பலவகையிலும் பலன் அளிக்கும் தென்னை!

 

தென்னை

தென்னை… இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெறா (Cocos nucifera L.). இந்தியா மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்பில் வளரக்கூடிய தென்னையில் அனைத்து உறுப்புகளும் பயன்தரக்கூடியவை. சங்க நூல்களில் தென்னை மரத்தை தெங்கு என்றும், தாழை என்றும் அழைத்திருக்கிறார்கள். தென்னிந்தியா குறிப்பாக தென் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களின் சமையலில் தேங்காய் முக்கிய இடம்பிடிக்கிறது.

இளநீர்

தென்னை மரத்தில் பூ பூத்து வளர்ந்த நிலையில் கிடைப்பது இளநீர். செவ்விளநீர், பச்சை இளநீர், சிவப்புநிற இளநீர் என வேறுபாடுகள் இருந்தாலும் இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, ஜமைக்கா, பிரேசில் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கும் இளநீரே சிறந்தவை. பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள புரதம் தாய்ப்பாலில் உள்ள புரதத்துக்கு இணையானது.

இளநீர்

இன்றைக்கு நம்மில் பெரும்பாலோரின் காலை உணவாக இளநீர் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் உண்பது ஏற்புடையதல்ல; உண்டால் வயிற்றில் புண்ணை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், இளநீருக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. குறிப்பாக வாதம், பித்தம், கபம் போன்றவற்றை போக்கக்கூடியது; வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.  வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு, இளநீர் சிறந்ததொரு டானிக்காகச் செயல்படுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது, இளநீரை உட்கொள்வதன்மூலம் நிவாரணம் கிடைக்கிறது. குறிப்பாக அவசர நிலையில் நரம்புகளின்மூலம் இளநீர் செலுத்தப்படுவதுண்டு. காலரா நோயாளிகளுக்கு, இளநீரின் வழுவழுப்புத்தன்மையும் உப்புத்தன்மையும் மிகவும் நல்லது. அம்மைநோய், வயிற்றுப்போக்கு காலங்களில் இளநீர் நல்ல மருந்தாகச் செயல்படும். மேலும், சிறுநீரகத்தை சுத்திகரிப்பதோடு விந்து எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் இது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாகும். ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருள்களை அகற்றும் திறன் படைத்தது இளநீர்.

தேங்காய்

தென்னையின் பழமே தேங்காய். இதைத் தெங்கம்பழம் என்றும் சொல்வார்கள். கெட்டியாக இருப்பதால் தேங்காய் என்றே அழைக்கிறார்கள். தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட் (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடியது. உடல் எடையையும் குறைக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக Medium Chain Fatty Acid தேங்காயில் அதிகம் இருப்பதால் அது உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கிறது.

தேங்காய்

புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய்ப்பால் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. தேங்காயை அரைத்து அதனுடன் நாட்டுச்சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்.

கொப்பரை

தேங்காய் அளவுக்கு மீறி முற்றியிருந்தால் அதன் உள்ளே இருக்கும் நீர் முற்றிலும் வற்றிவிடும். இத்தகைய முற்றிய தேங்காயே கொப்பரை எனப்படும். நீர் முழுவதும் வற்றாத தேங்காயை வெயிலில் உலர்த்தி கொப்பரை ஆக்குவதும் உண்டு. அதிலிருந்தே எண்ணெய் எடுக்கப்படுகிறது. முற்றிய தேங்காய் ஆண்மையை பெருக்குவதோடு அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தாமதப்படுத்த உதவும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து, ஊற வைத்து குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும். முகம் பொலிவுப் பெற உதவும். கேரளத்துப்பெண்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர்.

நீரா பானம்

நீரா பானம்

இவைதவிர நீரா என்ற பானம் தயாரிக்கப்படுகிறது. நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட ஒரு பானம். இது மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானம். ஆல்கஹால் இல்லாததால் உடல்நலனுக்கு ஊட்டமளிக்கும் நல்லதொரு பானமாகும்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *