மயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்டத்தில் ஆடிப்பட்டம் மானாவாரி நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. சாதாரண முறையில் நிலக்கடலை விதைப்பு செய்வதால் சரியான இடைவெளியில் சீராக விதைப்பு பணி மேற்கொள்ள இயலாது. இதனால் சில இடங்களில் செடிகள் அடர்த்தியாகவும், சில இடங்களில் அதிக இடைவெளியிலும் இருக்கும். காய்கள் பிடிக்கும் திறன் சீராக இல்லாமல் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
இதனை தவிர்க்க தற்போது டிராக்டர் மூலம் இயக்கப்படும் நிலக்கடலை விதைப்பு இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 ஏக்கர் வரை விதைப்பு செய்யலாம்.
இயந்திரம் மூலம் விதைப்பு செய்வதால் சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்கும் வண்ணம் சரியான இடைவெளியில் விதைக்க முடியும். இதனால் செடிகளில் பக்கக்கிளைகள் கூடுதலாக உருவாக வாய்ப்பு உள்ளது. பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் திறன் அதிகரிக்கும்.
மேலும் ஊடுபயிராக 6 முதல் 8 அடி இடைவெளியில் துவரை, உளுந்து, பச்சைப்பயிறு அல்லது தட்டைப்பயிறு விதைப்பு செய்து கூடுதல் லாபம் பெறலாம்.
இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.400 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
இம்மானியத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் நில உரிமைக்கான சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், விதைப்பு செய்வதற்கான புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
10. செண்டு. நிலத்தில். மானாவாரி என்ன பயிர் செய்யலாம்