வாழைக்கு உரமாகும் தேங்காய் நார்க் கழிவுகள்

கோபி அருகே தேங்காய் நார்க் கழிவுகளை வயலுக்கு விவசாயிகள் உரமாகப் பயன்படுத்துகின்றனர்.

கோபி அருகிலுள்ள பவளமலை அருகில் விவசாயி ஒருவர் தேங்காய் நார் மூலம் கயிறு தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். தேங்காய் நார்க் கயிறு தயாரித்த பின்னர் அதில் எஞ்சும் தேங்காய் நார்க் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை அவரது கள்ளிப்பட்டியில் உள்ள வயல்களில் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி, மழையின்மை காரணமாகவும் பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பு இல்லாத காரணத்தாலும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்காலில் 2-ஆம் போகத்திற்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்ப் பாசனத்தை நம்பியுள்ள 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 95 சதவீதம் நிலங்கள் தரிசாகப் போடப்பட்டுள்ளன. கிணற்றுப் பாசன வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே 2-ஆம் போகத்தில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகியவற்றை சாகுபடி செய்கின்றனர்.

தற்போது பா.நஞ்சகவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது வயலில் வாழை பயிரிட உள்ளார். அதற்காக வயல்களில் உள்ள களிமண் கட்டிகளை உடைக்க “ரோட்டாவேட்டர்’ மூலமாக உழவு செய்ய உள்ளார். இதற்காக, தேங்காய் நார்க் கழிவுகளை வயலில் ஆங்காங்கே குவித்து வைத்துள்ளார்.

ரோட்டாவேட்டர்’ மூலமாக உழும்போது நார்க்கழிவும் சேர்த்து உழவு செய்யப்படும்.

அதன் பின்னர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது மண் நீண்ட நாட்கள் ஈரப்பதத்துடன் இருக்கிறது. இதனால் வாழைக் கன்றுகளின் வேர்கள் ஆழமாகச் சென்று, செழிப்பான வாழை பழங்களைத் தருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

வறட்சிக் காலத்தில் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த சொட்டுநீர்ப் பாசன முறைகளைப் பின்பற்றிவரும் நேரத்தில், வயல்களில் பயிருக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் நீண்ட நாட்கள் ஆவியாகாமல் இருக்க, இயற்கை முறையில் தேங்காய் நார்க் கழிவுகளைப் பயன்படுத்துவது விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *