கோடையில் தென்னை பாதுகாப்பு

சுட்டு எரிக்கும் கோடையில் தென்னை மரங்கள் பாதிக்க படலாம். இதை எப்படி தவிர்ப்பது?

  • ரோட்டவேட்டர் கருவியை பயன்படுத்தி, புல், பூண்டுகளை உழுதுவிடவும், ஆனால் ஆழமாக உழக்கூடாது.
  • தென்னையின் வேர்கள் அறுபடக்கூடாது. தென்னை மர வேர்கள் தண்ணீர், உரம் தேடி 300 அடி நீளம் வரை செல்வதாக தமிழக வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அதனால் ஒரு விரல் அளவுள்ள வேர்கள் அறுபடாமல் மேலாக கீறி விடவும்.
  • ஆழம் உழக்கூடிய சட்டிகலப்பை, கல்டிவேட்டர்களை தென்னந்தோப்புகளில் பயன்படுத்தினால் வேர் அடுக்கு குலைந்துவிடும்.
  • தென்னை மரங்களிலிருந்து 5 அடி தள்ளி உழவும்.
  • தென்னை மர பக்கத்தில் உள்ள புற்களைக் கையால் எடுத்துவிடவும்.
  • மரத்தில் காயம் ஏற்படக்கூடாது. மரத்தில் காயம் ஏற்பட்டால் அந்த காயம் வழியாக சிவப்புக் கூன்வண்டு புகுந்து அதன் இனத்தைப் பெருக்கி மரத்தைத் தின்று கொன்றுவிடும்.
  • வரப்புகள் அமைத்து நீர்பாய்ச்சியும், சொட்டு நீர் குழாய்களை சரிசெய்து அடைப்பு நீக்கியும் பாதுகாக்கவும்.
  • மூன்று நான்கு வயதுடைய தென்னை மரங்கள் வளரும் தோப்புகளில் மட்டைகள் சாய்வாக தொங்கி நிற்கும். உழவு ஓட்டும்போது அதை வெட்டக்கூடாது.
  • தென்னை மரங்களிலிருந்து மூன்றடி தள்ளி வேர்கள் அறுபடாமல் அரைவட்டம் எடுத்து தென்னைக்கு என்று தயாரிக்கப்படும் “கல்ப விருட்சா’ மிக்சரை ஒரு கிலோ அளவில் கொடுக்கவும்.
  • மஞ்சள் கலர் இருந்தால் ஒரு கிலோ யூரியாவும் கொடுக்கவும். அதன்மேல் 30 கிலோ அளவு தொழு உரம் போட்டு தண்ணீர் கட்டவும்.
  • கழிவு மட்டைகளையும் பரப்பிவிடவும். ஈரம் அதிக நாட்கள் இருக்கும்.
  • தென்னை மரங்களில் பூக்கள் கருகி பிஞ்சுகள் உதிர்வது சத்துகள் பற்றாக்குறையினால் ஒரு புறம் இருந்தாலும் பூஞ்சாண எதிர்ப்புசக்தி குறைபாடும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • உதிர்ந்து கிடக்கும் பிஞ்சுகளின் நெட்டிப்பகுதிகளை எடுத்துப் பார்த்தால் சாம்பல் நிறத்தில் படர்ந்து பூஞ்சாணம் வளர்ந்திருப்பது தெரியும். அது “கொச்சலியோ போல்லியோ’ வகை பூஞ்சாணம்.
  • அதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க “கோகோஸ்’ உரமருந்தை மட்டை இடுக்குகளில் பயன்படுத்தவும். “கோகோஸ்’ தாவர வகை பவுடர். அதில் உள்ள மருத்துவ குணத்தால் பூஞ்சாண வியாதி எதிர்ப்பு சக்தி உண்டா கிறது. அதில் உள்ள இயற்கையான சத்துக்கள் இலைவழி உணவாகி பாளைகள் 5 பங்கு பெரிதாகவும் மூன்று பங்கு அதிக நீளமாகவும் வருகிறது.

திருவையாறில் அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செய்த பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. இவ்வாறு கடும் கோடை வரும் முன் பயிர் பாதுகாப்பு முறைகளை முறைப்படுத்தி செய்தால் தென்னை மகசூல் பெருகும்.

தொடர்புக்கு:

டாக்டர் வா.செ.செல்வம்,
தென்னை ஆராய்ச்சியாளர்,
திருவையாறு-613 204.
போன்: 04362260363, 04362260003.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கோடையில் தென்னை பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *