குறுவை சாகுபடியில் உர மேலாண்மையை கடைப்பிடித்து அதிக மகசூல் பெற வேண்டுமென வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.
- தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி நடந்து வருகிறது. கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 மெட்ரிக் டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் அல்லது 2.5 டன் தழை உரமிட வேண்டும். தழை உரம் மக்க குறைந்தது ஒரு வாரம் இடைவெளி விட வேண்டும்.
- குறுவை நடவு வயலில் 4 பொட்டலம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை 25 கிலோவை நன்று தூள் செய்த மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு ஏக்கரில் சீராகத்தூவ வேண்டும். அதேபோல் ஒரு ஏக்கருக்கு 4 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தையும் தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு தழைசத்து 50 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ அளிக்க வேண்டும். மணிச்சத்து 20 கிலோவையும் அடியுரமாக இட வேண்டும். சாம்பல் சத்தில் 10 கிலோவை அடியுரமாக நட்ட 28ம் நாளில் எஞ்சியுள்ள 10 கிலோவையும் இட வேண்டும். நட்ட 14ம் நாளில் 10 கிலோ தழைச்சத்து, 28ம் நாளில் 15 கிலோ தழைச்சத்து, 42ம் நாளில் 15 கிலோ தழைச்சத்து, 63வது நாளில் 10 கிலோ தழைச்சத்து என்று தழைச்சத்துகளை பிரித்து இட வேண்டும்.
- அடியுரம் மற்றும் முதல் மேலுரமாக இடும் தழைச்சத்தாகிய யூரியாவை ஜிப்சம் மற்றும் வேப்பம்புண்ணாக்கு 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும். வேம்பு கலந்த யூரியாவை பயன்படுத்தினால் 5 முதல் 10 சதவீதம் வரையிலான தழைச்சத்து உட்கொள்ளும் திறனை அதிகரிக்கலாம்.
- சிங்சல்பேட் (ஏக்கருக்கு) 10 கிலோ நடவுக்கு முன்னும், ஜிப்சம் ஏக்கருக்கு அடியுரமாக 200 கிலோவும் இட வேண்டும். தற்போது திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (ஏக்கருக்கு 350 மிலி), பாஸ்போ பாக்டீரியா (ஏக்கருக்கு 350 மிலி) இவை அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கிறது.
- தழைச்சத்து தேவைக்கு அதிகமாக அளிக்கும்போது அது பலவித நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். எனவே மண் பரிசோதனை படியும், பச்சை வண்ண அட்டை உபயோகத்தை வைத்து உரிமிட்டு மண்வளத்தை பாதுகாத்து உயர் மகசூலை பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்