நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

புரோடீனியா புழு:

  • புழுக்கள் நிலக்கடலை செடியின் குருத்து மற்றும் இலைகளை கடித்து தின்பதால் பயிர்கள் ஆடு, மாடுகள் மேய்ந்ததுபோல் காணப்படும்.
  • இதன் அந்துப்பூச்சி உருண்டை வடிவ முட்டைகளை குவியலாக இலையின் மேற்பரப்பில் இட்டு அதை கம்பளி ரோமங்களால் மூடி வைக்கும்.
  • இளம் புழுக்கள் பச்சை நிறமாகவும் பின்னர் கருப்புப் புள்ளிகளுடன் நிறமாற்றம் பெறும்.
  • இப்புழுவின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் உடல்நிறம் மாறிவரும். பழுப்பு நிற அந்துப்பூச்சியின் முன் இறக்கைகளில் கருப்பு நிறப் பின்னணியில் மஞ்சள் நிற குறுக்கு கோடுகள் இருக்கும். பின் இறக்கைகள் வெண்மை நிறமாக இருக்கும்.

அசுவினி:

  • வளர்ந்த பூச்சிகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக இருக்கும்.
  • இலைகள் பச்சைப் புள்ளிகளாகவும், பச்சையமின்றியும் காட்சியளிக்கும்.
  • செடியின் கொழுந்துப்பகுதி சாய்ந்தும் வளர்ச்சி குன்றியும் காணப்படும்.

இலைப்பேன்கள்:

  • இளங்குஞ்சுகளும் வளர்ந்த பூச்சிகளும் சாறை உறிஞ்சி சேதத்தை உண்டுபண்ணும்.
  • முற்றிய இலையின் மேற்பரப்பில் வெள்ளை புள்ளிகளாக காட்சியளிக்கும்.
  • இலையின் மேற்பரப்பில் வரிக் கோடுகளில் பூச்சியின் கருப்பு நிறக் கழிவுகள் இருக்கும்.
  • தளிர் இலைகளின் மேற்பரப்பு ஒழுங்கற்ற மஞ்சள் கலந்த பச்சைநிற தொகுதிகளாகவும், அடிப்பாகம் பழுப்புநிற கோடுகளாகவும் வெளிறியும் காணப்படும்.
  • இளங்குஞ்சுகள் மஞ்சள் நிறமாகவும் வளர்ந்த பூச்சிகள் கருப்பு நிறமாகவும் இருக்கும்.

தத்துப்பூச்சிகள்:

  • தத்துப்பூச்சிகள் பச்சை நிறத்தில் காணப்படும்.
  • இளம் குஞ்சுகளும் வளர்ந்த பூச்சிகளும் இலையின் அடிப்பாகத்தில் அமர்ந்து சாறை உறிஞ்சும்.
  • தாக்கப்பட்ட இலை யின் நுனி பகுதிகள் மஞ்சள் நிறத்துடன் வளர்ச்சி குன்றி காணப்படும்.

பூச்சிக்கட்டுப்பாடு:

  • முன்பட்ட பருவத்தில் சாகுபடி செய்வதன் மூலம் சுருள் பூச்சியின் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.
  • கோடை மழையைத் தொடர்ந்து வயலை உழவு செய்து கூட்டுப்புழுவை வெளிக்கொணர்ந்து சேகரித்து அழிக்கலாம்.
  • மழைக்குப் பின்னே தொடர்ந்து மூன்று நாட்க ளுக்குக் குறையாமல் விளக்குப் பொறிகள் வைத்தல் மற்றும் சொக்கப்பான் கொளுத்துதல் மூலம் தாய் அந்துப்பூச்சிகளை எளிதாக கவர்ந்து அழிக்கலாம்.
  • ஊடுபயிராக கம்பு பயிரை 1:4 என்ற விகிதத்தில் பயிரிடுவதால் சுருள் பூச்சியின் தாக்குதலை குறைக்கலாம்.
  • ஆமணக்குப்பயிரை நிலக்கடலை விதைத்த வயலைச் சுற்றியுள்ள பகுதி யில் பொறிப்பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிடுவதன் மூலம் புரோடீனியா புழுக்களையும் இனக் கவர்ச்சி பொறிகளை ஒரு ஏக்கருக்கு 5 வீதம் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளையும் கவர்ந்து அழிக்கலாம்.
  • உயிரியல் முறையில் எக்டருக்கு 250 வைரஸ் நச்சுயிரி தாக்கிய புழுக்களில்இருந்து கிடைக்கும் என்பிவி நச்சுயிரி திரவத்துடன் சென்டோவிட் அல்லது டீப்பால் அல்லது டிரைட்டான் அல்லது காதி சோப்புக்கரைசல் போன்ற நனைப்பான்கள் 250 மி.லி.யுடன் 2.5 கிலோ வெல்லம் மற்றும் 500 லிட்டர் நீருடன் கலந்து மாலை வேளைகளில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 20,000 விகிதத்தில் பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை வெளியிடவும்.
  • கிரைசோபா என்ற இரை விழுங்கியை ஒரு ஏக்கருக்கு 2000 வீதம் வெளியிடலாம்.
  • இயற்கை எதிரிகளான ஒட்டுண்ணி, இரை விழுங்கிகள், சிலந்திகள் போன்றவை வளர்த்துவிடுவது ஆகியவற்றை கையாளலாம்.
  • 5 சதம் வேப்ப விதைச்சாறுடன் ஒட்டும் திரவம் அல்லது காதி சோப்புக்கரைசல் கலந்து விதைத்த 15 மற்றும் 25வது நாட்களில் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். (ஒரு ஏக்கருக்கு வேப்ப விதை 10 கிலோ – 200 லி தண்ணீர்).
  • கார்பரில் 10 சதம் தூள் அல்லது பெனிட்ரோதியான் 2 சதம் தூள் மருந்தை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வீதம் தூவி சுருள் பூச்சியை கட்டுப் படுத்தலாம்.
  • அல்லது திரவ மருந்து களை ஒரு ஏக்கருக்கு டைகுளோர்வாஸ் 250 மிலி, மானோகுரோட்டோபாஸ், பாசலோன், குயினால்பாஸ், பென்தோயேட் 300 மிலி, இமிடாகுளோபிரிட் 60 மி.லி. போன்ற மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
  • புரோடீனியா புழுக்களை கட்டுப்படுத்த பெனிட்ரோதியான் 300மிலி, குயினால்பாஸ் 300 மிலி, பென்தியான் 200மிலி, பென்தோ யேட் 500மிலி, டைகுளோர்வாஸ் 300மிலி, புரோபனோபாஸ் 800 மிலி, வேப்ப எண்ணெய் கரைசல் 2 சதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • புழுக்களின் தாக்குதல் அதிக அளவில் இருப்பின் குயினால்பாஸ் 1.5 சத தூளை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வீதம் காலை பனிப்பதத்தில் தூவி கட்டுப்படுத்த வேண்டும்.அல்லது மானோகுரோட்டோபாஸ் அல்லது குயினால்பாஸ் அல்லது பென்தோயேட் 300மி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப் படுத்தலாம்.
  • புரோடீனியா புழுவினை கட்டுப்படுத்த எக்டருக்கு 12.5 கிலோ அரிசித்தவிடு, வெல்லம் 2.5 கிலோ, நனையும் கார்பரில் 1.25 கிலோவினை உருண்டை பிடிக்கின்ற பக்குவம் வரை தண்ணீர் கலந்து பிடித்த உருண்டைகளை செடியின் அருகிலும் வரப்பின் ஓரங்களிலும் மாலை வேளைகளில் வைத்து புழுக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இமிடாகுளோபிரிட் என்ற மருந்தினை ஒரு ஏக்கருக்கு 40 மிலி வீதம் தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தகவல்:  ஜட்டா கவிதா, சி.விஜயராகவன் மற்றும் ப.பாலசுப்பிரமணியன்
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு-630 102.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *