தென்னையில் ஊடு பயிர்கள்

பனமரத்துப்பட்டி வட்டாரத்தில்,குறைந்த பராமரிப்பு செலவில், கூடுதல் லாபம் பெறும் வகையில், தென்னை மர தோப்புகளில் வெங்காயம்,கத்தரி,கொய்யா,தக்காளி உள்ளிட்டவற்றை ஊடு பயிர் செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, கூலி ஆள் பற்றாக்குறை, வரவை மிஞ்சும் செலவு ஆகிய காரணங்களால், நீண்ட நாள் பலன் தரக்கூடிய தென்னை மரம் வயல்களில் நடவு செய்துள்ளனர்.
வயல்களில் குறைந்தபட்சம், 20 அடி இடைவெளியில் தென்னை கன்று நடவு செய்கின்றனர்.கடந்த காலங்களில், தென்னை மரம் நடவு செய்யப்பட்ட வயல்களில் மாற்று பயிர் ஏதும் நடவு செய்யாமல் விட்டனர்.
அதனால், தென்னை கன்று நடவு செய்த வயலில் காலி இடம் பயன் இன்றி காணப்பட்டது.

ஊரு பயிர் செய்வதால் கிடைக்கும் லாபம், எந்த பயிர் செய்யலாம் என, வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தற்போது, தென்னை மரம் நடவு செய்யப்பட்ட வயல்களில் குறுகிய காலத்தில், பலன் தரக்கூடியா, வெங்காயம்,தக்காளி,கத்தரி,மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிரிடுகின்றனர்.
பல இடங்களில், தீவன புல் மற்றும் கோகோ பயிர்கள் நடவு செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். ஓராண்டு பயிரான மஞ்சள், வாழை, பப்பாளி, பத்து ஆண்டு பயன் தரக்கூடிய கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழங்கள் பயிரிடுள்ளனர்.
தென்னை கன்று உள்ள வயலில், வெங்காயம், கொய்யா, தக்காளி,கத்தரி உள்ளிட்ட ஐந்து வகையான ஊடு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.

ஊடு பயிர் குறித்து, விசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், தென்னை மரம் உள்ள வயல்களில் நடவு செய்யப்பட்ட பல்வேறு பயிர்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:

  • தென்னை கன்று நடவு செய்து, ஐந்து ஆண்டு வரை,வயலுக்குள் வெயில் படும். அது வரையில், மூன்று மாதத்தில் பலன் தரும் தக்காளி, வெங்காயம்,கத்தரி உள்ளிட்ட பயிர் செய்கிறோம்.
  • குறிப்பிட்ட இடைவெளி விட்டு, குட்டையாக வளரக்கூடிய கொய்யா, சப்போட்டா ஆகியவை பரவலாக நடவு செய்கிறோம்.
  • ஒரு வயலில் ஐந்து வகையான பயிர் செய்ய, உழவு, பார் அணைத்தல், எருவு, உரம் ஆகிய பராமரிப்பு செலவு ஒன்றுதான்.
  • ஓவ்வொரு பயிரின் விளைச்சல் மற்றும் விற்பனை விலைக்கு ஏற்ப லாபம் கிடைக்கிறது.ஊடு பயிருக்கு விடும் தண்ணீர், உரம், எருவு ஆகியவை தென்னை மரத்திற்கும் கிடைக்கிறது.
  • ஊடு பயிர்கள் செய்ய, அடிக்கடி நிலத்தை உழவு செய்வதால், மண் இறுகாமல் இளக்கமாக இருக்கும்.

இவ்வாறு கூறினர்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னையில் ஊடு பயிர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *