கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கார் மற்றும் முன் சம்பா பட்டத்தில் நெல் நடவு பணி தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்து இரட்டிப்பு மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
- தற்போது நெல் நடவு மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்து இரட்டிப்பு மகசூல் பெறலாம்.
- திருந்திய நெல் சாகுபடி முறை என்பது நடைமுறையில் இருந்து வரும் நெல் சாகுபடி முறைகளில் சில மாற்றங்களை கொண்ட புதிய முறையாகும்.
- திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் நடவு வயலை இடை உழவுக்கு பின் நான்கு புறமும் ஏற்றதாழ்வின்றி நீர் சமமாக நிற்கும் வண்ணம் சரியான முறையில் வயலை சமப்படுத்த வேண்டும்.
- மண் பரிசோதனை அட்டவணைப்படி உரமிடுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் பொது பரிந்துரையாக, 50 சதம் தழைச்சத்தையும், முழு அளவு மணிச்சத்தையும் மற்றும் 50 சதம் சாம்பல் சத்தையும் அடியுரமாக இடவேண்டும்.
- நாற்று விட்டு, 13 முதல் 15 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவுக்கு உபயோகிக்க வேண்டும்.
- நாற்றுகளை பிரித்து எடுத்து, 25 செ.மீ இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக 3 செ.மீ., ஆழத்திற்கு மிகாமல் மார்கர் கருவியினை பயன்படுத்தி மேலாக நடவு செய்ய வேண்டும்.
- நீர் மறைய நீர் கட்டி மண்ணின் மேல் பரப்பில் லேசான வெடிப்புகள் தோன்றிய பின் மறுபடியும் நீர் பாய்ச்ச வேண்டும்.
- இந்த முறையை பஞ்சு கட்டும் வரை கையாள வேண்டும். அதன் பின் அறுவடைக்கு முன்பு வரை மண்ணை காயவிடாமல் நீர் கட்ட வேண்டும்.
- மண்ணின் மேற்பரப்பில் லேசான வெடிப்புகள் ஏற்பட்டால் காற்றோட்டம் மேம்படுவதுடன், 30 முதல் 35 சதவீதம் நீரும் சேமிக்கப்படும்.
- திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் நடவு செய்த, 10,20, 30 மற்றும் 40வது நாளில் கோனோவீடர் கருவியை கொண்டு பயிர்களுக்கு குறுக்கும் நெடுக்குமாக உருளவிடவேண்டும்.
- இதனால் களைகள் கட்டுப்படுத்துவதுடன் அவை அந்த வயலுக்கே இயற்க்கை உரமாக மாற்றப்படுகிறது.
- கோனோவீடர் கருவி மண்ணை புரட்டி விடுவதால் காற்றோற்றம் கிடைக்கிறது.பழைய வேர்கள் அறுபட்டு புதிய வேர்கள் உருவாக்கப்படுகிறது.
- திருந்திய நெல் சாகுபடி மூலம் மகசூல் அதிகரிப்பது விவசாயிகள் கோனோவீடர் களை கருவியினை எத்தனை முறை பயன்படுத்துகிறார்களோ அதனை பொறுத்து அமைக்கிறது.
- குறைந்தது 3 முறையாவது கோனோவீடர் கருவியை விவசாயிகள் பயன்படுத்த ணேவ்டும்.
- எனவே, கார் மற்றும் முன் சம்பா பட்டத்தில் நெல் நடவு செய்யும் அனைத்து விவசாயிகளும் தவறாது திருந்திய நெல் சாகுபடி முறையை கையாண்டு இரட்டிப்பு மகசூல் பெறலாம்.
இவ்வாறு வேளாண் இணை இயக்குனர் நாச்சியப்பன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்