கடந்த மாதம் வெள்ள பாதிப்புகள் கேரள மாநிலத்தைப் புரட்டிப்போட்டது பலருக்கும் நினைவிருக்கலாம். வரலாறு காணாத அளவிற்கு மழை பதிவானது. அவற்றில் பாதிக்கப்பட்டது மக்களும் கட்டங்களும் மட்டுமல்ல; அவற்றுடன் சேர்ந்து கேரள விவசாய மக்களின் வாழ்வாதாரமான விவசாயப் பயிர்களும் அதிகமான சேதங்களைக் கண்டன.
தமிழ்நாட்டில் ஒரு புயலுக்கே அத்தனை வாழைகளும், மரங்களும், நெல் போன்ற விவசாய பயிர்களும் வீழ்ந்தது நினைவிருக்கலாம். இதை அப்படியே கேரளாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயமாக நூற்றுக்கு எண்பது சதவிகித விவசாய பயிர்கள் சேதத்தைச் சந்தித்திருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சென்ற ஒரு நெல் வகை மட்டும் கேரள வெள்ளத்தை ‘அசால்ட் சேது’ போல எதிர்த்து நின்றிருக்கிறது. அந்த நெல்லின் பெயர், ‘சிகப்பி’.
சிகப்பி நெல் ரகமானது, சி.ஆர்.1009 என்கிற நெல் ரகத்தில் இருந்து வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய மரபணுவைச் சேர்த்து, பாரம்பர்யப் பயிர் இனவிருத்தி மூலம் உருவாக்கப்பட்டது. எவ்வளவு பெரிய வெள்ளத்திலும் தேங்கி நிற்கும் நீரை சிகப்பி ரகம் எதிர் கொண்டு தாக்குப்பிடிக்கும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2013-ம் ஆண்டு நடந்த சர்வதேச பயிற்சி பட்டறையில் ‘சிகப்பி’ ரக நெல் அறிமுகப்படுத்தப்பட்டது. அண்ணாமலைப் பல்லைக்கழகத்தின் மறைந்த வேந்தர் எம்.ஏ.எம் ராமசாமி செட்டியாரின் மனைவி பெயரே இந்த ரகத்திற்கு வைக்கப்பட்டது.
இந்த ரக நெல்லானது sub-1 (submergence tolerant gene) என்னும் மரபணுவும் பாரம்பர்ய CR1009 (பொன்னி) ரகத்தின் கலப்பு. CR1009 ரகம் நான்கு நாட்கள் மட்டுமே வெள்ளத்தைத் தாங்கும். ஆனால் சிகப்பி ரக பயிர் 10 நாட்கள் வரை வெள்ளத்தால் வரும் பாதிப்புகளை தாக்குப் பிடிக்கும். மேலும் 70-80 சதவிதம் மகசூலை 145-150 நாட்களுக்குள் தரும். இதனை சம்பா பருவத்தில் விதைப்பது சிறந்தது.
இந்த ரகம் அறிமுகமாகிய உடனே நீர்ப்பாசன வசதியுள்ள கடலூர் மாவட்ட விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டது. அப்போதே கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பழையன்னூர் வட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சிகப்பி நெல் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வந்தது. வழக்கம் போல அதிக மழைப்பொழிவு இருக்கும் காலங்களில் கேரள விவசாயிகள் சிகப்பியை பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் அப்படித்தான் விதைத்திருக்கின்றனர்.
அதன்பின்பு கேரளாவை தென்மேற்கு பருவமழை கபளீகரம் செய்யத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தேங்கிய மழைநீர் விவசாயிகளின் விளைநிலங்களையும் பாதித்தது. வயலில் விளைந்த நெல் முழுவதும் நிச்சயம் மூழ்கி அழுகியிருக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், வெள்ளம் ஓய்ந்த பின்னர் வயலைப் பார்த்த விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.
வெள்ளத் தண்ணீர் வயல் முழுவதும் நிறைந்திருக்கிறது. ஆனால், சிகப்பி நெல் பயிர்கள் மட்டும் சாயாமல் அப்படியே இருந்திருக்கிறது. அதனைக் கண்டு விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்திருக்கிறார்கள். சிகப்பி நெல் பயிரிட்ட விவசாயிகளை வெள்ளப் பாதிப்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரு நெல்ரகம், பேரிடர் சமயத்தில் கேரள விவசாயிகளுக்குக் கைகொடுத்திருக்கிறது.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்