தோட்டக்கலை பயிர்களில் மட்கும் உரமாக தென்னை நார்க்கழிவு பயன்படுத்துவது, பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பே.காந்திமதி கூறியதாவது:
தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கும்போது நார்க்கழிவுகள் கிடைக்கின்றன.
இதிலுள்ள மூலப்பொருட்களால் தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது. நார்க்கழிவில் உள்ள தழைச்சத்து விகிதத்தை குறைக்க, லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவை குறைக்க, தென்னை நார்க்கழிவு மக்க வைக்கப்படுகிறது.
நன்கு மட்காத கழிவை நிலத்தில் சேர்த்தால், மண் சத்துக்களை கிரகித்து சிதைவடையும். அதனால் நிலத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பயிர் பாதிப்படையும்.
நார்க்கழிவு கம்போஸ்ட்:
தென்னை நார்க்கழிவு மட்கும் உரம் தயாரிக்க, நாரற்ற தென்னை நார்க்கழிவுகளை சேகரிக்க வேண்டும். ஏனெனில் இந்த நார்கள் மற்ற கழிவுகளையும் மக்குவதில் இருந்து தாமதப்படுத்தும். எனவே மட்குவதற்கு முன் நார்களை பிரித்து எடுக்க வேண்டும். மட்கும் உரம் தயாரிக்க தென்னை மரங்களுக்கு இடையிலோ அல்லது ஏதேனும் ஒரு மர நிழலையோ தேர்வு செய்ய வேண்டும்.
தரை நன்கு சமப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உரக்குவியலை தரை மட்டத்திற்கு மேலே அமைக்க வேண்டும். நார்க்கழிவை மட்க வைக்க 60 சதவிகிதம் ஈரப்பதம் அவசியம். அதே சமயம் கழிவில் இருக்கும் தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றிவிட வேண்டும்.
மக்கிய உரம் முதிர்வடைதல்:
பொதுவாக கழிவுகள் 60 நாட்களில் மக்கி உரமாகி விடும். இதன்படி கழிவுகளின் கொள்ளளவு குறைந்து அதன் உயரம் 30 சதவிகிதம் குறைந்து இருக்கும். மக்கிய கழிவுகளின் நிறம் கருப்பாக மாறி அதன் துகள்கள் சிறியதாக மாறி இருக்கும். மக்கிய உரத்தில் இருந்து மண் வாசனை வரும்.
மக்கிய உரத்தை சரியான நேரத்தில் சேகரிக்க வேண்டும். மக்கிய உரத்தில் உள்ள சூட்டை தணிக்க குவியலை கலைத்து, நிலத்தில் நன்றாக பரப்ப வேண்டும். இவ்வாறு உரத்தை காற்று உள்ள நிழலான இடத்தில் குவியலாக இட்டு பாதுகாக்க வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும்.
நார்க்கழிவின் பயன்பாடுகள்:
தென்னை நார்க்கழிவு அதன் எடையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான நீரை ஈர்த்து வைத்து கொள்ளும் திறன் கொண்டது. எனவே மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம், சுண்ணாம்பு, மக்னீசியம் போன்ற பயிர்ச்சத்துக்கள் உள்ளன.
எனவே இது ஒரு செயற்கை உரத்தோடு நன்கு செயலாற்றுகிறது. மண் வாழ் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது. பொருளாதார ரீதியில் தென்னை மட்கும் நார்க்கழிவை வாங்கி அதிகளவு நிலத்தில் இடுவது கடினம். எனவே விவசாயிகள் சொந்தமாக தயாரித்து வயலில் இட்டு, அதிக விளைச்சல் பெறலாம் என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்