இந்தியாவின் தண்ணீரை ஏற்றுமதி எவ்வளவு தெரியுமா

மனித குலத்துக்கு இருக்கும் உடனடி ஆபத்துகளில் ஒன்று தண்ணீர்ப் பிரச்னை. ஆசிய கண்டத்தில் வாழும் மக்களின் எதிர்காலத் தண்ணீர்த் தேவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுமா என்பதே கேள்விக்குறிதான்.

கடந்த நூற்றாண்டில் மட்டும், உலகளவில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைவிட 1.7 மடங்கு அதிகமாக உள்ளது. அதில் 64 சதவிகிதம் ஆசிய கண்டத்தில் நிகழ்ந்துள்ளது. எகனாமிஸ்ட் இன்டெலிஜன்ஸ் யூனிட் (Economist Intelligence Unit) என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கைப்படி, 2030-ம் ஆண்டுக்குள் ஆசிய கண்டத்தில் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் 40% பகுதிகள் கடுமையான நீர் பற்றாக்குறையைச் சந்திக்கும். தண்ணீர் விநியோகம் மற்றும் தேவைக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகும்.

உலகின் மொத்த நன்னீரில் 70 சதவிகிதத்தை விவசாயம் எடுத்துக் கொள்கிறது.

உலகின் மொத்த நன்னீரில் 70 சதவிகிதத்தை விவசாயம் எடுத்துக் கொள்கிறது. நாம் இப்போது கையாளும் நீர் மேலாண்மை முறைகளையே இனியும் கையாண்டால் அதீதச் சுரண்டல் காரணமாகச் சரிசெய்யவே முடியாத பஞ்சத்தைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தண்ணீர்ப் பிரச்னை அதிகமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மறைநீர் வர்த்தகத்தின் பங்கும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். உள்ளூர், தேசிய, சர்வதேசிய அளவில் பட்ஜெட் போட்டுத் தண்ணீரைச் செலவு செய்யவும் வர்த்தகம் மேற்கொள்ளவும் வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு மறைநீர் ஏற்றுமதியில் இனி ஈடுபட முடியாது.

ஒரு குவளை அரிசியைச் சமைக்க எவ்வளவு தண்ணீர் தேவை? சமையல் கையேடுகள் இரண்டு குவளை நீர் இருந்தால் போதுமென்று சொல்லும். ஆனால் உற்பத்தி தொடங்கிய சமயத்திலிருந்து நாம் கணக்குப் போட்டால் ஒரு கிலோ அரிசிக்கு 2,173 லிட்டர் நீர் தேவைப்படும்.

உதாரணத்துக்கு, ஒரு குவளை அரிசியைச் சமைக்க எவ்வளவு தண்ணீர் தேவை? சமையல் கையேடுகள் இரண்டு குவளை நீர் இருந்தால் போதுமென்று சொல்லும். ஆனால், உற்பத்தி தொடங்கிய சமயத்திலிருந்து நாம் கணக்குப் போட்டால் ஒரு கிலோ அரிசிக்கு 2,173 லிட்டர் நீர் தேவைப்படும். அதுவே இந்தியாவில் 2,688 லிட்டர்கள் செலவழிக்கப்படுகின்றன. சாதாரணமாகப் பார்க்கும்போது சில நூறு லிட்டர்கள்தானே என்று தோன்றலாம். அதுவே ஏற்றுமதி என்று வருகையில் அதே சில நூறு லிட்டர்களை நாம் இலவசமாக வெளிநாடுகளுக்குக் கொடுக்கிறோம். பொதுவாகத் தண்ணீர் பஞ்சம் அல்லது பற்றாக்குறை என்று வந்துவிட்டால் நகரவாழ் மக்கள் அக்கறையின்றித் தண்ணீரைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஒருவகையில் அது உண்மை என்றாலும்கூட அதைவிட அதிகமான நீர், விவசாயத்துறையில் வீணாவது பற்றி நாம் கவனம் செலுத்துவதில்லை. விவசாயத்துறையில் தண்ணீர் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடு கிடையாது.

விவசாயம்

நகரங்கள் தத்தம் தண்ணீர் தேவைக்காக லாரிகளை நம்பியிருக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இவ்வளவு தீவிரமாகப் பற்றாக்குறையில் தவிப்பவர்களிடம் அதை வீணடிப்பதைத் தவிர்க்கச் சொல்லும் அதே நேரம் தண்ணீர் மிகுதியாக உள்ள இடங்களிலும் அதைச் சேமிக்கச் சொல்ல வேண்டும். இந்திய கிராமங்களிலிருந்து விவசாயப் பொருள்களின் வழியாக நாட்டின் தண்ணீர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கிறது. Water Footprint என்ற அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி மிக மிகக் குறைவாக மறைநீர் இறக்குமதி செய்வது இந்தியாதான். அதேசமயம் மிக அதிகமாக மறைநீர் ஏற்றுமதி செய்வதும் இந்தியாதான். மறைநீர் இறக்குமதியில் சீனா 11-வது பெரிய நாடாகத் திகழ்கிறது. என்னதான் தொழிற்சாலை உற்பத்தி மூலம் அதிகமான மறைநீரை ஏற்றுமதி செய்தாலும் விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வதன் மூலம் மறைநீர் இறக்குமதியிலும் சீனா முன்னிலை வகிக்கிறது.

இதற்கு நேர் எதிராக, விவசாய உற்பத்தி ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிப்பதன் மூலம் மறைநீர் ஏற்றுமதியிலும் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. தொழிற்சாலை உற்பத்திகளைவிடப் பல மடங்கு அதிகமான மறைநீர் விவசாய உற்பத்தியில் மறைந்திருக்கிறது. அதை ஏற்றுமதி செய்வதில் நாம் மிகக் கவனமாக இருக்கவில்லை என்றால் நாட்டின் பெரும் பகுதி நீர் அரிசி, தானியங்கள் வழியாக வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கப்படும்.

ஏற்றுமதி இறக்குமதியில் அனைத்து நாடுகளுமே கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படைக் கோட்பாடு ஒன்றுள்ளது. ஒரு நாடு தன்னிடம் அதிகமாக உள்ளதை ஏற்றுமதி செய்ய வேண்டும், பற்றாக்குறையாக உள்ளதை இறக்குமதி செய்ய வேண்டும். இந்தக் கூற்றோடு இந்தியாவை ஒப்பிட்டுப் பார்ப்போம். அடிப்படையில் தண்ணீர் பற்றாக்குறையுள்ள நாடாகத் தற்போது இருக்கிறோம். இங்கு, நியாயமாகப் பார்த்தால் மறைநீர் இறக்குமதியில்தான் நாம் அதிகக் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், நாம் அதிகமாக ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறோம். இந்தியாவில் பிரம்மபுத்திரா, மகாநதி தவிர மற்ற அனைத்து நதியோரங்களிலும் தொடர்ச்சியாகத் தண்ணீர் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. வற்றாத ஜீவநதிகளாகச் சுட்டப்படும் கங்கை, சிந்து நதிகளில்கூட ஆண்டுக்கு ஏழு மாதம் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நதிப்படுகைகள் அனைத்தும் தற்போது மோசமான பற்றாக்குறையைச் சந்திக்கின்றன. இருந்தாலும் இந்தப் பகுதிகளிலிருந்து இந்தியா அதிக மறைநீரை ஏற்றுமதி செய்கிறது.

இப்போது நமக்குத் தோன்ற வேண்டிய கேள்வி என்னவென்றால், இந்தியா செய்ய வேண்டியது மறைநீர் இறக்குமதியா அல்லது ஏற்றுமதியா?

இறக்குமதியை அதிகப்படுத்துகிறோமோ இல்லையோ நிச்சயம் ஏற்றுமதியாகும் மறைநீரைக் கட்டுப்படுத்தியே தீர வேண்டும்.

“தண்ணீரைச் சேமியுங்கள்” என்ற முழக்கம் சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது. ஆனால், அந்த முழக்கம் நகரங்களோடு நின்றும் விடுகிறது. இந்தியாவின் மொத்தத் தண்ணீர் பயன்பாட்டில் 5 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் வீட்டு உபயோகங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மனிதப் பார்வையில் தண்ணீரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  • பசுமையான நீர் (மழை நீர்)
  • நீல நீர் (நீர்நிலைகள் மற்றும் நிலத்தடியில் இருக்கும் நீர்)
  • பழுப்பு நீர் (கழிவுகளைச் சுமந்து செல்லத் தேவைப்படும் நீர்)

இந்த வகைப்பாட்டின்படி, எவ்வளவு தண்ணீர் எங்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்பட்டது என்பதை வைத்தே அது எங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 1996 – 2005 வரை விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவை மட்டும் உலகின் மொத்தத் தண்ணீர் பயன்பாட்டில் 92 சதவிகிதம் பங்கு வகித்துள்ளன. அதுபோக 4.4% பங்கு தொழிற்சாலைகளுக்கும் 3.6% பங்கு வீட்டுப் பயன்பாடுகளுக்கும் இருந்துள்ளன. இதுவே இந்தியாவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு 92.6%. அதோடு தொழிற்சாலை, வீட்டுப் பயன்பாடுகளுக்கு முறையே 3% மற்றும் 4.4% தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவசாயத்துறை அதிகமான நீர் பயன்பாட்டைக் கொண்டது. அதன் உற்பத்திகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும்போது நாட்டின் நீர் வளமும் சேர்ந்தே ஏற்றுமதி ஆகிறது.

விவசாயம்
விவசாயம்

நீல நீரை அதிகமாகப் பயன்படுத்துவது, அதாவது நீர்நிலைகளையும் நிலத்தடி நீரையும் அதீதமாகப் பயன்படுத்துவது விவசாயத்துறை மட்டும்தான். அந்த விஷயத்தில் உலக நாடுகளில் சீனாவும் இந்தியாவும் முன்னிலையில் இருக்கின்றன. இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் கோதுமை, அரிசி, கரும்பு, பருத்தி போன்றவை அதிகளவில் நீல நீரைப் பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன. உலகளவில் அதிகத் தண்ணீர் பயன்படுத்தி வளரும் பயிர்களை அதிகமாக ஏற்றுமதி செய்வதன் மூலம் தன்னிடம் பற்றாக்குறையாக உள்ள ஒரு சரக்கை இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்கிறது.

ஓராண்டில் இந்தியக் குடியிருப்புகளும் தொழிற்சாலைகளும் பயன்படுத்தும் தண்ணீர் 25 பில்லியன் கன மீட்டர். இந்தியா ஓராண்டுக்கு ஏற்றுமதி செய்யும் நீரின் அளவு, 95.4 பில்லியன் கன.மீட்டர். அதிக நீர் வளமுள்ள பிரேசில், அமெரிக்கா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளைவிட மிகப்பெரிய மறைநீர் ஏற்றுமதியாளராக நாம் இருக்கிறோம். இந்த நிலைக்கு முக்கியமான காரணம் நாம் செய்யும் விவசாய ஏற்றுமதி. ஒவ்வொரு கிலோ அரிசிக்கும் பருத்திக்கும் ஆயிரக்கணக்கான லிட்டர்கள் தண்ணீர் இங்கிருந்து ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் நகர்ப்புறப் பொருளாதாரம் தொய்வடைந்து கொண்டிருக்கிறது. 21 நகரங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட இன்னும் ஓராண்டுதான் உள்ளது. இந்திய நகரங்களின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாக இருக்க வேண்டுமெனில் அதற்கு அங்கு அடிப்படை வளங்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். அதனாலேயே நகரவாசிகள் தம் ஒவ்வொரு துளி நீரையும் அக்கறையோடு பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், விவசாயத் துறையில் அந்த அளவுக்கு சேமிப்பு உணர்வோடு தண்ணீர் செலவழிக்கப்படுவதில்லை.

விவசாயத்துக்கு இவ்வளவு சலுகைகள் தரப்படுவது ஒரே காரணத்துக்காகத்தான். கிராமப்புற ஏழை விவசாயிகள் இதனால் பலனடைய வேண்டும். ஆனால், நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவதும் அதிக உற்பத்தி மூலம் ஏற்றுமதியில் பங்கு வகிப்பதும் இத்தகைய ஏழை விவசாயிகள் இல்லை. இந்தச் சலுகைகளால் அதிகப் பயனடைவது இவற்றில் பங்கு வகிக்கும் பெரு விவசாயிகள்தான். அவர்களே இதிலிருந்து அதிகப் பலன்களைப் பெறுகின்றனர்.

மொத்த தண்ணீர் பயன்பாட்டில் 64% நீரை சீனா விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறது. பிரேசில் 60% நீரையும் நைஜீரியா 44% நீரையும் விவசாயத்தில் பயன்படுத்துகின்றன. இவை எல்லாவற்றையும்விட அதிகமாக மொத்த நீரில் 90% தண்ணீர் இந்திய விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நாம் நகர்ப்புற தண்ணீர் பற்றாக்குறையில் கவனம் செலுத்துவது போலவே கிராமப் புறங்களிலுள்ள பெரு விவசாயிகளின் தண்ணீர் பயன்பாட்டை அளவிட்டு, கட்டுப்படுத்த வேண்டும்

. நீர் அளவின்றிச் செலவிடப்படுவது தடுக்கப்பட்டு அதன் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

பற்றாக்குறையான சரக்கை ஏற்றுமதி செய்யும் எந்தவொரு நாடும் அதன்மூலமாக எந்தவொரு சமூகப் பொருளாதாரப் பலன்களையும் கண்டுவிட முடியாது. இன்றைய சூழலில் உலகின் மறைநீர் ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருப்பது பெருமைக்குரிய விஷயமல்ல. அது நாம் அச்சப்பட வேண்டிய விஷயம். மறைநீர் நாட்டுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும் வரை அது நமக்குப் பயனளிக்கும். அதுவே ஏற்றுமதி மூலம் வெளியே சென்றுவிட்டால் நாம் நம் தேசிய தண்ணீர் இருப்பிலிருந்து ஒரு பகுதியை இழந்துவிட்டோம் என்று பொருள். வெளிநாடுகளுக்கு ஒவ்வொரு லிட்டர் நீரையும் ஏற்றுமதி செய்யும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

மனித இனத்தின் அடிப்படைச் செயல்பாடுகள் தொடங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரை, இயற்கை வள மேலாண்மை, மற்ற உயிரினங்களின் வாழ்வியல் என்று அனைத்திலுமே தண்ணீருக்கு இன்றியமையாத பங்குண்டு. அதன் மேலாண்மையில் ஒருங்கிணைந்த நீண்டகாலப் பயன் தரக்கூடிய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அந்தத் திட்டங்கள் நிகழ்கால சவால்களையும் எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *