சென்னை ராயபுரத்தில், நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து வருவதால், அதை பயன்படுத்தும் பகுதிவாசிகள் தோல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், சென்னை துறைமுகத்திற்கு கப்பல்களில் கொண்டு வரப்படுகின்றன. துறைமுகத்தில் உள்ள ஐ.ஓ.சி., இந்துஸ்தான் பெட்ரோலியம், ஐ.எம்.சி., ஆகிய நிறுவனங்களின் மேல்நிலை தொட்டிகளில் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது.
அங்கிருந்து ராட்சத குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. மேல்நிலை தொட்டிகளிலிருந்து பூமிக்கடியில் செல்லும் கச்சா எண்ணெய் கசிவால், நிலத்தடி நீரில் கலந்து மாசுபட்டுள்ளது. இதனால், துறைமுகத்தை ஒட்டிய ராயபுரம் ஜி.எம்.பேட்டை பிரதான சாலை, ஷேக்மேஸ்திரி சாலை, உசைன் மேஸ்திரி சாலை, வர்க்கீஸ் மேஸ்திரி சாலை உள்ளிட்ட இடங்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிலத்தடி நீரை உபயோகப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்தால், எண்ணெய் கலந்து வருகிறது. அந்த தண்ணீரை குடங்கள் மற்றும் வாளிகளில் பிடித்து வைத்தால், சிறிது நேரத்தில் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடுகிறது.
தண்ணீரில் எண்ணெய் பசையும், டீசல், மண்ணெண்ணெய் வாடை வருகிறது. இதனால், வீடுகள் தோறும் அமைத்த ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து தேவைக்கும் குடிநீர் வாரியத்தையே நம்பி உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயை மாற்றாததால், துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் ஆகிறது!
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்