நிலக்கடலை பயிரில் பகலில் தூங்கி, இரவில் தாண்டவமாடும் புரோடினியா புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்
- புரோடினியா புழுக்கள் பகல் முழுவதும் சூரிய வெப்பம் தாங்க முடியாமல் மண்ணுக்குள்ளும், நிழலிலும் கண்ணுக்கு தெரியாமல் பதுங்கி கொள்ளும்.
- இரவில் வெளியில் வந்து நிலக்கடலை பயிரின் இலைகளை சுரண்டி அதன் பச்சையத்தை தின்றுவிடும். இதன் மூலம் நாளடைவில் செடியின் ஆரோக்கியம் பாழ்பட்டு மசூல் பெரிதும் பாதிக்கும்.
- இப்புழுக்களை கட்டுப்படுத்த நிலக்கடலை சாகுபடி செய்யும்போது ஆமணக்கு பயிரினை வரப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ சாகுபடி செய்தால் புழுக்களின் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
- விளக்கு பொறி அல்லது இனக்கவர்ச்சி பொறியினை வயலில் வைத்தும் தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தும் அழிக்கலாம்.
- முட்டை குவியல்களையும், ஓரே இலையில் கூட்டமாய் இருக்கும் இளம் புழுக்களையும் சேகரித்தும் அழிக்கலாம்.
- இது தவிர நச்சு உருண்டை தயாரித்தும், இந்த புழுக்களை அழிக்கலாம்.
- ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அரிசித்தவிடு, நாட்டு சர்க்கரை அரை கிலோ மற்றும் கார்பாரில் 50 சத நனையும் தூள் அரை கிலோ ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வரப்பு ஓரங்களிலும், வயலை சுற்றியும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் ஆங்காங்கே வைத்துவிட வேண்டும். மாலையில் வெளிவரும் புழுக்கள் உருண்டையின் வாசனையினால் கவரப்பட்டு அதனை தின்ன முயற்சித்து அழிந்து போகும்.
- மேலும் புழுக்கள் இளம் பருவத்தில் இருக்கும் போதே ஒரு ஏக்கருக்கு கார்பாரில் 50 சத நனையும் தூள் 800 கிராம் அல்லது டைகுளோர்வாஸ் 300 மி.லி. அல்லது குயினால்பாஸ் 25 ஈசி 300 மி.லி. ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மாலை வேளையில் இலைகளின் மேலும் கீழும் நன்கு நனையுமாறு தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- வளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் 20 ஈசி 800 மிலி அல்லது டைகுளோர்வாஸ் 400 மிலி ஆகிய மருந்தினில் ஏதேனும் ஒன்றினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தகவல்: வேளாண்மை துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம், குடுமியான்மலை.
நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்