28 தடுப்பணைகள் – தனி ஒருவன் கிராமத்தை மாற்றிய கதை

ம்மில் பலரும் தங்களது கிராமங்களிலோ, மாவட்டங்களிலோ நிகழும் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். அவர்களின் நிலையைச் செய்திகளின் வாயிலாகக் கேட்பதும், விவாதம் வாயிலாகப் பதிலளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்போம்.

அவர்களின் உண்மை நிலை என்ன… அவர்களின் உண்மையான பிரச்னைகள் பற்றி என்ன என்பதைப் பற்றி நேரில் பார்த்திருக்கக்கூட மாட்டோம். ஆனால், இந்தியாவில் பிறந்த ஒருவர், அதுவும் வெளிநாட்டில் சென்று வேலை பார்த்த இளைஞர் ஒருவர், தனது கிராமத்தைத் தடுப்பணை கட்டி வறட்சியிலிருந்து மீட்டிருக்கிறார். அவரது பெயர் தத்தா பாட்டீல். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விதர்பா மற்றும் மராத்வாடா உள்ளிட்ட பகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்டு தவித்து வருகின்றன.

தடுப்பணை

அதனால் அந்தப் பகுதிகளில் விவசாயிகளின் அதிகமான தற்கொலை நிகழ்கிறது. இந்த மராத்வாடாவின் லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிகச் சிறிய கிராமம்தான் ஹல்காரா. மொத்தமாக 1,400 வீடுகளில் 6,000 மக்கள் வசித்து வருகின்றனர்.

தத்தா பாட்டில், இந்த ஹல்காரா என்ற கிராமத்தில் பிறந்தவர். தனது கிராமத்தில் 10-ம் வகுப்பு வரை படித்தார். அதன் பின்னர் வெளியூரில் உயர்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள யாஹூ நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக வேலைக்குச் சேர்ந்தார். இவரின் உயர் கல்விக்காகப் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தபோது, படிப்பதற்கு இவரிடம் பணம் இல்லை. அதனால் இவரின் தாயார் தனது நிலத்தை விற்று, பாட்டீலை பொறியாளராக மாற்றினார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அலுவலக விடுமுறையின்போது தத்தா பாட்டீல் தனது கிராமத்துக்கு வந்தார். அப்போது ஏதோ தவறாக இருப்பதைக் கண்டார். அந்தக் கிராமம் அவர் வளர்ந்த கிராமம் போலவே காட்சியளிக்கவில்லை. கிராமம் முற்றிலுமாக உருக்குலைந்துபோய்க் கிடந்தது. வறட்சியால் விவசாயிகள் தவித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். தண்ணீர் பற்றாக்குறை காரணமாகப் பக்கத்து கிராமங்களில் இருந்து அவரது கிராமத்துக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்பட்டதைக் கவனித்தார்.

வேலை

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாலைவனமாக இருந்தது. நிலமெல்லாம் வெடித்துப்போய்க் கிடந்தன. இதைக் கண்டு அவர் வெற்று விவாதங்களில் ஈடுபடவில்லை. தனது கிராமத்தின் நிலையை உணர்ந்து முன்மாதிரி கிராமமாக மாற்ற நினைத்தார்.

பின்னர் அலுவலக வேலை காரணமாக மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்றார். அமெரிக்காவில் 400 மி.மீ மழை பெய்கிறது, அந்த மழைக்கே பசுமையாக இருக்கிறது பூமி. தண்ணீர் தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே இடமில்லை. தனது கிராமத்தில் 800 மி.மீ மழைப்பொழிவு இருக்கிறது. ஆனால், வறட்சியான பகுதியாக இருக்கிறது. கலிபோர்னியாவின் நிலத்தடி நீர் மட்டம் 70 அடியாக இருக்கிறது. ஹல்காரா கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் 800 அடியாக இருக்கிறது என்று எண்ணி தனது கவனத்தை நீர் மேலாண்மையின் மீது செலுத்தினார். தனது கிராமத்தில் மழைநீர் சேமிப்பு, முறையாக இல்லாததைக் கண்டறிந்து, முதலில் அதைச் செய்ய வேண்டும் என நினைத்து மீண்டும் இந்தியா வந்தார்.

தத்தா பாட்டீல் உடனடியாக தனது கிராமத்துக்குத் தண்ணீர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடிவுசெய்தார். அதே நேரத்தில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சத்யமேவ் ஜெயதே’ நிகழ்ச்சியில் தண்ணீருக்கான பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டது. இது பல்வேறு கிராமங்களுக்கு இடையே நடக்கும் போட்டியாகும். இந்த நிகழ்வில் நீர்நிலை பராமரிப்புக்கு அதிகபட்ச வேலைகளை யார் செய்கிறார்களோ அவருக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பசுமையான பூமி

அதனால், அதில் கலந்துகொள்ள பாட்டீல் தன் தாயார் மற்றும் நண்பர்களில் சிலரை பயிற்சி எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தப் பயிற்சியில் ஊற்றுக்குழிகள், தடுப்பணைகள் உள்ளிட்ட பலவற்றையும் அமைக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பணமாக பாட்டீல் தன்னிடமிருந்து 10 லட்ச ரூபாயைச் செலவு செய்ய முன்வந்தார். இதனால், கிராமவாசிகளும் தங்களது பங்களிப்பைச் செய்ய முன்வந்தனர். இது தவிர, கிராமவாசிகளின் முயற்சியை ஆதரிக்க யாஹூ கடந்த இரண்டு ஆண்டுகளில் 65 லட்ச ரூபாயைக் கொடுத்தது. தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் 5 லட்ச ரூபாய் கிடைத்தது. இந்தத் தொகையில் முதல் முயற்சியாக சுமார் 20 கி.மீ தூரத்துக்குக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. மொத்தமாக 26 தடுப்பணைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் மழைநீர் வீணாவது தடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டது. இதனால் 800 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம், 100 அடியாக உயர்ந்தது.

தண்ணீரின் பக்கம் திருப்பிய கவனம், கிராம சுகாதாரத்தின் பக்கமும் திரும்பியது. 5,000 மரங்கள் அதிகமாக நடப்பட்டன. 80 புதிய கழிவறைகள், 300 தெருவிளக்குகள், ஹல்காரா கிராம மக்களின் கல்வியை உறுதி செய்தல் எனப் பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இதன் மூலமாக, ஹல்காரா கிராமம் வருடந்தோறும் 200 கோடி லிட்டர் நீர் சேமித்துக் கொண்டிருக்கிறது. இதனால் கிராமத்தில் இருந்த பஞ்சம் நீங்கி, பசுமையான சோலையாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தனி ஒரு மனிதனாக நின்று சாதித்துக் காட்டியிருக்கிறார் தத்தா பாட்டீல்.

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “28 தடுப்பணைகள் – தனி ஒருவன் கிராமத்தை மாற்றிய கதை

  1. ஈசநத்தம் செல்வராஜ் ஆர் says:

    நடந்த நிகழ்வை கதை என குறிப்பிட்டு இருக்கீரீர்கள், மன அழத்தமாக உள்ளது, அவர் செய்த பணிகள் அனைத்தையும் பதிவிட்டு காட்சியாக பதிவிட்டு இருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *