கூட்டுப் பயிர் மூலமாகக் கூடுதல் வருமானம் பெற முடியும் என்பதைப் புரிந்து கொண்ட விவசாயிகள் ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற ஒரு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நெல் பயிருக்கு இடையில் அசோலாவை சாகுபடி செய்து வருகிறார் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன்.
இவர், இயற்கை வேளாண்மை இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
“தொட்டியில் அசோலாவை வளர்த்து, மாடுகளுக்குக் கொடுக்கறதை ஐந்து வருடமாக செய்து கொண்டிருக்கேன். அசோலாவை மாடுகளுக்குத் தீவனமாக கொடுக்கம் போது அதுங்களோட உடல் ஆரோக்கியமாக இருக்கு, நல்ல முறையில் சினை பிடிக்கிறது, பாலோட அளவும் தரமும் அதிகமாகிறது. இந்த வருடம் ஒரு ஏக்கரில் ஏ.டி.டி., 37 ரக நெல்லுக்கு இடையில் அசோலாவைத் தூவிவிட்டேன். அடர்த்தியா வளர்ந்து கிடக்கு. தினம் 50 கிலோ அசோலாவை எடுத்து மாடுகளுக்குத் தீவனமாக கொடுத்துகிட்டிருக்கேன். இந்த ஒரு மாதத்தில் ஒன்றரை டன் அளவுக்கு அசோலாவை எடுத்திருக்கேன்” என்ற சொன்னவர், நெல் வயலில் அசோலாவை வளர்க்கும் விதம் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.
7 –ம் நாள் விதைப்பு!
- நெல் சாகுபடி செய்யும் அனைத்து வயல்களிலும் அசோலாவை சாகுபடி செய்யலாம்.
- இயற்கை விவசாயம் செய்யும் வயல்களில் இதன் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.
- நாற்று நடவு செய்த 7-ம் நாள் வயலில் அசோலாவைத் தூவ வேண்டும். இதற்கு அளவு கிடையாது, அதிகபட்சம் ஏக்கருக்கு 200 கிலோ வரை தூவலாம். (இவர் ஏக்கருக்கு 5 கிலோ தூவி உள்ளார்.)
- பயிர்களுக்கு இடைவெளியில் கிடைக்கும் காற்று, சூரிய ஒளியை பயன்படுத்திக் கொண்டு அசோலா வேகமாக வளரும்.
- நிலத்தில் பச்சைப் போர்வை போர்த்தியது போல, நிலம் முழுவதும் அசோலா படர்ந்து விடும்.
- 20-ம் நாளில் இருந்து ஒரு ஏக்கரில் தினமும் 50 முதல் 100 கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம்.
களை கட்டுப்பாடு :
- அசோலா, நிலம் முழுவதும் படா்ந்து விடுவதால், களைகள் குறைவாக இருக்கும்.
- ஒற்றை நாற்று (ராஜராஜன்-1000) முறையில் நடவு செய்த வயலில் 15 –ம் நாளில் இருந்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை கோனோவீடரை உருட்ட வேண்டும்.
- அப்படி உருட்டும் போது, கோனோவீடர் சக்கரத்தில் அகப்படும் அசோலாவையும் அழுத்தி விடலாம்.
- இதனால் மண்ணுக்கு அதிக தழைச்சத்து கிடைக்கும். தூர்கள் அதிக அளவில் வெடித்து வெளிவரும்.
- சாதாரண முறையில் நடவு செய்த நிலத்தில், அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் களையைக் கையால் எடுத்துவிட்டு, அசோலாவை, மண்ணுக்குள் மிதித்துவிட வேண்டும்.
- நடவு செய்த 20 – ம் நாளில், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் உயிர் அமுதத்தை கலந்து, தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு 10 டேங்க்).
- உயிர் அமுதம் பயிர் வளர்ச்சிக்குத் தேவையானச் சத்துக்களைக் கொடுப்பதோடு, பூச்சித் தாக்குதலையும் குறைக்கிறது.
- 30-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்கிற விகிதத்தில் மூலிகைப் பூச்சி விரட்டியை கலந்து தெளிக்க வேண்டும்.(ஏக்கருக்கு 10 டேங்க்)
- 40 –ம் நாளில் பாசன நீரோடு, ஏக்கருக்கு 20 லிட்டர் பஞ்சகவ்யாவையும், 50-ம் நாள் பாசனநீரோடு 20 லிட்டர் உயிர் அமுதத்தையும் கலந்துவிட வேண்டும்.
- இதே போல், 90-ம் நாள் வரை, 10 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா, உயிர் அமுதம் என மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும்.
குறையும் செலவு .. கூடும் மகசூல்!
- அசோலாவை நெல் வயலில் வளர்க்கும் போது, களை கட்டப்படுகிறது.
- நீர் ஆவியாவது குறைகிறது.
- வழக்கமாக வாரம் ஒரு பாசனம் செய்பவர்கள், 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு பாசனம் செய்தால், போதும்.
- அசோலா, காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையைச் செய்வதால், ரசாயன முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு 30 சதவிகிதத்துக்கும் மேல் உரச் செலவு குறைகிறது.
- நெல் பயிரின் வளர்ச்சியிலும் அசோலா முக்கிய பங்காற்றுகிறது.
- சாதாரணமாக 15 தூர்கள் வெடிக்கும் நிலத்தில், 40 தூர்கள் வரை வெடிக்கும்.
- இதன் காரணமாக வழக்கமான மகசூலைவிட 10 முதல் 20 சதவிகிதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
- நெல் அறுவடை முடிந்தவுடன், தனியாகவோ அல்லது நெல் வயலின் ஒரு ஓரத்திலோ வாய்க்கால் போல் எடுத்து, அதில் தண்ணீர் விட்டு அசோலாவை நெல் பயிருக்கு இடையில் தூவி விட்டா போதும்.
- அதுக்குனு தனியா எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. தானாவே வளர்ந்து வந்துவிடும்.
- நெல் மகசூலைக் கூட்டி, திவனச் செலவைக் குறைத்து, பாலோட அளவைக் கூட்டினு ஒரு சாதனையே படைக்கிற இந்த அசோலா.. உண்மையிலேயே விவசாயிகளுக்குக் கிடைத்த அமுதசுரபி.
“என்கிட்ட இருக்கிற 5 மாடுகளுக்கு தினம் 5 கிலோ வீதம் அசோலாவைக் கொடுக்கிறேன். இதனால் ஒரு மாட்டுக்கு 20 ரூபாய் கணக்கில் 5 மாட்டுக்கும் சேர்த்து, 100 ரூபாய் திவனச் செலவு மீதமாகிறது. ” என்கிறார் அவர்
அதோடு மண்புழு உரம் தயாரிக்கவும் அசோலாவைப் பயன் படுத்துகிறார் இவர்.
தொடர்புக்கு : புருஷோத்தமன்
அலைபேசி : 09894784863
நன்றி: பசுமை விகடன், தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Hello,
Naan Thiruvarur maavattathil vasikiren, enakum azolla valarka aasai. En paguthiyil Azolla engu kidaikum. Contacts ethum kidaithaal aarambathiriku uthavum. En moble no = 9884910020
Nandri.
Ramadurai.D