கேரளாவில் பெரும்பாலான தென்னை மரங்களை தாக்கி அழித்த “கேரள வாடல்’ நோய், இப்போது தமிழகத்திலும் தென்படத் துவங்கியுள்ளது.
இது பற்றி, கோவையில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் எழுப்பியபிறகு விழித்துக்கொண்ட வேளாண் துறை அதிகாரிகள், ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர்.
தமிழகத்தில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் முதன்மையானது கோவை மாவட்டம். இங்குள்ள விவசாயிகளில் பலர், “ஈரியோபைடு‘ பாதிப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், இப்போது அடுத்த புதிய நோய் ஒன்றும், தென்னையை தாக்க துவங்கியுள்ளது.
இது பற்றி கோவையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பி.ஏ.பி., ஆழியாறு திட்டக்குழு தலைவர் சின்னசாமி பேசியதாவது:
- பொள்ளாச்சி அருகே 90 சதவீதம் விவசாய நிலத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- இங்கு கடந்த சில மாதங்களாக, “கேரள வாடல்’ என்ற நோய் தென்னையை தாக்கி வருகிறது.
- மணக்கடவு கிராமத்தில் பெரும்பகுதி தென்னை மரங்கள், இந்நோய் தாக்கி அழிந்து விட்டன. வேட்டைக்காரன்புதூர் அடுத்த சேத்துமடை கிராம தென்னந்தோப்புகளில் இந்நோய் தென்படத் துவங்கியுள்ளது.
- இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை.
- நோய் தாக்கினால், உடனடியாக தென்னை மரத்தை வெட்டி வீழ்த்தி விட வேண்டும்; இல்லையெனில், மற்ற தென்னைகளுக்கும் நோய் பரவி விடும்.
- கேரளாவில், திருச்சூர் முதல் கொச்சி வரை, இந்நோய் தாக்கியதில் 90 சதவீதம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு விட்டன.
- நோய் ஆரம்ப கட்டத்தில், மரத்தின் மேற்பகுதியில் மஞ்சள் நிறம் தென்படத்துவங்கும்.
- நாளடைவில், மரம் முழுவதும் கறுப்பாகி, அழிந்து விடும்.
- “லேஸ்பின் பக்’ என்ற பூச்சி தான், இந்நோய் பரவக்காரணம்.
- ஒரு மரத்தில் இருந்து சாறு முழுவதையும் உறிஞ்சும் இந்த பூச்சி, பின் அடுத்த மரத்துக்கு தாவி விடுவதால், தோப்பில் இருக்கும் மரங்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகின்றன.
- எங்கள் தோப்பிலேயே 15 மரங்கள் அழிந்து விட்டன. வேளாண் பல்கலை மூலம் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மருந்துகளை கொண்டு, நோயை தடுக்கும் முறை, பரிசோதனை நிலையில் உள்ளது.
நோய் பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட மரங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.இவ்வாறு, சின்னசாமி பேசினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்