தென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள்

கற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் பூச்சிகள், அதன் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் தெரிந்து கொண்டால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

தென்னையை காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, ஈரியோபைட் சிலந்திப் பூச்சிகள் தாக்குகின்றன.

காண்டாமிருக வண்டு இளம், வளரும் கன்றுகளைத் தாக்கும். விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடிமட்டைகள், விரியாத பாளைகள் ஆகியவற்றில் சேதம் ஏற்படுத்தும்.

தாக்கப்பட்ட இலைகளின் குருத்துகள் விரிந்தவுடன் முக்கோண வடிவில் வெட்டியது போன்றும், பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்துகள் வளைந்தும், சுருண்டும் காணப்படும். இந்த வகை வண்டுகள் சராசரியாக 10 சதம் வரை சேதம் ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

எருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, வண்டுகள் போன்றவற்றை பொறுக்கி அழிப்பதுடன், கார்பரில் 2 கிராம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை எருக்குழியில் தெளிப்பதுடன், வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை ஊற்றி அழிக்கலாம்.

மேலும், கவர்ச்சிப் பொறிகளை 2 ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலம் ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்க முடியும்.

சிவப்புக் கூன் வண்டு:

இந்த வகை வண்டுகளின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க இயலாது. வண்டுகள் குருத்துப் பகுதிகளில் முட்டையிட்டு நேரடியாக குருத்தினுள் சென்று திசுக்களை உண்பதால் நடுக்குருத்து வாடி, பின்னர் அனைத்து மட்டைகளும் சரிந்து விடுகின்றன.

சில நேரங்களில் தண்டுப் பகுதியில் ஏற்படும் காயங்களின் மூலம் உள்சென்று திசுக்களை உண்டு, சிறிய துவாரம் வழியாக வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் மிகுந்த துர்நாற்றத்தை உண்டாக்கும்.

தாக்குதலைக் கட்டுப்படுத்த, மரக்காயங்களில் முட்டையிடுவதால், காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடிதாக்கிய மரங்கள், கூன் வண்டு தாக்கிய மரங்கள் இந்த வகை வண்டுகளுக்கு வாழ்விடமாக அமைவதால் அந்த மரங்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.

கருத்தலைப் புழு:

கீழ் அடுக்கிலுள்ள மட்டைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், இளமட்டைகள் மட்டும் பச்சையாகவும் தென்படும். தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தொலைவிலிருந்து பார்க்கும் போது கருகியது போன்று காணப்படும். இலைகளின் அடிப்பரப்பில் புழுக்களின் எச்சங்கள் காணப்படும்.

கருந்தலைப் புழுக்கள் பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளின் ஒளிச் சேர்க்கைத் திறன் குறைந்து 30 முதல் 40 சதம் வரை விளைச்சல் குறைவதோடு, வெயில் காலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரிப்பதுடன், டைக்குளோர்வாஸ் அல்லது மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 2 மில்லி கலந்து பாதிக்கப்பட்ட இலைகளில் படும்வகையில் தெளிக்கலாம்.

எரியோபைட் சிலந்திப் பூச்சி:

இவை 2 முதல் 6 மாத குரும்பைகளில் உள்ள காம்பின் தோட்டுக்கடியில் கூட்டமாக சேர்ந்து சாற்றை உறிஞ்சுவதால், குரும்பைகள் உதிர்கின்றன. இரண்டு மூன்று மாத குரும்பைகளில் முக்கோண வடிவில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத் திட்டுகளை ஏற்படுத்துகின்றன.

இந்த வகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மரங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் ஒரு சத மருந்து 5 மில்லி அல்லது வேப்பெண்ணெய் 30 மில்லி மருந்தை லிட்டருக்கு ஒரு மில்லி ஒட்டுத் திரவம் கலந்து ஜனவரி, மார்ச், மே மாதங்களில் 2 முதல் 6 மாத குரும்பைகளில் தெளித்தால் போதுமானது.

இதுதவிர, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக்கை மரத்துக்கு 200 மில்லி என்ற அளவில் 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 2 முறை வேர் மூலம் செலுத்தலாம். இதுபோன்ற ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மகசூல் இழப்பைத் தடுக்க முடியும் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *