தென்னை மரத்தினை தாக்கி சேதப்படுத்தும் வண்டுகளை கட்டுபடுத்த வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.வேளாண் துறையினர் வழங்கியுள்ள ஆேலாசனைகள் வருமாறு:
இளம், வளரும் பருவத்தில் உள்ள தென்னங்கன்றுகளை காண்டாமிருக வண்டு தாக்கும். இவற்றை எருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, வண்டுகள் போன்றவற்றைப் பொறுக்கி அழிக்க வேண்டும். கார்பாரில் 2 கிராம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீல் கரைத்து 3 மாதங்களுக்கு ஒரு முறை எருக்குழியில் தெளிப்பதுடன், வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை ஊற்றி அழிக்கலாம்.
கவர்ச்சிப் பொறிகளை 2 ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலம் வண்டுகளைக் கவர்ந்து அழிக்க முடியும். சிவப்புக் கூன் வண்டு தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டிபிடிக்க இயலாது. வண்டுகள் குருத்துப் பகுதிகளில் முட்டையிட்டு நேரடியாக குருத்தினுள் சென்று திசுக்களை உண்பதால் நடுக்குருத்து வாடி, பின்னர் அனைத்து மட்டைகளும் சரிந்து விடுகின்றன. சில நேரங்களில் தண்டுப்பகுதியில் ஏற்படும் காய்களின் மூலம் உள்சென்று திசுக்களை உண்டு, சிறிய துவாரம் வழியாக வெளியேற்றப்படும் கழிவுப்பொருள்கள் மிகுந்த துர்நாற்றத்தை உண்டாக்கும். இடி தாக்கிய மரங்கள், கூன்வண்டு தாக்கிய மரங்கள் கடும் பாதிப்பை ஏறுபடுத்தும் வண்டுகளுக்கு வாழ்விடமாக அமைவதால் அந்த மரங்களை அப்புறப்படுத்திட வேண்டும்.
கருந்தலைப்புழு தாக்குதலால் கீழ் அடுக்கிலுள்ள மட்டைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், இளமட்டைகள் மட்டும் பச்சையாகவும், தென்படும். தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தொலைவிலிருந்து பார்க்கும் போது கருகியது போன்று காணப்படும். இலைகளின் அடிப்பரப்பில் புழுக்களின் எச்சங்கள் காணப்படும். கருந்தலைப்புழுக்கள் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். தாக்குதலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எடுப்பதுடன், டைக்குளோர்வாஸ் அல்லது மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 2 மில்லி அளவில் கலந்து பாதிக்கப்பட்ட இலைகளில் படும் வகையில் தெளிக்கலாம்.
ஈரியோபைட் சிலந்திப்பூச்சி 2 முதல் 6 மாத குரும்பைகளில் உள்ள காம்பின் அடியில் கூட்டமாகச் சேர்ந்து சாற்றை உறிஞ்சுவதால், குரும்பைகள் உதிர்கின்றன. இரண்டு மூன்று மாத குரும்பைகளில் முக்கோண வடிவில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திட்டுகளை ஏற்படுத்துகின்றன. இந்த வகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மரங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் ஒரு சத மருந்து 5 மில்லி அல்லது வேப்ப எண்ணெய் 30 மில்லி மருந்தை லிட்டருக்கு ஒரு மில்லி ஒட்டும் திரவம் கலந்து ஜனவரி, மார்ச், மே மாதங்களில் 2 முதல் 6 மாத குரும்பைகளில் தெளிக்கலாம்.
தவிர தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக்கை மரத்துக்கு 200 மில்லி என்ற அளவில் 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 2 முறை வேர் மூலம் செலுத்தலாம்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்