தென்னையை மட்டும் நம்பி, தற்போதுள்ள தேங்காய் விலை நிர்ணயத்தால் தவிக்கும் விவசாயிகள், தென்னைகளுக்கிடையே ஊடுபயிர் சாகுபடி செய்து வருமானம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனைமலையை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர், மதுராமகிருஷ்ணன், எம்.ஈ., பொறியியல் முடித்த பட்டதாரி விவசாயி. கோட்டூரை அடுத்த நரிக்கல்பதியில் சந்தோஷ் ஆர்கானிக் பார்ம் என்ற பெயரில், ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் செய்துவருகிறார்.
தென்னையை மட்டும் சாகுபடி செய்யாமல், பல்வகை ஊடுபயிர்களை பயிரிட்டு வருமானம் ஈட்டுவதுடன், ஊடுபயிர்களின் கழிவுகளை இயற்கை உரங்களாக பயன்படுத்துகிறார்.
ஆனைமலை ஒன்றியத்தில் முன்னோடி விவசாயியாக விளங்குகிறார்.ஊடுபயிர் பற்றி மதுராமகிருஷ்ணன் தனது அனுபவங்களை கூறுகையில்,
- ”என் அப்பா காலத்தில் இருந்து விவசாயம் தான் எங்கள் தொழில், அப்பா இறந்த பின், நானும் விவசாயத்தில் ஈடுபட்டேன்.
- ஆரம்பத்தில் தென்னையை மட்டும் சாகுபடி செய்து வந்தேன் பிறகு, நிலத்தை நான்கு பகுதிகளாக பிரித்து கோகோ, கரிப்பலா, ஜாதிக்காய், பாக்கு, நாவல் உள்ளிட்டவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன்.
- ஊடுபயிர் சாகுபடியின் நன்மை குறித்து நம்மாழ்வார், சுபாஷ்பாலேகர், நாராயணரெட்டி உள்ளிட்டோரிடம் பயிற்சி பெற்றுள்ளேன்.
- அதிக கலப்பு பயிர்அதிக கலப்பு பயிர் சாகுபடி செய்வதுதான், இயற்கை வேளாண்மையின் விதிமுறை. ஊடுபயிர் சாகுபடியால், அவற்றின் இழைகள் மூடாக்கு முறையில் இயற்கை உரமாக பயன்படுகிறது.
- எல்லா பயிர்களுக்கும் நுாறு சதவீத சூரிய ஒளி தேவைப்படுவதில்லை. கோகோ, வாழை,ஜாதிக்காய் உள்ளிட்டவற்றுக்கு ஐம்பது சதவீதம் போதுமானது.இது போன்ற ஊடுபயிர்களை தென்னைகளுக்கு இடையே,வெற்று நிலத்தில் விதைப்பதன் மூலம், மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதை தடுக்கலாம். காற்றை தடுக்கும் வகையில் ஊடுபயிர் இருப்பின், காற்றோட்டத்தால் ‘களவாடப்படும்’ மண்ணின் ஈரப்பதத்தை தடுக்கலாம்.
- எடுத்துக்காட்டாக ஊடுபயிரால், சூரிய ஒளியினால் மண்ணில் 30 லி., தண்ணீர் ஆவியாவதை தடுத்து, ஊடுபயிர் 10 – 15 லி., தண்ணீர் எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர் ஆவியாகாமல், மண்ணில் இருக்கும். ஊடுபயிரால் லாபம் மட்டுமல்ல, இயற்கை உரமும் கிடைக்கிறது.
- மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதுடன், பயிர்களுக்கு தேவைப்படும் பாசன நீரின் அளவும் குறையும். மண்புழுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
- தற்போது நிலவும் கடும் வறட்சியால், ஊடுபயிர்கள் மூலம் தண்ணீரை சிக்கனமாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தலாம்.சாகுபடியாளர்கள் கவனத்திற்கு…ஊடுபயிர் முறையை பின்பற்ற நினைக்கும் விவசாயிகள்,மழை குறைவாக உள்ள காலத்தில் பயிரிட்டால் அதிக நீர் தேவைப்படும். அதனால், மழை பெய்யும் பருவங்களில் விதைப்பை தொடங்கலாம்.
- கலப்பு பயிர்களை அதிகமாக ஊடுபயிராக பயன்படுத்துவதன் மூலம் ஒரு பயிர் கைவிட்டாலும் மற்றொன்றில் வருமானம் பெற முடியும்.
- சிறு, குறு விவசாயிகள் முதலில் ஒரு ஏக்கரில் ஊடுபயிர் சாகுபடி செய்து, படிப்படியாக சாகுபடி பரப்பளவை அதிகரிக்கலாம். கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்வதின் மூலம், ஊடுபயிர் பற்றிய அனுபவம் கிடைப்பதுடன், சாகுபடி செய்யாத நிலங்களின் வருமான இழப்பையும் ஈடுகட்டலாம்.
- ஏனெனில், ஊடுபயிர் சாகுபடியில் வருமானம் கிடைக்க நீண்ட நாட்களாகும்.ஆனாலும் ஊடுபயிர் சாகுபடிக்கு அதிக நீர் தேவைப்படும், விரைவில் லாபம் கிடைக்காது என்ற எண்ணத்தை விவசாயிகள் மாற்றிக்கொள்ள வேண்டும்
இவ்வாறு, முன்னோடி விவசாயி மதுராமகிருஷ்ணன் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்