இயந்திர நடவு முறையில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

செலவு குறைவு, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பயன்களால், இயந்திர நடவு முறையில், நாற்று நட நெல் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 200 கிராமங்களில், விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பணியாட்கள் பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு, உரிய நேரத்தில் உரம் கிடைக்காமை, பருவ காலத்தில மழை பொய்த்து போதல் என, பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

நடவு பணிக்கு…

 • மேற்கண்ட கிராமங்களில் சம்பா, குறுவை என, ஆண்டுக்கு 26 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.
 • உள்ளூரில் ஆட்கள் கிடைக்காமல், ஆந்திர மாநிலத்திலிருந்து ஆட்களை வரவழைத்து நடவு பணிகளையும், இயந்திரம் மூலம் அறுவடை பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 • ஒவ்வொரு பருவத்தின் போது, ஒரே நேரத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ளும்போது, கூலி ஆட்களுக்கு கிராக்கி ஏற்படுகிறது.

இயந்திரத்தில் நடவு…

 • இயந்திரம் மூலம் அறுவடை பணிகளை மேற்கொள்வதால், பணிகள் எளிதில் முடிவடைவதுடன், பணியாட்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
 • இதேபோல் நடவு பணிகளுக்கும், தற்போது இயந்திர உதவியை விவசாயிகள் நாடி வருகின்றனர். தற்போது, பொன்னேரியை சுற்றியுள்ள தேவராஞ்சேரி, மேட்டுப்பாளையம், அரசூர், மூலத்தாங்கல், நரசிங்கமேடு, நத்தம், சின்னகாவயம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் “பின் சம்பா’ பருவத்திற்காக விவசாய பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
 • அதில், இயந்திரம் மூலம் நடவு பணிகளை மேற்கொள்ளும் புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
 • இதற்கென, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நடவு இயந்திரத்தை, தனியார் நிறுவனம் தயாரித்து விவசாயிகளுக்கு உதவி உள்ளது.
 • இது தட்டச்சு இயந்திரம் (டைப் ரைட்டிங் மிஷின்) செயல்படுவதுபோல், இயங்குகிறது.
 • இது, சாதாரண நாற்றங்கால் முறையில் பயிரிடப்படாமல், அதற்கென பிளாஸ்டிக் டிரேக்களில் மணல், உரம் போன்றவற்றை போட்டு, அதில் விதை நெல் தூவி, நாற்றங்கால் விடப்படுகிறது.
 • விதைக்கப்பட்ட நாளில் இருந்து, 15 நாட்கள் கழித்து, வளர்ந்து உள்ள நெல் நாற்றை, பிளாஸ்டிக் டிரேயுடன் எடுத்து, இயந்திரத்தின் பின்புறம் சரிவாக அடுக்கப்படுகிறது.
 • டிராக்டர் போல் உள்ள இந்த இயந்திரம், உழவு பணிகள் செய்யப்பட்ட வயலில், சுற்றி வரும்போது, பின்னால் உள்ள இயந்திரத்தில் இருந்து, நாற்றுகள் நிலத்தில் நேர்த்தியாக பதியப்படுகின்றன.
 • இதனால், வேலை ஆட்கள் தேவையின்றி, குறைந்த நேரத்தில் அதிக நிலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செலவினம் குறைவுசாதாரண நடவு முறையில், நடவு பணிகளுக்கு, விதை நெல், உழவு பணி, நடவு பணி என, ஒரு ஏக்கருக்கு 9,000 ரூபாய் செலவிட வேண்டி உள்ளது.
 • இயந்திரம் மூலம் மேற்கொள்ளும் நடவு பணிக்கு, 6,500 ரூபாய் இருந்தால் போதுமானது.
 • சாதாரண நடவு பணிக்கு, ஒரு ஏக்கருக்கு நாற்று விட, 40 முதல், 50 கிலோ வரை விதை நெல்லும், நடவு கூலி, 2,800 ரூபாயும் செலவிடவேண்டும்.
 • இயந்திர நடவு பணிக்கு விதை நெல், வாடகை என, மொத்தமாக, 3,500 ரூபாய் இருந்தால் போதுமானது. செலவினம் குறைவு என்பதாலும், மகசூல் அதிகமாக கிடைக்கும் என்பதாலும், விவசாயிகள் தற்போது இயந்திர நடவு முறையில், “ஏடிடி43, 45′ ரக நெல்லை பயிரிட்டு வருகின்றனர்.
 • இதுகுறித்து, பொன்னேரி பகுதி விவசாயிகள் கூறுகையில், “”ஆந்திர மாநில கூலியாட்கள், அறுவடை இயந்திரம் இல்லை எனில் விவசாயமே இல்லை. நடவு பணிகளுக்கும் இயந்திரம் கிடைத்திருப்பது, விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்,” என்றார்.
 • மேலும், “”பணியாட்கள் இன்றி இயந்திரம் மூலம் நடவு பணிகள் மேற்கொண்ட சில விவசாயிகள், அதிக மகசூல் கிடைக்க பெற்றதை அறிந்தோம். அதற்காக தற்போது, நாங்களும் இயந்திர நடவு முறைக்கு ஆர்வம் காட்டி வருகிறோம்,” என்று கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *