மழை நீர் அறுவடை முறைகள்

மழை நீர் சேகரிப்பு ஆங்கிலத்தில் மழை நீர் அறுவடை (Rain Water Harvest) எனப்படுகிறது. விண்ணிலிருந்து மழைத்துளிகளை ஒரு துளியும் வீணாகாமல் சேகரிக்க வேண்டும் என்பதற்காகவே ‘அறுவடை’ என்ற சொல்லை பயன்படுத்துவதாக கருதலாம்.

மழை பெய்யும்போது அந்தந்த இடங்களில் சேகரிப்பதன் மூலம் நிலவளமும், மண்வளமும் பயனடையக் கூடும்.

மழை இல்லை என்றால் இவ்வுலகம் இல்லை என்பதை வள்ளுவர் ”நீரின்றி அமையாது உலகு,” என்றார்.

கட்டமைப்புகள்

நீர் சேகரிப்பு குழிகள், பள்ளங்கள். சமமட்ட பள்ளங்கள், பண்ணைக் குட்டைகள், கசிவு நீர்க்குட்டைகள், தடுப்பு அணைகள், சமமட்ட உழவு முறை ஆகியவை மழை நீர் அறுவடைக்கு தேவையான கட்டமைப்புகளாகும்.

நீர் சேகரிப்பு குழி

இவ்வகையில் மழை நீர் அறுவடை மிக எளிதில் மேற்கொள்ளக் கூடியது. குழிகளின் நீளம், அகலம், ஆழம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரணமாக நெடுஞ்சாலைகளின் சாலைக் கரைகளை பலப்படுத்தப்படும் குழிகள், பள்ளங்கள் போல அமைக்கலாம். இதன் நோக்கம் பெய்யும் மழை அதே இடத்தில் சேகரிக்கப்பட்டு பூமிக்குள் செல்ல ஏதுவாக வேண்டும். சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் உரக்குழிகள் இருப்பது போல அமைக்கலாம்.

சமமட்ட பள்ளம்

வேளாண் பொறியியல் துறையினரால் மண் அரிப்பினை தடை செய்வதற்கு அமைக்கப்படும் பள்ளங்களில் மழை நீர் சேகரிக்கப்படுவதால் ஈரப்பதம் பல நாட்கள் காக்கப்படுகிறது.

சமமட்ட உழவு

சரிவு பகுதியில் சம மட்ட உழவு மேற்கொள்வதால் மழை நீர் வேகமாக வருவது தடுக்கப்பட்டு தவழ்ந்து செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.

மழை நீர் பள்ளங்களில் விழுந்து கணிசமான அளவு பூமிக்குள் செல்வதால் ஈரப்பதம் காக்கப்படுகிறது. மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் இதனை அவசியம் பயன்படுத்த வேண்டும். மழை வரும் முன் இந்த உழவு மேற்கொள்வதன் நோக்கமே மழை நீரை சேகரிக்கத்தான்.

பண்ணைக்குட்டை

இவ்வகை கட்டமைப்புகள் மானாவாரி தரிசு நிலங்களில் அமைப்பது சிறந்தது.
பண்ணைக் குட்டைகள் பெரும்பாலும் தனிநபர் விவசாய நிலங்களில் அமைப்பதால் அதில் சேகரமாகும் நீர் பயிர்களுக்கும், மரக்கன்றுகளுக்கும் உயிர் காக்கும் தண்ணீர் வழங்க முடியும்.

திறமையும் வசதியும் உள்ள விவசாயிகள் பண்ணைக் குட்டைகள் பயன்படுத்தி மீன் வளர்ப்பு மேற்கொண்டு அதிக வருவாய் பெறலாம்.

மணல் சார்ந்த பகுதிகள் மற்றும் செம்மண் பகுதிகளில் குட்டையின் அடி மட்டத்தில் களிமண் பரப்பி மழைநீரை சேகரிக்கலாம்.

இதனால் நீர் உறிஞ்சுவது தடுக்கப்படுகிறது. 200 – 250 மைக்ரான் அடர்த்தியான பாலித்தீன் பையை உபயோகப்படுத்தி நீரை சேகரிக்கலாம். 100க்கு 100க்கு 10 அடி என்ற அளவிலும், சரிவு 1:15 என்ற அளவிலும் அமைக்கலாம். இயற்கையாகவே அமைந்துள்ள தாழ்வான பகுதியை தேர்ந்தெடுப்பது நல்லது. அதுவே வடிகாலாகவும் பயன்படக்கூடும்.

கசிவு நீர் குட்டை

இது பண்ணைக் குட்டையில் இருந்து வேறுபட்டது. இதில் சேகரிக்கப்படும் தண்ணீர் நேரடி உபயோகத்திற்கு பயன்படுத்தப் போவதில்லை. கால்நடைகள் பறவைகளை காக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் பயன்படுத்தப்படுகிறது.

இவை பொதுவான இடத்தில் அமைக்கப்படும். கசிவுநீர் குட்டைகளால் பாசன கிணறுகளின் நீர்மட்டம் உயரும். கசிவுநீர் குட்டைக்கும்,

கண்மாய்க்கும் பெரிய வித்தியாசம் என்னவென்றால் நீர் வெளியேற்றப்படும் மடை கிடையாது. நீர் மட்டம் முழு அளவுக்கு வந்தவுடன் வெளியேற்றக்கூடிய கலுங்கு மட்டும் இருக்கும்.

தடுப்பணைகள்

ஓடைகளின் குறுக்கே கட்டப்படும் கட்டுமானம் தடுப்பணைகள் ஆகும். இதன் நோக்கம் ஓடிவரும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி மண் அரிப்பை தடுக்கிறது. இங்கு நீர் நிறுத்தி வைப்பதால் நிலத்தடி நீர் வளம் பெருக்கப் படுகிறது.

பெய்யும் மழை நீர் 20 முதல் 30 சதவீதம் ஓட்டமாக சென்று வீணாகிறது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை குறைந்த செலவில் செய்து 10 சதவீதம் மழை நீரை தடுத்து நிறுத்தப்பட்டால் கூட நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
அத்துடன் மண் அரிமானம் தடுக்கப்பட்டு நீர்ப்பிடிப்பு திறன் மண்ணுக்கு ஏற்படுகிறது.

இதனால் மானாவாரி பகுதிகளில் அதிக மகசூல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடர்புக்கு 9443570289 .

– எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
விருதுநகர்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *