பண்டைய சோழ வள நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்து, இன்றுவரை அந்தப் பெருமையைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவை மன்னார்குடியும் அதன் சுற்று வட்டாரமும்.
இந்த நெற்களஞ்சியம் தொடர்ந்து நீடிக்க முடியாத வகையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் மீதேன் துரப்பணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காலங்காலமாக மருத நிலம் என்று பெருமையைப் பெற்று வளம் சேர்த்துவரும், மன்னார்குடியும் அதன் சுற்று வட்டாரமும் பாலை நிலமாக மாறும் வாய்ப்பே அதிகம்.
அதன் பிறகு இந்தப் பகுதிகளில் புல் முளைப்பதுகூடச் சந்தேகம்தான். சுமார் ஐந்து லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தப் பகுதி, பயனற்ற நிலமாக மாறிவிடும் ஆபத்து, கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது. பண்டைய சோழர் காலத்திலிருந்து வளமாக இருந்த இப்பகுதி, இன்றைக்கு நம் கண் முன்னே சீர்குலைந்து, வாழத் தகுதியற்ற ஓர் இடமாக மாறப் போவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட முடியுமா?
மன்னார்குடி, அதைச் சுற்றியுள்ள 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், பூமிக்கு அடியில் மீதேன் வாயு இருப்பதாகக் கூறப்படுகிறது. மீதேன் வாயு பூமியைச் சூடாக்கக்கூடியது. இது பூமிக்கு அடியில் இருப்பதே நல்லது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து, இதைத் துரப்பணம் செய்து ரசாயன உரம், அடுப்பெரிக்கும் வாயு போன்றவற்றைத் தயாரிக்கும் திட்டத்தில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great Eastern Energy Corporation) ஈடுபடப்போகிறது.
மீதேன் வாயுவைத் துரப்பணம் செய்ய, 500 முதல் 1,500 அடி ஆழமுள்ள சுமார் 50 கோடி துரப்பண ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. அப்படிச் செய்யும் முன், பூமிக்குக் கீழே இருக்கும் நிலத்தடி நீர், மற்ற விஷயங்களை வெளியேற்றியாக வேண்டும். அப்படி வெளியேற்றிய பிறகு மன்னார்குடியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நன்னீரே இருக்காது. பிறகு எப்படி விவசாயம் நடைபெறும், மக்கள் வாழ முடியும்?
சுமார் ஆயிரம் ஆண்டு மரபும் வரலாறும், கலாச்சார முக்கியத்துவமும் வாய்ந்த இடம். பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து செழித்த இடம். மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம், வடுவூர் போன்ற இடங்கள் வரலாற்றுப் புகழ் மிக்கவை.
இவை பறிபோகப் போகின்றன எனும்போது அரசியல் நோக்கு அல்லது பொருளாதார நோக்கு ஆகியவற்றைத் தாண்டி, அதனால் ஏற்படும் பாதிப்புகள், அழிவின் தீவிரத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பகுதியை, விவசாயத்தை நம்பி வாழும் மக்களை, கையறு நிலைக்குத் தள்ளுவது எந்த வகையில் நியாயம்?
இந்தத் திட்டம் பற்றி உள்ளூர் மக்களிடம் முறையான கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. திட்டத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் கூறப்படவில்லை. இந்தத் திட்டத்துக்கான அனுமதியைத் தமிழ்நாடு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளபோதும், மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது.
இந்தத் திட்டத்துக்கு எதிராக மறைந்த வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் எதிர்ப்புத் தெரிவித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் காவிரி பாசன வளர்ச்சி ஆராய்ச்சி மையமும் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வரு கின்றன. அனைத்துத் தரப்பினரும் இந்தத் திட்டத்தின் தீமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இது நம்மை மட்டுமின்றி நமது சந்ததிகளைக் காக்கவும் அவசியம்.
திட்டம் வந்த பாதை
மீதேன் துரப்பணம் செய்வதற்கான ஏலத்தைக் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் 2010 ஜூலை 29ஆம் தேதி எடுத்தது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு பெட்ரோலியத் துரப்பண உரிமத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்கியது. 2012 செப்டம்பரில் மத்தியச் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகமும் இத்திட்டத்துக்குத் தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate) வழங்கியுள்ளது.
தற்போது மக்களின் எதிர்ப்பை அடுத்து, தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அதில் அண்ணா பல்கலைக் கழகம், சென்னை ஐ.ஐ.டி., தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, பொதுப் பணித் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்புக்கு: vasagam12@yahoo.com
நன்றி: ஹிந்து
இந்த மீத்தேன் தொழிர்நுட்பதை பற்றியும் இதனால் ஏற்பட்ட சுற்று
சூழல் பிரச்னைகளையும் நாளை பாப்போம்..
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
2 thoughts on “தஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம்”