திருந்திய நெல் சாகுபடி நாற்றங்கால் அமைப்பது குறித்து கோபி வேளாண்மை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோபி வட்டார விவசாயிகள் அதிக அளவில் இம்முறையில் நெல் நடவு செய்கின்றனர். திருந்திய நெல் சாகுபடி நாற்றங்கால் அமைப்பது முக்கியமான தொழில் நுட்பமாகும்.
- இள நாற்றை நடுவதால் விரைவில் நிலை கொண்டு, நாற்று விரைந்து வளரும். வேர்களின் வளர்ச்சி அதிகமாகிறது. அதிக தூர்கள் வெடிக்கின்றன.
- இலைகள் அறுவடை வரை பசுமையாக இருப்பதால் சூரிய ஒளிக்சேர்க்கை கடைசி வரை நன்றாக இருக்கிறது.
- இம்முறையில் ஒரு ஏக்கருக்கு இரண்டு அல்லது மூன்று கிலோ விதைகளே போதுமானது.
- நாற்றங்கால், நீர் நிலைக்கும், நடவு வயலுக்கும் அருகில் இருப்பது நல்லது.
- ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 40 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலம் போதுமானது.
- உழுது சமன்படுத்தப்பட்ட நிலம் நான்கு அடி அகல பாத்திகளாக ஒன்றரை அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்.
- இரண்டு அங்குலம் ஆழத்துக்கு மண்ணை எடுத்து இருபுறமும் உள்ள பாத்திகளின் பரவலாக விசிறி சமன் செய்ய வேண்டும்.
- பாத்திகளின் நீளம் வயல் அமைப்புக்கு ஏற்ப இருக்கலாம்.
- சிறந்த முறையில் நீர்பாசனம் செய்ய ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.
- களிமண் விகிதம் அதிகமாக இருந்தால் மணல் கலக்கலாம். அதிக மணல் இருப்பின் சற்று களிமண் கலக்கலாம்.
- விதையினை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, வடிகட்டி, ஒரு நாள் நிழலில் முளை கட்டிய விதையை சீராக தூவி விட வேண்டும்.
- நெல் விதை மீது சீராக மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்த மண்ணை தூவிய பின் நீர் தெளிக்க வேண்டும்.பூ வாளியால் நீர் தெளிப்பது நல்லது.
- அதிக வெயிலில் இருந்து நாற்றை பாதுகாக்க நாற்றங்காலை வைக்கோல் மூலம் மூடி வைப்பது மிகுந்த பலனை தரும்.
- ஒரு வாரத்துக்கு பின் நாற்று வளர்ந்துவிட்ட நிலையில் வாய்க்காலில் நீர் நிரப்பும் போது, நீர் நாற்றின் அடிப்பகுதியை நனைத்து தேவையான வளர்ச்சியை தரவல்லதாக அமையும்.
- ஒரே ஒரு நாற்றை எடுத்து மண்ணின் மேற்பரப்பில் மேலாக நடவு செய்ய வேண்டும். 22.5க்கு 22.5 செ.மீ., நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்ய கயிற்றில் ஒவ்வொரு 10 அங்குலத்துக்கும் அடையாளம் வைத்து நடவு செய்யலாம்.
- நாற்றுகள் பாத்திகளில் இருந்து பறித்த 30 நிமிடங்களில் நடவு செய்ய வேண்டும்.
- நாற்றுகளை அசோஸ்பைரில்லம் மற்றும் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் கலவையில் வேரினை 20 நிமிடம் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
- மண் மறைய நீர் கட்டுதல் வேண்டும். 10 நாட்களுக்கு தொடர்ந்து செய்தல் வேண்டும். திருந்திய நெல் சாகுபடி மூலம் குறைந்த விதை அளவை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைதம்பி தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்