தென்னை மரத்தை அழிக்க உருவாகியிருக்கும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி கே.கே.ஆர்.லெனின் பஞ்சகவ்யம் மற்றும் திறன் நுண்ணுயிரியை பயன்படுத்த முடியுமென கண்டறிந்துள்ளார்.
இது சாத்தியமானதுதான் என காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விரிவாக்கத்துறை இணைப் பேராசிரியர் எஸ்.ஆனந்த்குமார், கல்லூரி மாணவி வீ.ராஜாமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் ஆனந்த்குமார் கூறியது:
- ஒருவகை காளானால் ஏற்படும் இந்த வாடல் நோய், தென்னையை அடியோடு அழித்துவிடுகிறது.
- அடித்தண்டு அழுகும் நோய் எனவும் இதற்கு பெயர்.
- கீழ் பாகத்தில் உருவாகி மேல் நோக்கி பரவி, மட்டைகளை அழித்து, மரத்தையே அழிக்கவல்லது இந்நோய்.
- இதனை பஞ்சகவ்யம் முறையிலும் திறன் நுண்ணுயிரி மூலமும் கட்டுப்படுத்த முடியும்.
திறன் நுண்ணுயிரி தயாரிக்க தேவையான பொருள்கள்:
- 10-க்கும் மேற்பட்ட மரம், செடி, கொடிகளின் வேர் பகுதி மண் அரை கிலோ, பரங்கிப் பழம் 2 கிலோ, பப்பாளிப் பழம் 2 கிலோ, சாராய வெல்லம் 1 கிலோ, குடிநீர் தேவையான அளவு, நாட்டுக்கோழி முட்டை 2 அல்லது 3, வாய் அகன்ற பிளாஸ்டிக் பாத்திரம் 20-30 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
செய்முறை:
- நன்கு செழிப்பான, நோய் தாக்கமில்லாத 10 வகையான மரம், செடி, கொடி வகைகளின் வேர்ப்பகுதியிலிருந்து வேர் மற்றும் மண்ணை சேகரித்துக்கொள்ள வேண்டும்.
- 1 மரம், செடி, கொடி வகைகளிலிருந்து 500 கிராம் வீதம் 10 மரம், செடி, கொடி வகைகளிலிருந்து மண்ணை சேகரிக்கலாம்.
- இதனை பிளாஸ்டிக் பாத்திரத்தில் எடுத்து கொண்டு, பரங்கியும், பப்பாளிப்பழம் மற்றும் சாராய வெல்லம் ஆகியவற்றை பிசைந்து போடவேண்டும்.
- பிறகு நல்லநீரை மண், பப்பாளி, பரங்கி, வெல்லம் ஆகியவை மூழ்கும் வரை ஊற்றவேண்டும்.
- பிறகு முழு நாட்டுக்கோழி முட்டையை அதனுள் போடவேண்டும்.
- பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு மூடி, நிழலில் வைக்க வேண்டும்.
- காற்றோட்டத்துக்காக காலையிலும், மாலையிலும் பிளாஸ்டிக் பாத்திரத்தை திறந்து மூடவேண்டும்.
- 30 நாள்களுக்குப் பிறகு திறன் நுண்ணுயிரி கலைவையை பயன்படுத்தலாம். 6 மாதம் வரை இக்கலவையை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
- பாதிக்கப்பட்ட தென்னையின் அடிப்பாகத்தில் மூடாக்கு எனப்படும் முறையை பயன்படுத்தி (தென்னை ஓலை அல்லது மட்டையால் வேர் பகுதியை மூடுதல்) அதன்மேல் நுண்ணுயிரி கலவையை ஊற்ற வேண்டும்.(30 லிட்டர் நீருடன் 1 லிட்டர் திறன் நுண்ணுயிரி கலந்து தெளிக்கலாம்).
- இக்கலவையை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிக்கிறது.
- இதனால் இடுபொருள் செலவு குறைவு, ஈரப்பதத்தை கட்டுப்படுத்துதல், குறைவான கூலி, காய்களின் நிறம், வடிவம், அளவு மற்றும் சுவை அதிகரிப்பு.
- பஞ்சகவ்யம் மற்றும் திறன் நுண்ணுயிரி கலவை வாடல் நோயால் மரம் பாதிக்காத வகையில் காக்கும் என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்