தென்னையை தாக்கும் கருத்தலை புழு

ஓசூர் தாலுகாவில் தென்னை மரங்களை கருந்தலை புழுக்கள் அதிகளவில் தாக்கி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த, வேளாண் அலுவலர்கள் கிராமங்களில் முகாமிட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று பாசனப்பகுதிகளிலும், படுகைகளிலும் அதிகளவு தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.ஓசூர், பாகலூர், தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, சூளகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் தென்ணை மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது, தென்னை மரங்களில் அதிகளவு கருந்தலை புழு தாக்குதல் காணப்படுகிறது.

இந்த தாக்குதலால் தேங்காய் மகசூல் பாதிக்கப்படுவதோடு, அறுவடை செய்யப்படும் தேங்காய்கள் தரமற்றவையாக உள்ளது. ஓசூர் தாலுகாவில் காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, தொரப்பள்ளி, குடிசாகனப்பள்ளி, ஒன்னல்வாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் கருந்தலை புழு தாக்குதல் தென்படுகிறது.

இந்த புழுக்கள் தென்னை மரத்தை முற்றிலும் தாக்கி சேதப்படுத்துகிறது. இதனால், தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து ஓசூர் வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் கூறியதாவது:

  • ஜனவரி முதல் மே மாதம் வரை தென்னை மரங்களில் கருந்தலைப்புழு தாக்குதல் தென்படுகிறது.
  • நோய் தாக்கப்பட்ட தென்னையில், புழுக்கள் இலை திசுக்களில் உள்ள பச்சையத்தை சுரண்டி சாப்பிடுகிறது.
  • பெண் பூச்சிகள் மங்கலான வெண்ணிறம் கொண்ட முட்டைகளை இலைகளின் அடிப்பாகத்தில் அல்லது பழைய புழுக்கூடுகளின் அருகே இடும்.
  • இந்த முட்டையில் இருந்து ஐந்து நாட்களில் வெளியேறும் கருந்தலை புழு, மற்ற தென்னை மரங்களுக்கு பரவாமல் தடுக்க தாக்கப்பட்ட ஓலைகளை எரித்து விட வேண்டும்.
  • ஒட்டுண்ணிகளான பேராசியரோலா, நேப்பாண்டிஸ் அல்லது பிரகான்பிரேவிகார்னிஸ் ஆகியவற்றை மரத்தில் விட்டால் தென்னையில் புழுதாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • வளர்ந்த மரங்களில் கருந்தலை புழுதாக்குதலை கட்டுப்படுத்த, குளோராவாஸ் 2 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து, தாக்குதல் அதிகமுள்ள மரங்களில் இலைகளின் அடிப்பாகத்தில் நனையும்படி தெளிக்க வேண்டும்.
  • காய்ப்புக்கு வந்த மரங்களில் தாக்குதலை கட்டுப்படுத்த, மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில், மரத்தின் தண்டு பாகத்தில் சாய்வாக துளையிட்டு அதனுள் மோனாகுரோட்டாபாஸ் 5 மில்லி, தண்ணீர் 5 மில்லி கலந்து ஊற்றி களி மண்ணால் முடிவிட வேண்டும்.
  • வேர் மூலம் கட்டுப்படுத்துவதாக இருந்தால், நன்கு வளர்ந்த வேரினை சாய்வாக வெட்டிய பின் பாலிதீன் பையில் மோனோகுரோட்டாபாஸ் 10 மில்லி மற்றும் 10 மில்லி தண்ணீர் கலந்த கலைவையில் வேரினை இட்டு இருக்கமாக கட்டிவிட வேண்டும். இந்த முறையை அதிகமாக தாக்குதல் உள்ள போது மட்டும் கடைபிடிப்பது அவசியம்.
  • மருந்திட்ட, 40 நாட்கள் வரை காய் பறிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு மரம் ஒன்றிற்கு ஆறு ரூபாய் வரை செலவாகும். கிராமங்களில் முகாம்கள் மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
  • விவசாயிகள் பயன்பெறும் விதமாக கருந்தலை புழு தடுப்பு முறைகள் குறித்து தமிழ் மற்றும் தெலுங்கு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *