சோழர் காலம் முதல் இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் இருந்துவரும் நெல் ரகம் சிவப்புக் கவுணி. விவசாயத் தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கு இந்த ரகத்தை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் அரிசியை ஒரு வேளை உட்கொண்டால், நாள் முழுவதும் களைப்பில்லாமல் பணி செய்ய முடியும்.
அற்புத ரகம்
அது மட்டுமில்லாமல் சுவையான பலகாரங்கள் செய்ய உதவும் இந்த நெல் வகை, சிவகங்கை மாவட்டத்தைத் தாயகமாகக் கொண்டது. தமிழகம் முழுவதும் மானாவாரி பகுதிகளில் பயிரிடப்படுகிறது. செம்மண் பகுதியிலும் அதிக மகசூல் தரக்கூடியது. நேரடி விதைப்புக்கு ஏற்ற இந்த ரகம், 140 நாள் வயதுடையது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளர்வதுடன் களைகளைக் கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது.
ராசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் இந்த ரகத்துக்குத் தேவையில்லை. அப்படிப் பயன்படுத்தினால் கதிர் முற்றுவதற்கு முன்பாகவே சாய்ந்துவிடும். ஏக்கருக்கு 25 மூட்டை மகசூல் குறையாமல் கிடைக்கும். 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ. 1250க்கு விலை போகிறது. இப்படிக் குறைந்த செலவில் அதிக மகசூலும் லாபமும் பெறலாம்.

கவுணி பலகாரங்கள்
சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் இனிப்புப் பலகாரம் செய்வதற்குச் சிவப்புக் கவுணி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செட்டிநாட்டு சமையலில் இடம்பெறும் சிறப்பு இனிப்பு, கவுணி அரிசி இனிப்புதான். மங்களகரமான நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவசியம் இடம்பெறும். திருமணமான புதுத் தம்பதிகளுக்குத் தரப்படும் நீண்ட உணவுப் பட்டியலில் சிவப்புக் கவுணி அல்வா முக்கியமானது. முஸ்லிம் வீட்டுத் திருமணப் பிரியாணி செரிப்பதற்காக உடன் தரப்படும் ஒரு வகை இனிப்பு, சிவப்புக் கவுணி அரிசியில் செய்யப்படுகிறது. பிறந்த 16-ம் நாள் காப்பரிசி, காது குத்துக்குக் காப்பரிசி ஆகியவற்றுக்கு இந்த அரிசியே பயன்படுத்தப்படுகிறது.
தாய் சேய் நலம்
சிவப்புக் கவுணி மருத்துவக் குணங்கள் நிறைந்தது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்கள் இந்த அரிசியைத் தொடர்ந்து உண்பதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம் கிடைக்கும். தற்போது பசுமை அங்காடிகளில் இந்த ரகம் கிடைக்கிறது. புழுங்கல் அரிசியைவிடப் பச்சரிசி சிறந்தது.
நெல் ஜெயராமனைத் தொடர்பு கொள்ள: 09443320954.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்