கோடையில் தென்னை மரங்களை பராமரிப்பது பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். இதோ, இன்னும் சில டிப்ஸ்கள்:
- பருவமழை துவங்கும்போதும், முடியும் போதும் நடுவில் மழைக்காலத்திலும் தோப்பை நன்கு உழ வேண்டும்.
- கோடைமழை பெய்வதால் இடையழவு செய்யலாம். இடையழவு செய்வதால் மழை நீர் தோப்பிலேயே ஈர்க்கப்படும்.
- வேர்களுக்கு காற்றோட்டம் கிடைத்து நன்கு வளர்ந்து பயிரூட்டங்களையும் தண்ணீரையும் நன்கு எடுத்துக்கொள்ளும். களைகள் நீக்கப்படுகின்றன. தேங்காய் மகசூல் கூடும்.
- தோப்பில் பளை,கூராஞ்சி,அடிமட்டை,பன்னாடை,ஓலை மற்றும் குப்பை கூளங்களை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும்.
- ஓலைகளைச் சேகரித்து கீற்று பின்னலாம். கரையான புற்றுக்கள் இருந்தால் அவற்றை முழுவதுமாக வெட்டி எடுத்துவிட வேண்டும்.
- பூச்சி மற்றும் பூஞ்சாணங்கள் தாக்கப்பட்டு இறந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
- காண்டாமிருக வண்டின் புழுக்கள் குப்பைக்குழியில் வளர்வதால் தென்னந்தோப்பில் குப்பைக்குழிகள் இருந்தால் அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
- அடிமரங்களில் அரிவாள் கொண்டு கொத்தி காயம் ஏற்படுத்தக்கூடாது.
- கோடைக்காலத்தில் குரும்பைகள் அதிக அளவில் கொட்டினால் பிளானோபிக்ஸ் என்னும் பயிர் ஊக்கியை 8மி.லிக்கு 18லிட்டர் தண்ணீர் கலந்து பாளை வெளிவந்த 30வது நாளில் பாளையின் மீது கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். ஒரு பாளைக்கு அரை லிட்டர் போதும், மீண்டும் 15 நாட்கள் கழித்து ஒருமுறை இதைத் தெளிக்க வேண்டும். இதனால் குரும்பைகள் அதிகம் உதிராமல் காய்களாக மாறும்.
- ஒவ்வொரு தென்னை மரத்தைச் சுற்றியும் 2மீட்டர் சுற்றளவில் 30செ.மீ ஆழத்திற்கு உரிமட்டைகளை நார்ப்பகுதி மேலே இருக்கும்படி மண்ணில் புதைக்க வேண்டும். இதனால் பாய்ச்சப்படும் நீரும், மழை நீரும் சேமிக்கப்பட்டு சிறிது சிறிதாக மரத்திற்கு கிடைக்கும்.
தகவல்: வானொலி உழவர் சங்க செய்திக்கதிர், ஏப்ரல் 2012.
தகவல் அனுப்பியவர் – வினோத் கண்ணா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுக்கோட்டை
நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்