சிவகங்கையில் கிரானைட் பாலீஷ் நிறுவனங்கள் மூலம் நீர் பாழ்

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே பூவந்தி கிராமத்தில் கிரானைட் கழிவுகளால் விவசாயம் பொய்த்ததுடன் தற்போது உடல்நலமும் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பூவந்தி ஊராட்சி. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். சிவகங்கை – மதுரை ரோட்டில் மாவட்ட எல்லையில் இக்கிராமம் அமைந்துள்ளது. 900ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய் மூலம் ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுரை விரகனுார் மதகு அணையின் இடது பிரதான கால்வாய் மூலம் பூவந்தி கண்மாய்க்கு நீர்வரத்து கால்வாய் உண்டு, நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தன.

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயம் செழித்து வந்த இப்பகுதியில் தற்போது புற்றீசல் போல முளைத்த கிரானைட் நிறுவனங்களால் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது. பூவந்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெற்று 11 கிரானைட் பாலிஷ் செய்யும் நிறுவனங்களும் அனுமதி பெறாமல் ஒருசில நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலூர் பகுதியில் இருந்து வெட்டியெடுக்கப்படும் பாறைகளை கொண்டு வந்து கிரானைட் கற்கள் தயாரிக்கின்றனர்.

கிரானைட்

பாறைகளைவெட்ட, பாலிஷ் செய்ய  ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 24 மணி நேரமும் இயங்கும்  இந்த நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சப்தத்தால் கிராமமக்கள் துாக்கத்தை தொலைத்து விட்டனர். பாறைகளை வெட்டும் போது இயந்திர பற்சக்கரங்கள் வழியாக தண்ணீர் ஊற்றப்படும், அதில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதுபோல பாலிஷ் செய்யப்படும் போது மாவுடன் சேர்ந்து வெளியேறும் கழிவு நீரும் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இதனால் பூவந்தி கிராமத்தை சுற்றிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பால்போல வருகிறது. இந்த தண்ணீரை குடங்களில் சேகரித்து வைத்தால் குடங்களின் உட்புறம் வெள்ளை ரக மாவு படிகிறது. தண்ணீரின் மேட்புறம் எண்ணை பிசுகு போல மிதக்கிறது.

சமீப காலமாக பூவந்தி வட்டாரத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

kumar

இதுவரை கிரானைட் நிறுவனங்களில் அதிகாரிகள் யாரும் சோதனை நடத்தியதில்லை, கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறதா, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா என கண்காணிப்பதே இல்லை. கற்களை வெட்டி எடுக்கவும் பாலிஷ் செய்யவும் அதிகளவு தண்ணீர் தேவை எனவே நிறுவனங்கள் 500 அடி முதல் ஆயிரம் அடி வரை ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சுவதால் சுற்றுவட்டார விவசாய கிணறுகள், குடிநீர் கிணறுகள் வறண்டு விட்டன. விவசாயம் பொய்த்து போனதால் வேறு வழியின்றி பூவந்தி கிராமமக்களில் பெரும்பாலனவர்கள் கிரானைட் நிறுவனங்களில் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

பூவந்தி கிராமத்தை சேர்ந்த  குமார் பேசும்போது… “சிவகங்கை, மதுரை மாவட்ட எல்லையில் பூவந்தி எல்லையில் 11 நிறுவனங்களும் மதுரை எல்லையில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இரண்டு எல்லையையும் ஒரே ஒரு ரோடுதான் பிரிக்கிறது. ஆனால் இரண்டு மாவட்டங்களையும் சேர்த்து செயல்படும் கிரானைட் நிறுவன கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்ககப்படாமல் வெளியேற்றுவதால், பூவந்தி, பாப்பான்வலசை, சுண்ணாம்பூர் உள்ளிட்ட கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இப்பகுதியில் விவசாயம் கடந்த  10 வருடங்களாகவே இல்லை. பூவந்தியில் கடந்த 10 வருடங்களாக காசு கொடுத்துதான் தண்ணீரை வாங்கி குடித்து வருகிறோம், ஏழை எளிய மக்கள் வேறுவழியின்றி சுகாதாரமற்ற தண்ணீரை குடித்து சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பலரிடமும் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.

கிரானைட்

பூவந்தியை கிராமத்தை சேர்ந்த இளைஞர் அணி சசிகுமார் பேசும்போது : “கிரானைட் நிறுவனங்களில் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளைஞர்களை அழைத்து வந்து கொத்தடிமைகளாக நடத்துகின்றனர். அவர்களுக்கு உரிய எந்த வசதியும் செய்து தருவதில்லை, கழிவு நீரை அப்படியே வெளியேற்றுகின்றனர்.

கிரானைட் கழிவு துண்டுகளை சாலையோரம் கொட்டி வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் நேரிடுகின்றன. இயந்திரங்களின் சப்தத்தால் எங்கள் தூக்கம் போச்சு, வீடுகள் அனைத்தும் விரிசல்கள் ஏற்பட்டு விட்டன. பூவந்தியில் பெரும்பாலானவர்கள் வேறு இடங்களுக்கு பிழைப்பு தேடி சென்றுவிட்டனர், கிரானைட் கழிவு துண்டுகள், பவுடர்களை காலி நிலத்தில் குவித்து வைத்திருப்பதால் மழை காலங்களில் அப்படியே நிலங்களில் படிகிறது. இப்பகுதியில் உள்ளே போய்விட்டு வந்தால் வெள்ளை வெளேர் என பவுடர் பூசியபடிதான் வெளியே வரமுடியும் அந்தளவிற்கு காற்றில் வெள்ளை நிற பவுடர் படிகிறது “என்றார்.

நன்றி: ஆனந்த விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *