திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் மற்றும் குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலையத் துணை இயக்குநர் வ. சாந்தி ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
- திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றங்கால் அமைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதுமானது.
- இம்முறையில் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது.
- திருந்திய நெல் சாகுபடி நாற்றங்காலை வயலின் ஓரத்தில் 5 மீட்டர் அளவுள்ள 8 மேடைகளை அப்பகுதி மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும்.
- இதையடுத்து அந்த மேடைகளில் மக்கிய தொழு உரம் இடவேண்டும்.
- நாற்று மேடை ஒன்றுக்கு 95 கிராம் வீதம் 8 நாற்று மேடைகளுக்குத் 760 கிராம் டிஏபி உரத்தை பொடி செய்து மணலுடன் கலந்து நாற்று மேடைகளில் நிரப்ப வேண்டும்.
- நிலப்பரப்புக்கு மேல் 5 செ.மீ., உயரமேடை அமைத்த பின் மேடையின் மேல் பிரித்த உரச் சாக்குகளையோ அல்லது பாலித்தீன் தாளையோ பரப்பிவிட வேண்டும். அதன் மீது 4 செ.மீ., உயரத்திற்கு மண்ணைப் பரப்பி அதனுடன் மக்கிய தொழு உரம் கலக்க வேண்டும்.
- 1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற உயிரியல் பூஞ்சானக்கொல்லி கலந்து விதைநேர்த்தி செய்யவும்.
- இவ்விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்துப் பின்னர் வடிகட்டி இருட்டறையில் 24 மணிநேரம் வைத்திருந்து முளைகட்ட விட வேண்டும்.
- முளைகட்டிய விதைகளை நாற்று மேடையில் பரவலாக விதைக்க வேண்டும். பூவாளி கொண்டு நாற்று மேடைகளில் நீர் தெளிக்க வேண்டும்.
- நாற்றின் வளர்ச்சி குறைவாக இருந்தால் 50 கிராம் யூரியாவை 10 லி., தண்ணீரில் கரைத்துப் பூவாளி கொண்டு தெளிக்கலாம்.
- 14 நாட்கள் வயதுள்ள நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்தெடுத்து நடவு வயலுக்குக் கொண்டு செல்வது சிறந்தது.
- இவ்வாறு திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றங்கால் அமைத்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்