தென்னையில் நீர் மேலாண்மை

1. சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் என்ன?
பாத்திப் பாசனத்தைவிட சொட்டு நீர் பாசனத்தில், 30-40% தண்ணீர் சேமிக்கப்பட்டு, 38-40% அதிக மகசூல் கிடைக்கிறது.  மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், களைகள்  கட்டுப்படுத்தப்பட்டு, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கான போட்டி குறைகிறது.  சொட்டு நீர் பாசனம் மூலம் உரமிடுவதால் நீர் ஊட்டச்சத்துக்களை தென்னைமரம் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

2. சொட்டு நீர் பாசனத்தின் பிற பயன்கள் யாவை?

  • நீர் சேமிக்கப்படுகிறது
  • வளர்ச்சி நன்றாக இருப்பதோடு, மகசூல் அதிகரிக்கிறது.
  • ஆற்றல் மற்றும் வேலையாட்கள் சேமிக்கப்படுகிறது.  குறைவான நீர் நிறுத்தும் தன்மை மற்றும் மேடு பள்ளமான மண் வகைகளுக்கு சொட்டு நீர் பாசனம் மிகவும் ஏற்றது.
  • களையைக் கட்டுப்படுத்தி, உரங்களின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

3. தென்னந்தோப்பில் எவ்வாறு சொட்டு நீர் பாசனம் செய்யலாம்?
ஒரு மரத்திற்கு 3-4 சொட்டிகள் தேவை.  சொட்டு நீர் பாசனத்திற்கு, மரத் தண்டின் 1 மீ தூரத்தில் எதிர் எதிரே 30 x 30 x 30 செ.மீ அளவில் நான்கு குழிகள் அமைக்கவும், 40 செ.மீ நீளமுடைய பி.வி.சி பைப்புகளை ஒவ்வொரு குழியிலும் சாய்வாக நிறுத்தி அதுனுள் சொட்டிகள் பொருத்த வேண்டும்.  30 செ.மீ வரை மண்ணில் நீர் சொட்டியவுடன், குழிகளை தென்னை நார் கொண்டு மூடி நீராவியாதலை தடுக்கலாம்.

4.
சொட்டு நீர் பாசனத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்?
ஒரு மரத்திற்கு ரூ. 130-150 வரை ஆகும். (பம்பு செட் செலவு தவிர) ஒரு மரத்திற்கு 4 சொட்டிகள் என்ற கணக்கில், சொட்டு நீர் பாசனம் அமைக்க 1 எக்டருக்கு ரூ 23000-26000 வரை செலவு ஆகும்.

5.
தென்னந்தோப்பில் எவ்வாறு கால்வாய்கள் போட வேண்டும்?
முதன்மை மற்றும் துணைக் கால்வாய்கள் மூலம் நீர் பாய்ச்சவும்.

6. தென்னந்தோப்பில், மண்ணில் ஈரப் பதத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்?

நிலப் போர்வை போட்டு மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம்.

7. தென்னையில் எவ்வாறு நிலப் போர்வை அமைக்கலாம்?

வடக்கு கிழக்கு பருவ மழைக்கு முன், பச்சை மற்றும் காய்ந்த இலைகளைக் கொண்டு நிலத்தை போர்த்தவும்.  இதனால் மண்ணில் அங்கக பொருள் சேர்வதோடு, மண்ணின் வெப்பம் குறையும்.  கோடை காலத்தில் நிலத்தை எதுவும் செய்யால் விட்டுவிட வேண்டும்.  சமமான நிலங்களில், மழைக்காலத்தில், சிறிய குழிகள் தோண்டி அதிகமான நீரை சேமிக்கலாம்.  சாய்வான பகுதிகளில் அடுக்குகள் அமைத்து, அவற்றின் குருக்கே குழிகள் தோண்டி நீர் சேமிக்கலாம்.  இதனால் அதிகமான நீர் நிலத்தில் கீழ் இறங்கி சேமிக்கப்படுகிறது.  நீர் சேமிப்பிற்கு, 3-5 அடி இலைகளை அகற்றி தென்னங்கன்றுகளுக்கு நடவு செய்த 1-2 வருடங்களுக்கு நிழல் கொடுக்கவும்.  தென்னை மரத் தண்டின் வெப்பத்தை தணிக்க, 2-3 மீ உயரத்திற்கு சுண்ணாம்பு கரைசல் பூசவும்.

8.
தேங்காய் மட்டைகளைக் கொண்டு எவ்வாறு நிலப்போர்வை அமைக்கலாம்?
தேங்காய் மட்டைகளின் குழி வடிவம் மேல்பார்த்து இருக்கும் படியும் (100 எண்ணிக்கை) அல்லது காய்ந்த தென்னை இலைகள் (15 எண்ணிக்கை) அல்லது தென்னை மஞ்சி 10 செ.மீ உயரம் போட்டு, மரத்தை 1.8 மீ சுற்றளவில் நிலப் போர்வை அமைத்து கோடை காலத்தில் ஈரப்பதத்தை சேமிக்கலாம்.

9.
வறட்சியை எதிர்கொள்ளவும் குரும்பை உதிர்வதைத் தவிர்க்கவும் எவ்வாறு குழிகளில் தென்னை மஞ்சி/மட்டை இடலாம்?
தென்னை மரத்தை சுற்றியோ அல்லது மரங்களுக்கு இடையிலோ தென்னை மட்டை/மஞ்சி புதைத்து வறட்சி மற்றும் குரும்பை உதிர்வை தவிர்க்கலாம்.  தென்னை மரத்தின் 1.5-2.0 மீ சுற்றளவில், 30 செ.மீ அகலம் 60 செ.மீ ஆழம் கொண்ட குழிகளில், தென்னை மட்டைகளை மேல்வாக்காகப் போட்டு, புதைக்கவும்.  அல்லது 25 கிலோ தென்னை நார்க் கழிவு போடவும், இரண்டு தென்னை வரிசைகளுக்கு இடையில் மரத்திலிருந்து 3 மீ தூரத்தில் 45 செ.மீ ஆழம், 150 செ.மீ அகலம் கொண்ட குழிகளில் தென்னை மட்டைகளை புதைக்கலாம்.  தென்னை மட்டைகள்/தென்னை நார் கழிவுகளை நனைத்து ஈரப்பதத்தை சேமிக்கலாம்.  இதன் பலன் 5-7 வருடங்களுக்கு இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கூறுகிறது.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *