சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோ-வை, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டுகிறார் மன்னார்குடி அருகே உள்ள ஆவிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன்.
சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவதால், கோகோ-வின் பயன் பாடும் ஆண்டுதோறும் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. கோகோ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 200 டன் கோகோ உற்பத்தி செய்யப்படுகிறது. கோகோவின் தேவை அதிகம் உள்ளதால் இதைச் சந்தைப்படுத்தும் வாய்ப்பு எளிது. திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அருகே உள்ள ஆவிக்கோட் டையைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன், தென்னையில் ஊடு பயிராக கோகோ சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: 2011-ல் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்த போது, ஊடுபயிராக கோகோவை சாகுபடி செய்யலாம் என தோட்டக் கலைத் துறையினர் ஆலோசனைத் தெரிவித்தனர். இதையடுத்து, கேட்பரி நிறுவனம் மூலம் கோகோ செடிகள் வழங்கப்பட்டன.
முதல்கட்டமாக ஏக்கருக்கு 200 செடிகள் வீதம், 5 ஏக்கர் தென்னந்தோப்பில் கோகோ செடி களை நடவு செய்தேன். இதற்கான இடுபொருட்கள், நுண்சத்துகளை முதல் 3 ஆண்டுகளுக்கு கேட்பரி நிறுவனமே வழங்கியது. கோகோ மரத்தில் மூன்றாவது ஆண்டில் பூக்கத் தொடங்கியது. 170 நாட்களில் கோகோ பழங்கள் அறுவடைக்கு வந்தன.
சிறிய தேங்காய் வடிவிலான கோகோ பழங்களைப் பறித்து, 2 நாட்கள் முட்டுபோட்டு வைத்தோம். பின்னர், பழங்களை உடைத்து, விதைகளை நொதிக்க வைத்து, கேட்பரி நிறுவனத்திடமே அவற்றை விற்றுவிட்டோம்.
முதல் ஆண்டில் ஒரு மரத்துக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை கோகோ விதைகள் கிடைத்தன. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒன்றரை கிலோ வரை கிடைத்தன. 40 ஆண்டுகள் வரை காய்ப்பு இருக்கும் என்று கூறியுள்ளனர்.
முதல் ஆண்டில் 100 கிலோ கோகோ விதைகள் கிடைத்த நிலையில், 2-ம் ஆண்டிலிருந்து 300 கிலோ வரை கிடைத்தன. ஒரு கிலோ கோகோ விதை சராசரியாக ரூ.200-க்கு விற்பனையாகிறது. ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வீதம், 5 ஏக்கருக்கும் ரூ.3 லட்சம் வருவாய் கிடைக்கிறது. தென்னையுடன் சேர்த்து கோகோ செடிகளையும் பராமரித்தோம். இரண்டுக்கும் சேர்த்து ரூ.50 ஆயிரம் செலவானது. 5 ஏக்கருக்கு சுமார் ரூ.2.5 லட்சம் நிகர லாபம் கிடைக்கிறது.
தற்போது நுண்சத்துகளைக் குறைத்து, இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால், உற்பத்தி சற்று குறைந்துள்ளது. அதேசமயம், இடுபொருட்களின் செலவு குறைந்து, இயற்கை உரத்தைப் பயன்படுத்திய திருப்தி ஏற்பட்டுள் ளது என்றார்.
வயலில் 50 முதல் 75 சதவீதம் நிழல் படர்ந்துள்ள பகுதியில், ஈரத்தைப் பிடித்து வைக்கும் தன்மையுள்ள மண்ணில் கோகோ நன்கு வளரும். எனவே, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்ய கோகோ மிகவும் உகந்தது. தென்னை வரிசைகளில் மையப் பகுதியில் 2-க்கு 2 அடி என்ற அளவில் குழி தோண்டி, 10 அடி இடைவெளியில் கோகோ செடிகளை நடவு செய்ய வேண்டும்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்