மகாராஷ்டிரா மாநிலம் தமிழகத்தைக் காட்டிலும் வறட்சி மிகுந்த மாநிலம் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், இந்த மாநிலத்தில்தான் நாம் சொன்ன நீர் மேலாண்மையில் முன்னேற்றம் அடைந்த கிராமம் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில அஹமத் நகர் மாவட்டத்தில் பார்னர் தாலுகாவுக்குள் 2000 மக்கள் வாழும் ஒரு சிறிய ஊர்தான் ராலேகான் சித்தி.
கோடைக்காலம் வந்துவிட்டாலே இந்தியா முழுவதும் வறட்சியின் குரல்கள் கேட்க ஆரம்பித்துவிடுகின்றன. இந்தியா மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. நாட்டின் மேற்கேயும், வடக்கேயும் உள்ள அடர்ந்த காடுகளால் வற்றாத ஜீவ நதிகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆங்காங்கே கிளை நதிகள், அதிகளவு கால்வாய்கள், கண்மாய்கள் எண்ணற்ற அளவில் உள்ளன. ஆனாலும் கோடைக்காலங்களில் வறட்சியின் பிடியிலிருந்து மீளமுடியவில்லை. நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பது என்னவோ இந்தியாதான். குடிநீர், பாசனம் என அனைத்துக்கும் நிலத்தடி நீரை நம்பியிருக்கிறோம். சரியான நீர் மேலாண்மை இல்லாததால் நாடு முழுவதிலும் 40 சதவிகித நிலப்பகுதி வறட்சியால் வாடிவருகிறது. இந்த வறட்சிக்கு அரசியல் உட்பட பல்வேறு விஷயங்கள் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்நிலையில் இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி நீர்மேலாண்மை, வறட்சியை விரட்டியடித்ததில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறிய கிராமத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.
மகாராஷ்டிரா மாநிலம் தமிழகத்தைக் காட்டிலும் வறட்சி மிகுந்த மாநிலம் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், இந்த மாநிலத்தில்தான் நாம் சொன்ன நீர் மேலாண்மையில் முன்னேற்றமடைந்த கிராமம் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில அஹமத் நகர் மாவட்டத்தில் பார்னர் தாலுகாவுக்குள் 2000 மக்கள் வாழும் ஒரு சிறிய ஊர்தான் ராலேகான் சித்தி. இந்த ஊர் மக்கள் நாட்டுக்கே முன்னுதாரணமான காரியங்களை வெற்றிகரமாகச் செய்துமுடித்துள்ளனர். வருடத்தில் 50 -700 மி.மி மழை பொழியும் என்பதால் ஆண்டில் பெரும்பாலான நாள்கள் வறட்சியின் கையிலேயே இருக்கும். அந்த ஊரின் மண்ணின் தரமோ வேளாண்மைக்கு உகந்ததாக இல்லை. ஆனாலும் அங்கு வசித்துவரும் மக்களின் பிரதான தொழில் விவசாயம்தான். மண்ணின் வளத்துக்கு ஏற்ப பயிர்களை விளைவித்து அதை வைத்துப் பிழைத்து வந்தனர். இருப்பினும் வறட்சியின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
மக்கள் விழிபிதுங்கிப் போயிருந்த சமயம் அது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 1972-ம் ஆண்டு. கோடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே தண்ணீர்ப் பற்றாக்குறையால் கிராமத்தின் நிலைமை மிகமோசமடைந்து விடும். நிலத்தடி நீர் வற்றி, கோடைக்காலங்களில் கிணறுகள் வற்றிவிடும். குடிதண்ணீருக்காக பக்கத்து கிராமங்களுக்குப் பயணித்துக்கொண்டிருந்தனர். இதனால் ஒருகட்டத்தில் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் வேறுவழியின்றி புனே, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து அங்கு தொழிற்சாலைகளில் கூலிகளாகப் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். தண்ணீருக்காக எடுக்கப்பட்ட அரசின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. சில நேரங்களில் தண்ணீர்ப் பிரச்னை வேறுவிதமாக மாறி அங்கு கலவரங்கள், தீய பழக்க வழக்கங்களின் கூடாரமாக மாறியிருந்தது. ஆனால் இதெல்லாம் 1975-ம் ஆண்டு வரைதான்.
75-ம் ஆண்டுக்குப் பிறகு அந்த மக்களின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. அவை அனைத்தும் பின்னணியாக இருந்தவர் அன்னா ஹசாரே. ஆம், அவரின் சொந்த ஊர் இந்த ராலேகான் சித்திதான். ராணுவத்தில் டிரைவராகப் பணியாற்றிய இவர் அப்போதுதான் ஊர் திரும்பியிருந்தார். அவரின் முயற்சியால் ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டனர். கிராமத்தின் தலையாய சிக்கலான தண்ணீர்ப் பிரச்னை குறித்து விவாதித்தனர். தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு மழைநீர் சேகரிப்பு இல்லாததே காரணம் என்பதை அறிந்து திட்டங்கள் வகுத்தனர். அதை முதன்மையாகக் கருதி செயல்படுத்தவும் தொடங்கினர். அன்னா ஹாசரே என்பதற்காக அவரின் கருத்தையோ, திட்டங்களையோ இக்கிராமத்தினர் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை. எந்தப் புதிய திட்டமாக இருந்தாலும் சரி ஊர் மக்கள் எல்லாம் ஓரிடத்தில் கூடி விவாதித்து முடிவெடுப்பதே அவர்களது வழக்கம் என்கிறார்கள்.
விவாதிப்பது மட்டுமல்ல, கிராமத்துக்குத் தேவையான திட்டங்களை அவர்களே முன்னின்று வேலையும் பார்க்கத் தொடங்கினர். இதற்காக ஆகும் செலவை மக்களே ஏற்றுக்கொண்டனர். முதலில் மழைநீர் சேமிப்பை முன்னிறுத்தி வேலை பார்த்த மக்கள் பின்னர் ஊர் முழுவதும் சிறிய குட்டைகளை ஏற்படுத்தி கிராமத்துக்குத் தேவையான நீர்மட்டம் குறையாமல் இருக்கும்படி செய்தனர். மண் அரிப்பைத் தடுக்க புற்கள் வளர்ப்பது, மரங்கள் நடுவது, நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவது, கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்தல், சூரிய கதிர் சக்தியில் இயங்கும் தெருவிளக்குகள் என ஊர் மக்களின் முயற்சி கைகொடுக்க 1975-ம் ஆண்டு வறட்சியின் பிடியில் இருந்த ராலேகான் சித்தி இன்று விவசாயப் பொருள்கள் உற்பத்தியில் சாதனை படைத்துவருகிறது.
ஒரு காலத்தில் நிலத்தடி நீர் மட்டமே இல்லை என்ற சூழ்நிலையில் இருந்த அந்த கிராமம் தற்பொழுது வருடம் முழுவதும் ஆறரை அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் கிடைக்கிறது என்கிறது ஒரு சர்வே. கிராமத்தில் தனிநபர்களுக்கென ஆழ்துறை கிணறுகள் தோண்டுவதற்கு இங்கு அனுமதி கிடையாது. கிராமக் காடு என்ற திட்டம் (மூன்று நான்கு விவசாயிகள் சேர்ந்து பொதுவான நீர்ப்பாசன திட்டம்) செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் பாசனத்துக்கு ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுவது குறைக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை வளர்ச்சி, சொட்டு நீர்ப்பாசன முறை, மேம்பட்ட நீர்ப்பாசன வசதி, இவை அனைத்தும் இணைந்து இங்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
மூன்றில் இரண்டு குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்துவந்த கிராமத்தினர் இன்று முற்றிலும் தன்னிறைவு அடைந்து உபரி உற்பத்தி செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். ராலேகானை பின்பற்றியே இன்னும் சில மகாராஷ்டிரா கிராமங்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை, தண்ணீர்ப் பிரச்னைக்கு முன்னுரிமை என்று செயல்பட ஆரம்பித்துள்ளன. “நாங்கள் எந்தப் பணியில் இருந்தாலும் எங்கள் தலையாய கடமையாக நினைப்பது நிலம், நீர், வேளாண்மை போன்ற பிரச்னைகளைத்தான். கடுமையான வறட்சி அதனால் ஏற்பட்ட பிரச்னைகளைப் பார்த்துவிட்டோம். இனிமேலும் அது வரக் கூடாது என நினைத்துத்தான் வறட்சியை விரட்டி அடித்தோம்” என்கின்றனர் அந்த ராலேகான் மக்கள்.
நிலத்தடி நீர் மேலாண்மையில் நாட்டுக்கே வழிகாட்டியுள்ள இந்த ராலேகான் மக்களைப் பாராட்டுவதோடு நம் ஊரிலும் இப்படிச் செய்ய முன்வந்தால் வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்