கடலுார் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வரும் நிலையில் தடுப்பணை, பண்ணைக்குட்டை அமைத்ததன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
விவசாயமே பிரதானமாகக் கொண்ட கடலுார் மாவட்டத்தில் வாய்க்கால் பாசனம் மற்றும் கிணற்று பாசன முறையில் நடைபெற்று வந்தது. காவிரியின் கடைமடை பகுதியான இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால், கிணற்று பாசனம் அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள பல தொழிற்சாலைகள் தங்கள் தேவைக்காக நிலத்தடி நீரை ராட்சத மோட்டர்களைக் கொண்டு உறிஞ்சி வருகிறது. அதே நேரத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததன் காரணமாக மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த 2012ல் 54 சதவீதமும், 2013ல் 78 சதவீதமும், கடந்தாண்டு 50 சதவீத அளவே மழை பெய்தது.
மூன்று ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்த வந்ததால், கடல் நீர் உட்புகும் ஆபத்து நிலவியது கடல் நீர் உட்புகுவதைத் தடுத்திடவும், நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்கிட ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டது.
இதன் காரணமாக கிராமங்களில் ஏராளமான பண்ணை குட்டைகள் மற்றும் மீன் வளர்ப்பு குளங்கள் ஏற்படுத்தப் பட்டன. இந்நிலையில், இந்தாண்டு கடந்த 9 மாதங்களில் (செப்டம்பர் 30 வரை) 535.8 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் கடும் வெயிலுக்கு மத்தியிலும் 487.83 மி.மீ., மழை பெய்துள்ளது.
சராசரி அளவில் 91 சதவீதம் பெய்த மழையினால், பண்ணைக் குட்டைகள் மற்றும் தடுப்பணைகளால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8.16 மீட்டர் ஆழமாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் இந்தாண்டு 6.88 மீட்டராக உயர்ந்துள்ளது. போதிய மழையின்மை, மின்தடை போன்ற காரணங்களால் பயிரை காப்பாற்ற முடியாமல் தவித்து வரும் மாவட்ட விவசாயிகளுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்