வறட்சியால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நீர் நிலைகள் வறண்டு விட்டன. மக்கள், தண்ணீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கோவை மாநகரில் மக்களும், தன்னார்வ அமைப்பினரும் மேற்கொண்ட முயற்சியால், குளங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிக்கவும், குளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீர் உதவிகரமாக உள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பொய்த்து போன தால், கடும் வறட்சி நிலவுகிறது. பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீருக்காக மக்கள் காலிக் குடங்களுடன் அலையும் காட்சிகள், அன்றாடம் தென்பட தொடங்கியுள்ளன.ஆனால், இத்தகைய அவல காட்சிகள், கோவை மாவட்டத்தில் இல்லை என்று உறுதிபடக் கூறி விட முடியும்.
இயற்கையுடன் மக்களும்…
இதற்கு, இயற்கை ஒரு காரணம் என்று கூறினாலும், அதனுடன் இணைந்து செயல்பட்ட கோவை மக்களும், தன்னார்வ அமைப்பினரும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. கோவையில் பாயும் நொய்யல் ஆற்றின் வழித்தடம் முழுவதும் சங்கிலித்தொடர் போல, 24 குளங்கள் அமைந்துள்ளன.
கொங்குச்சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த குளங்கள், கோவைக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவற்றில் நீர் நிறைந்தால், நிலத்தடி நீர் நிச்சயம் உயரும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதன்படி, ‘கோவையில் இருக்கும் குளங்களை துார் எடுக்க வேண்டும், நீர் சேகரிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்’ என்பதை பல்வேறு தரப்பினரும்
தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தன்னார்வ அமைப்புகள்
அப்படித்தான் ஆறு ஆண்டுகளுக்கு முன் குளங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்தன. கடந்த, 2013ல் உக்கடம் பெரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், தமிழகத்தையே அதிசயிக்க வைத்தன.அரசும், பொது மக்களும்,’சிறுதுளி’ உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினரும், தனியார் நிறுவனங்களும், ஆயிரக்கணக்கான பேருடன் களம் இறங்கி, 320 ஏக்கர் பரப்பு கொண்ட பெரிய குளத்தை துார் எடுத்தனர்.
குளத்தின் நடுவில் மரக்கன்று நட வசதியாக, மண் மேடுகள் ஏற்படுத்தப்பட்டன. குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் கொண்டு, கரை பலப்படுத்தப்பட்டது.இதேபோல, 334 ஏக்கர் பரப்பில் அமைந்த குறிச்சி குளமும், ஈஷா யோகா அமைப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேரின் ஒத்துழைப்புடன் 2017 ஜூலையில் துார் எடுக்கப்பட்டது. பல ஆயிரம் டன் வண்டல் மண் எடுக்கப்பட்டதால், குளம் ஆழமானது. எடுத்த மண்ணை கொண்டு, கரை பலப்படுத்தப்பட்டது. கரையோரம், சாலையும் அமைக்கப்பட்டது.
மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் தடத்தில் அமைந்துள்ள 24 குளங்களில், ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலான குளங்கள், அரசு உதவியோடு, தன்னார்வ அமைப்பினரால் துார் எடுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு குளமும் குறைந்தது ஐந்தடி முதல் பத்தடி வரை ஆழப்படுத்தப்பட்டுள்ளன. விளைவு, குளத்தின் தண்ணீர் சேகரிக்கும் திறன் அதிகரித்துள்ளது. அதன் விளைவுதான், கோவையில் பெருமழை
பொழிந்து ஓராண்டு ஆகியும், இன்றளவும் கோவை குளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிலத்தடி நீர்மட்டமும், 2017ல் இருந்ததை காட்டிலும், கணிசமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து ‘சிறுதுளி’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:கோவையில் நான்கு ஆண்டுகளாகவே போதுமான மழை இல்லை. கோவைக்கு 600 மி.மீ., மழைதான் ஆண்டுக்கு கிடைக்கிறது. அப்படியிருந்தும், கோவையில் நிலத்தடி நீர்மட்டம், ஓரளவுக்கு சமாளிக்கும் நிலையில் இருப்பதற்கு, குளங்களில் தேங்கியுள்ள தண்ணீர்தான் காரணம்.
எனினும், சென்னையை போன்ற அபாயம் கோவைக்கும் வர வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும். குளம், குட்டை எதுவாக இருந்தாலும், அவற்றை துார் எடுத்து, மழைநீரை சேகரிப்பதுஅவசியம்.கோவை மாநகரை பொறுத்தவரை, காலியிடங்கள் எல்லாம் கட்டடம் ஆகி விட்டன. அங்கு பெய்யும் மழைநீர் குளங்களுக்கு சென்று சேருவதில்லை. வாய்க்கால்களில் பிளாஸ்டிக் அடைத்துக் கிடக்கிறது.
எனவே,மாநகர பகுதிக்குள், 700க்கும் மேற்பட்ட இடங்களில், ‘சிறுதுளி’ சார்பில், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழை பெய்யும் காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர் நிலத்தில் இறங்கினாலே, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடும்.கோவையின் புறநகர் பகுதிகளில், இரண்டு ஆண்டுகளாகத்தான் எங்கள் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புறநகரில், நிலத்தடி நீர் மிகவும் குறைந்திருக்கிறது. அங்குள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் தேக்கினாலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு, ஓரிரண்டு ஆண்டுகள் பிடிக்கும்.
மழைநீர் சேகரிப்பு
கோவை மாநகரம் வெகுவாக விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் அதிகரிக்கின்றன. வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான தண்ணீர் தேவைப்படும். சிறுவாணி, அத்திக்கடவு தண்ணீர் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டே நமக்கு கிடைக்கும். எனவே, எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய, ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு தேவை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, போர்க்கால அடிப் படையில் செயல்படுத்த வேண்டும். வீட்டுக்கூரையில் இருந்து வரும் மழைநீரை, ஒவ்வொரு குடும்பத்தினரும், ஒரு சொட்டு விடாமல் சேகரிக்க வேண்டும். மாநில அரசு அதை தன் கொள்கையாகவே அறிவித்து, செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான், சென்னையின் அவல நிலை கோவைக்கு வராமல் இருக்கும்.
தண்ணீர் இல்லாததால், ஐ.டி., கம்பெனிகள், தங்கள் ஊழியர்களை, ‘வீட்டில் இருந்து பணியாற்றுங்கள்’ என்று கூறும் நிலை, சென்னையில் ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், நீர் மேலாண்மை சரியாக இல்லாததுதான். மூன்றாண்டுக்கு முன் சென்னையில் கனமழை பெய்தது; பெரும் சேதம் ஏற்படுத்தியது. அந்த தண்ணீர் எல்லாம், கடலில்தான் கலக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 3,000 ஏரி, குளங்கள் இருக்கின்றன. அங்கு ஆண்டு தோறும் பெய்யும்,
1,400 மி.மீ., மழையை சேகரிக்கவே, இவ்வளவு குளம், ஏரிகள் அந்தக்காலத்தில் நிறுவப்பட்டன. அவற்றில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதன் விளைவு, தண்ணீர் கடலுக்குத்தான்போகிறது.போர்க்கால அடிப்படையில்கோவையில் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான நிலையில் இருப்பதாக, 1980ம் ஆண்டிலேயே யு.என்.டி.பி., அமைப்பு எச்சரிக்கை செய்தது. அந்த எச்சரிக்கைக்கு, அப்போது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோவையில் இன்று தண்ணீர் இருக்கிறது. நாளைக் கும் தண்ணீர் இருக்குமா என்பது கேள்விக்குறியே. எனவே, போர்க்கால அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வனிதா மோகன் கூறினார்.
ஓடைகளை துார் எடுக்க வேண்டும்
வனிதா மோகன் கூறுகையில், ”கோவையில் குளங்களில் தண்ணீர் இருப்பதால்தான் இன்னும் நாம் ‘போர்வெல்’ மூலம் தண்ணீர் எடுக்க முடிகிறது. இன்னும் அரசு செய்ய வேண்டியது, ஓடைகள், வாய்க்கால்களை துார் எடுத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. ”கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியில் இருந்து, 22 ஓடைகளும், வடக்குப் பகுதியில் இருந்து, 12 ஓடைகளும், வருகின்றன. அவற்றை துார் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
”அந்த 34 ஓடைகளும் என்ன நிலையில் இருக்கின்றன, அவற்றை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று, ‘சிறுதுளி’ சார்பில் ஏற்படுத்தப் பட்ட நொய்யல் மீட்பு குழுவினர்,ஆய்வு செய்து வருகின்றனர்.10 பேர் கொண்ட அந்த குழுவினர், தினமும் ஓடைகளை நேரில் பார்வையிட்டு, ஆவணப்படுத்தி வருகின்றனர். விரைவில் இந்த பணி முடிந்தவுடன், அடுத்த கட்ட பணிகள் துவங்கும்,” என்றார்.
ஆகாயத்தாமரை செடிகளைஅகற்றுவதால் பயனில்லை
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது
:நீர் வழித்தடங்களை துார் எடுக்க பொதுப்பணித்துறைக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். குளங்கள் மட்டுமின்றி, கோவையில் தடுப்பணைகளும் சிதிலம் அடைந்துள்ளன. சில தடுப்பணைகள் மண் மேவியுள்ளன.சித்திரை சாவடி, கோயம்புத்துார் அணைக்கட்டு, குறிச்சி, வெள்ளலுார் அணைக் கட்டுகள், சிங்கநல்லுார் அணைக்கட்டுகள் சிதிலம் அடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.
நொய்யல் ஆற்றில் சாடிவயலில் தொடங்கி, பல இடங்களில் மாவட்டத்தில் கழிவு நீரை க்ஷநேரடியாக கலக்கின்றனர். அதை தடுத்து, சுத்திகரித்து, பிறகு ஆற்றிலோ, குளத்திலோ கலக்கலாம். மலையடிவாரங்களில் கட்டுமானங்களுக்கு அனுமதி தரக்கூடாது. குறிப்பிட்ட பகுதி வரை, விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும். ஆற்றுக்கு நீர் வரும் ஓடைகளை பாதுகாக்க வேண்டும்.
பேரூர் பெரியகுளம், செங்குளம், ஆச்சாங்குளம், நீலம்பூர் குளம் துார் எடுக்க வேண்டும். குளங்களில் ஆகாயத்தாமரை அகற்றுவதால் பயனில்லை. சாக்கடை தண்ணீர் வராமல் தடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் போதும்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்.
நிலத்தடி நீருக்கு பாதுகாப்பு
கடந்த 2017 மே மாதம், கோவையில் நிலத்தடி நீர்மட்டம், 17.87 மீட்டராக, அதல பாதாளத்தில் இருந்தது. 2018ல் இது, 16.65 மீட்டராக அதிகரித்தது. போதிய அளவு மழை இல்லாதபோதும், இந்தாண்டு மே மாதம், 14.11 மீட்டராக மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு, கோவையின் குளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரே முக்கிய காரணம்.’சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு குளங்கள்தான் பேருதவியாக இருக்கின்றன’ என்று, விவசாயிகளும், தன்னார்வ அமைப்பினரும் கூறுகின்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்