ஒவ்வொரு தென்னந்தோப்பும் தனி உலகம். அதில் கட்டாயம் பல பயிர் சாகுபடி செய்தே ஆக வேண்டும். குறிப்பாக பல அடுக்குப் பயிர்கள், பந்தல் வகைப் பயிர்கள், மலர் பயிர்கள், தீவனப் பயிர்கள், மல்பெரி, பழவகை பயிர்கள், உயரமாக வளரும் பயிர்கள், மூலிகைப் பயிர்கள், வாசனை பயிர்கள் இப்படி கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பல்வேறு தாவரங்கள் வளர உகந்த சூழல் அனைத்து தென்னந்தோப்புகளிலும் உள்ளன.
நீர் பற்றாக்குறை, வேலை ஆட்கள் கிடைக்கவே இல்லை, என் தோட்டத்தில் எதுவும் வராது, எனக்கு தென்னையை பார்க்கவே நேரம் இல்லை போன்ற வசனங்களை பேசுவது அறியாமையால் அளந்து விடும் பொய்கள் தான். எந்த ஒரு மண்ணுக்கும் உரிய பயிர்கள் பல உள்ளன. எந்த அளவு நீர் இருந்தாலும் அதற்கு ஏற்ப நன்கு வளரும் தாவரங்கள் உள்ளன.
மழை குறைவான பகுதிகளில் மட்டுமல்ல பிரச்னை உடைய மண்ணாக இருப்பினும் உப்பு நீராக இருப்பினும், உரிய ஊடுபயிர்கள் எவை என்பதை நிபுணர்கள் ஆலோசனை பெற்று தனது பயிர் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தென்னந்தோப்பில் பயனற்ற களைச் செடிகளை வளர விட்டு வளரவிட்டு களையெடுப்பது தான் என் வேலை என்று கூறும் விவசாயிகள், நிலப் போர்வை உத்தியையும் களைக்கு உரிய கருவிகள் பயன்பாடு உத்தியையும், சொட்டு நீர்ப்பாசன உத்தியையும் கடைப்பிடித்து ஊடுபயிர் தேர்வு செய்யலாம். வெறும் தென்னை மட்டைகளை ஆங்காங்கே பரப்பிவிட்டு, ஏதோ பெரிய தென்னை சாகுபடி உத்தியை கடைப்பிடிப்பதாக யாரோ கூறியதை தீவிரமாக செய்தால் அது பயன் தராது.
நிலத்துக்குள் உள்ள தென்னை மரத்தின் வேர்கள் நிச்சயம் மனிதனை போல் கைகளை நீட்டி உணவை எடுப்பது கிடையாது. ஊருக்கு போகும் போது அதிக நீர் காட்டுவதும், ஆற்று தண்ணீர் தானே என நினைத்து நன்றாக பாய்ச்சி காட்டில் நிரப்புவோம் என்பதும், முறைத் தண்ணீர், கெடுவு தண்ணீர் எனும் பங்கீட்டு முறை நீர் பாசனம் செய்யும்போதும் வேர்கள் சுவாசிக்க இயலாத அளவுக்கு நீர் தேக்கி வைப்பது சொந்த காசில் சூனியம் வைப்பது போல் ஆகிவிடும். இது துாங்குகின்ற களைகளை தட்டி எழுப்பி வேதனை தரும் அளவுக்கு வளரவே வழி வகுக்கும்.
விவசாயிகள் தங்களின் தோட்டத்திற்கு அரசு தரும் மானிய திட்டத்தில் கண்டிப்பாக சொட்டுநீர் அனைத்து பயிருக்கும் அமைக்கலாம். தற்போது கரையும் உரப்பாசனம், இயற்கை விவசாய இடுபொருட்கள் செலுத்தும் உத்திகள், பயிர் காக்க பூச்சி விரட்டி, வேப்பம் புண்ணாக்கு கரைசல் முதலியவற்றை குறைந்த செலவில் குழாய்கள் மூலம் செலுத்தினால் கண்டிப்பாக மகசூல் அதிகரிக்கும்.
மட்டைகளை துாள் துாளாக்க கருவிகள் உள்ளன. அவற்றை வாடகைக்கும் பெறலாம். கீழே விழும் தென்னையின் எந்த முரட்டு பாகத்தையும் மட்க வைக்க நீண்ட நாள் பிடிக்கும் என்பதால் அவற்றை சிறு துண்டுகளாக ஆக்கி எளிதில் மண்புழு தொட்டிகளில் இட்டு அற்புத உரமாக்கலாம்.
தொடர்புக்கு 9842007125 .
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்