காட்டு யானம் எனும் பாரம்பரிய நெல் ரகம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகள். இங்கு நெற்பயிர் சாகுபடி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நெற்பயிர் சாகுபடி கடந்த காலங்களில் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தனர். இதன் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லை பயன்படுத்தும்போது எவ்வித நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும் பழங்காலங்களில் நெல் சாகுபடியின்போது முழுக்க முழுக்க இயற்கை உரங்களையும், கால்நடைகளையும் பயன்படுத்தி சாகுபடி செய்தனர். நோய் தாக்குதலின் போது எவ்விதமான பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாமல் இருந்தனர். பூச்சி தாக்குதலும் குறைவாக இருந்தது.
தற்போது சாகுபடி செய்யும் முறைகள் அனைத்துமே விஞ்ஞான முறை என்ற பெயரில் அதிக அளவில் செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. நடவு செய்வதற்கு முன்பு நாற்றங்கால் தயார் செய்யும்போதே உரங்களை பயன்படுத்துகின்றனர். இவை அறுவடை செய்யும் வரை பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அரிசி உணவு சாப்பிடுபவர்களுக்கு புதிய புதிய நோய்கள் ஏற்பட்டு வருகிறது.
இவற்றை நிவர்த்தி செய்ய தற்போது பல்வேறு இடங்களில் பாரம்பரிய நெல் சாகுபடி முறையினையும், பழங்கால நெல் ரகங்களையும் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து விற்பனை செய்யும் நிலைக்கு வந்துள்ளனர். இதற்கு மக்கள் இடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
இயற்கை உணவு சார்ந்த மருத்துவங்களையே பொதுமக்கள் அதிக அளவு நாடிச் செல்கின்றனர். தற்போது சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு விதமான புற்று நோய்கள் ஏற்படுகிறது. இவற்றை நிவர்த்தி செய்யவே பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்படுகிறது.
காட்டு யானம் என்ற பாரம்பரிய நெல் ரகத்தை அழிஞ்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்ற விவசாயி திருத்துறைபூண்டியில் ஒரு விவசாயி பயிர் செய்ததை பார்வையிட்டு தற்போது தனது நிலப்பரப்பில் பயிரிட்டுள்ளார்.

  • இந்த நெல் ரகம் 7 அடி வரை உயரம் வளரக்கூடியது. ஒவ்வொரு கதிரிலும் நெல் மணிகள் கொத்துக் கொத்தாக வளரும்.
  • ஏக்கருக்கு 5 கிலோ வரை விதை நெல் தேவைப்படுகிறது. 18 நாட்களில் நாற்று தயாராகிவிடும்.
  • ஒரு அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 165 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும்.
  • உரங்கள் தேவையில்லை. அதிக செலவும் இருக்காது.
  • ஒரு ஏக்கருக்கு 20லிருந்து 25 மூட்டை நெல் கிடைக்கும். ஒரு மூட்டை ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
  • களை எடுப்பது குறைவு, மழை, வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது.
  • நெற்பயிரின் தண்டு, இலை பகுதி வீரிய வளர்ச்சியுடன் உள்ளதால் பூச்சி நோய் தாக்குதல் ஏற்படாது. இந்த ரக அரிசி எளிதில் ஜீரணமாக கூடியது.
  • உடல் நலத்தை காக்கும் வலிமையுடையது. ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், நரம்புகளை பலப்படுத்தல் போன்ற மருத்துவ குணம் கொண்டது.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த நெல் ரகத்தை இந்த பகுதியை சேர்ந்த விவசாயி பயிரிட்டுள்ளது இந்த பகுதி மக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “காட்டு யானம் எனும் பாரம்பரிய நெல் ரகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *