதியத்தை ஈடு செய்ய, நார் விற்பனை செய்கிறோம். கயிறு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தென்னை மரம் வளர்ப்போரிடம் பேசி வருகிறோம். அவர்களும், மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம். ஓரிரு மாதங்களில், இதர மண்டலங்களில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். மொத்த மறு சுழற்சி மூலம், 500 டன் குப்பை குறையும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்